காலை 9 மணி, மும்பை ஆசாத் மைதானத்தில் இளம் கிரிக்கெட் வீரர்கள் ஒரு வேடிக்கையான வார இறுதி ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். விளையாட்டு செல்லச் செல்ல அடிக்கடி மகிழ்ச்சியும், வேதனையும் கலந்த குரல்கள் எழுகின்றன.
வெறும் 50 மீட்டர் தூரத்தில், மற்றொரு 'விளையாட்டு' 5,000 பங்கேற்பாளர்களுடன் அமைதியாக செல்கிறது. ஏராளமான பங்கேற்பாளர்களுடன் இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் மும்பையின் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) - சுகாதாரப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஒரு முடிவில்லை. பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கிய போராட்டத்தின் முதல் வாரத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரபரப்பான சாலையருகே, 30-களின் முற்பகுதியில் உள்ள ஒரு ஆஷா பணியாளர் தரையில் அமர்ந்திருக்கிறார். கடந்து செல்பவர்கள் உற்று நோக்குவதை காணாமல் தவிர்த்து பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்க்கிறார். துப்பட்டா மற்றும் ஒரு சதார் கொண்டு அவரை பெண்கள் குழு ஒன்று கூடி மூடிக்கொள்ள, அவர் விரைவாக தனது ஆடைகளை மாற்றுகிறார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, மதிய உணவு நேரத்தில், சுட்டெரிக்கும் நண்பகல் வெயிலில், ஆஷா பணியாளர்கள் தங்கள் சக ஊழியரான ரீட்டா சாவ்ரேவைச் சுற்றி கூடினர். ஒவ்வொருவரும் காலி டிபன் பாக்ஸ்கள், தட்டுகள் மற்றும் மூடிகளை வைத்திருந்தனர். 47 வயதான அவர், வீட்டில் தயாரித்த உணவை பரிமாறும்போது அவர்கள் பொறுமையாக தங்கள் முறைக்காக காத்திருந்து பெறுகிறார்கள். "இங்கு போராடும் சுமார் 80 - 100 ஆஷா பணியாளர்களுக்கு என்னால் உணவளிக்க முடிகிறது", என்று, தானே மாவட்டத்தின் திஸ்காவ்னில் இருந்து ஆசாத் மைதானத்திற்கு தினமும் இரண்டு மணி நேரம் மற்ற 17 ஆஷா பணியாளர்களுடன் பயணம் செய்யும் ரீட்டா கூறுகிறார்.
"எந்தவொரு ஆஷா பணியாளரும் பசியின்றி இருப்பதை உறுதி செய்ய நாங்கள் மாறி மாறி முயல்கிறோம். ஆனால் நாங்கள் இப்போது நோய்வாய்ப்பட்டு வருகிறோம். சோர்வாகவும் இருக்கிறோம்," என்று 2024 பிப்ரவரி இறுதியில் பாரியிடம் பேசிய அவர் கூறுகிறார்.



















