“குலாம் நபி, உன் கண்ணு கெட்டுப் போயிடும். நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்குற? போய் தூங்கு!”
இரவு நீண்ட நேரமாகியும் நான் மரத்தை செதுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என் அம்மா இப்படித்தான் சொல்வார். அவர் திட்டுவதைக் கேட்ட பின்பும் நான் என் வேலையை நிறுத்துவது அரிது. 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கைவினையை செய்துதான் இன்று நான் இருக்கும் நிலையை அடைந்துள்ளேன். என் பெயர் குலாம் நபி தார். காஷ்மீரின் ஸ்ரீநகர் மாநகரைச் சேர்ந்த மரச் சிற்பி நான்.
நான் எப்போது பிறந்தேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு 70 வயதுக்கு மேல் ஆகிறது. இந்த நகரின் மாலிக் சாஹிப் சஃபகடல் பகுதியில்தான் வாழ்நாள் முழுவதும் வசித்திருக்கிறேன். அருகே இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படிக்கத் தொடங்கி, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது குடும்பத்தின் பொருளாதார நிலைமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டேன். என் தந்தை அலி முகமது தார், அருகில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் வேலை செய்து வந்தார். எனக்கு 10 வயது ஆகும்போதுதான் அவர் ஸ்ரீநகருக்குத் திரும்பி வந்தார்.
நகரில் காய்கறி, புகையிலை விற்று அவர் எங்களைக் காப்பாற்றினார். அப்போது குடும்பத்தில் என் தாய் அசி மற்றும் 12 குழந்தைகள் இருந்தோம். மூத்த மகன் என்ற முறையில் நானும், என்னுடன் பிறந்த பஷீர் அகமது தாரும் தந்தைக்கு உதவி செய்தோம். செய்வதற்குப் பெரிதாக வேலை இல்லாத காலத்தில் நாங்கள் சுற்றித் திரிவோம். இது குறித்து எங்கள் தாய் மாமா ஒரு முறை எங்கள் தந்தையிடம் புகார் கூறியதோடு, நாங்கள் மரச்சிற்ப வேலை செய்யவேண்டும் என்றும் யோசனை கூறினார்.
எனவே, நானும் எனது சகோதரர்களும் வெவ்வேறு கைவினைஞர்களிடம் வேலை செய்தோம். இழைத்த வாதுமை மரக் கட்டையை இழைத்து சிற்ப வேலைகளை செய்யத் தொடங்கினோம். முதல்முதலில் எங்களுக்கு வேலை தந்தவர், இரண்டு ஆண்டுகள் உழைத்த பிறகே, எங்களுக்கு தலா இரண்டரை ரூபாய் தந்தார்.
இரண்டாவது ஆசிரியர் எங்கள் வீட்டுக்கு அருகே வசிக்கும் அப்துல் அஜிஸ் பட். சர்வதேச வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த காஷ்மீரின் பெரிய கைவினை நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். ஸ்ரீநகரின் ரெயின்வாரி பகுதியில் அமைந்திருந்த அவரது பட்டறை பல திறமையான கைவினைஞர்களால் நிரம்பியிருக்கும். இந்த இடத்தில் நானும் பஷீரும் ஐந்து ஆண்டுகள் வேலை செய்தோம். தினம் எங்கள் வேலை காலை 7 மணிக்குத் தொடங்கும். பொழுது சாய்ந்த பிறகும் வேலை தொடரும். நகைப் பெட்டிகள், காபி டேபிள் எனப்படும் சிறு மேசைகள், விளக்குகள் போன்றவற்றை மரத்தில் செதுக்குவோம். வீடு திரும்பியதும் சின்ன சின்ன மரத் துண்டுகளில் நான் பயிற்சிக்காக செதுக்கிப் பார்ப்பேன்.
செய்து முடித்த மரச் சிற்பங்களை அந்த தொழிற்சாலையில் உள்ள ஓர் அறையில் வைப்பார்கள். அந்த அறையை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். யாரும் உள்ளே சென்று பார்க்க முடியாது. ஒரு நாள் நான் நைசாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் மரங்கள், பறவைகள் என்று பலவிதமான மரத்தாலான வேலைப்பாடுகள் மின்னிக்கொண்டிருந்தன. என் கண்களுக்கு அந்த இடம் சொர்க்கம் போல இருந்தது. இந்தக் கலையில் விற்பன்னராவதே என் வாழ்க்கையின் லட்சியம் என்று தீர்மானித்துக்கொண்டேன். அதன் பிறகு பல முறை அந்த அறைக்குள் நழுவிச் சென்று உள்ளே புதுப்புது வடிவமைப்புகளைக் கண்ணுற்று அவற்றைப் போலவே செய்யவும் முயன்றேன். அப்படி நான் யாருக்கும் தெரியாமல் உள்ளே சென்று வேடிக்கை பார்ப்பதை வேறொரு தொழிலாளி பார்த்துவிட்டு எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டினார். ஆனால், இந்தக் கலையின் மீதான என் அர்ப்பணிப்பைப் பார்த்துவிட்டு பின்னாளில் என்னை அவர் அனுமதித்தார்.
அந்த அறையில் கூர்ந்து நோக்கி நானே கற்றுக்கொண்ட விஷயங்களை வேறு எவரும் எப்போதும் எனக்குக் கற்றுத் தந்ததில்லை.
முன்பெல்லாம் சினார் மரம் [Platanus orientalis], திராட்சை, ரோஜாப்பூ, தாமரைப்பூ போன்ற வடிவங்களை மரத்தில் செதுக்குவார்கள். ரோஜா வடிவமைப்பு உள்ளிட்டவற்றை மக்கள் இப்போது மறந்துவிட்டார்கள். எளிமையாக செதுக்கும் வடிவங்களைத்தான் இப்போதெல்லாம் தேர்வு செய்கிறார்கள். சில பழைய வடிவமைப்புகளை மீண்டும் கொண்டுவரவும், குறைந்தபட்சம் 12 ஆரம்பகால வடிவமைப்புகளை செய்யவும் முயன்றேன். அவற்றில் இரண்டு விற்றுவிட்டன. ஒன்று மேசையில் செதுக்கப்பட்ட வாத்து உருவம். மற்றொன்று, கொடி உருவம்.
ஜம்மு காஷ்மீர் மாநில கைவினை இயக்குநர் அலுவலகம் வழங்கும் மாநில விருதுக்காக 1984ம் ஆண்டு நான் இரண்டு டிசைன்களை சமர்ப்பித்தேன். இரண்டு டிசைன்களுமே வெற்றி பெற்றன. இவற்றில் ஒன்று, ஒரு காஷ்மீர் கிராமத்தின் காட்சியை பின்னணியில் சித்தரித்து அங்கே ஊராட்சி கூட்டம் நடப்பதைக் காட்டுவது. சீக்கியர்கள், முஸ்லிம்கள், பண்டிட்டுகள் போன்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது குழந்தைகள், கோழிகள் சகிதம் ஒரு மேசையை ஒட்டி அமர்ந்திருப்பதாக காட்டும் வகையில் அந்த சிற்பம் அமைந்திருந்தது. தேனீர் நிரம்பிய பாத்திரம், அதை ஊற்றுவதற்கான குவளைகள், ஒரு புகைப்பிடிக்கும் ஹூக்கா, மேசை மீது வைக்கப்பட்ட புகையிலை, மேசையைச் சுற்றி இருக்கும் குழந்தைகள், கோழிகள் ஆகியவை அந்த வேலைப்பாட்டில் செதுக்கப்பட்டிருக்கும்.
மாநில விருதினை வென்றது, தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கும் ஊக்கத்தை தந்தது. 1995ம் ஆண்டு ஒரு கலைப்படைப்புக்கு தேசிய விருது கேட்டு விண்ணப்பித்தேன். ஒரு பெட்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக பாவனைகளை செதுக்கினேன். ஒரு முகம் மகிழ்ச்சியை சிரிப்பின் மூலமாக வெளியிடும். இன்னொரு முகம் அழுகையை கண்ணீர் மூலமாக வெளிப்படுத்தும். அடுத்தடுத்த முகங்கள் கோபம், அச்சம் ஆகிய உணர்ச்சிகளைக் காட்டும். இடையிடையே முப்பரிமாணத்தில் மலர்களை செதுக்கியிருப்பேன். என் முதல் முயற்சியிலேயே தேசிய விருது வாங்கித் தந்தது இந்த வேலைப்பாடு. இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வளர்ச்சி ஆணையர் (கைவினைப் பொருட்கள்), வளர்ச்சி ஆணையர் (கைத்தறி) ஆகியோர் சார்பில் இந்த விருதினை அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா எனக்கு வழங்கினார். “இந்தியாவின் பழமையான கைவினை மரபுகளை உயிர்ப்போடு பேணும்” என் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
ஒரு வேலைப்பாட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்தவர்கள், இந்த விருதுக்குப் பிறகு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். என் முதல் மனைவி மெஹபூபா இந்த காலக்கட்டத்தில் மறைந்தார். எங்களுக்கு மூன்று சிறு குழந்தைகள் இருந்ததால், நான் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று என் பெற்றோர் வலியுறுத்தினர். என் மகனும், மகளும் 12ம் வகுப்பு வரை படித்தனர். என் கடைக்குட்டிப் பெண் 5ம் வகுப்பு வரை படித்தாள். மூத்த மகன் அபித்துக்கு இப்போது 34 வயது. அவன் என்னோடு வேலை செய்கிறான். அவனுக்கு முதல் முயற்சியிலேயே 2012ம் ஆண்டின் மாநில விருது கிடைத்தது.
காலப்போக்கில் சில முக்கிய ஆசிரியர்கள் என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்கள். அப்படி வாழ்க்கையை மாற்றிய ஆசிரியர்களில் ஒருவர் நூர் தின் பட். ஸ்ரீநகரின் நர்வாரா பகுதியில் நூர்-ரோர்-டாய்க் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்ட அவர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.
உடலின் வலதுபுறம் செயலிழந்து, படுத்த படுக்கையாக அவர் இருந்தபோது அவரை சந்தித்தேன். அப்போது நான் எனது நாற்பதின் வயதுகளில் இருந்தேன். மரப்பலகையையோ, காபி டேபிளையோ அவரிடம் கொண்டு வருவார்கள். தமது படுக்கையில் இருந்தபடி அவற்றில் வடிவங்களை செதுக்குவார் அவர். இதில் கிடைத்த வருமானத்தை வைத்து தனது மனைவியையும், மகனையும் காப்பாற்றி வந்தார். என்னையும், எனது சகோதரனையும் போல சில இளைஞர்களுக்கு இந்தக் கலையைக் கற்றுக்கொடுத்தார். எனக்கு கற்றுக் கொடுப்பீர்களா என்று அவரிடம் நான் முதல் முதலில் கேட்டபோது, நகைச்சுவையாக “நீ கொஞ்சம் லேட்டா வந்துட்டே” என்றார்.
கருவிகளை, உப்புத்தாளை எப்படிப் பயன்படுத்தி வடிவங்களை செதுக்க வேண்டும் என்று கற்றுத்தந்தார் அவர். மன உளைச்சல் ஏற்பட்டாலோ, தடுமாறி நின்றாலோ தோட்டத்துக்குப் போய் மலர்களை உற்று நோக்கும்படி, இறக்கும் முன்பு எனக்கு சொல்லிக்கொடுத்தார் நூர் தின் பட். மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, இந்தக் கலையை வளர்த்துக் கொண்டு செல்வதற்கு எனக்கு ஊக்கமாக இருந்தார் அவர்.
முன்பெல்லாம் எனது கைகள் வேகமாக இயங்கும். ஒரு இயந்திரம் போல என்னால் வேகமாக வேலை செய்ய முடியும். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. என் கைகளின் வேகமும் முன்பு போல இல்லை. ஆனால், நான் எப்போதும் நன்றியோடு இருக்கிறேன்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்