துணியை தடவி பார்ப்பதை ருகாபாய் படாவியால் தவிர்க்க முடியவில்லை. எங்களின் உரையாடலினூடாக, அவர் அப்படி தடவுவது அவரை வேறொரு காலத்துக்கும் வாழ்க்கைக்கும் இட்டுச் செல்வதை உணர்ந்தேன்.
“இது என்னுடைய திருமணப் புடவை,” என்கிறார் அவர் பில் மொழியில். அக்ரானி தாலுகாவின் மலை மற்றும் பழங்குடி பகுதிகளில் பேசப்படும் மொழி அது. கட்டிலில் அமர்ந்திருக்கும் அந்த 90 வயது பெண், இளஞ்சிவப்பு மற்றும் தங்க ஜரிகை போட்ட பருத்திப் புடவையை தன் மடியில் வைத்து மெல்ல தடவி பார்க்கிறார்.
“என் பெற்றோர் இதை கடும் உழைப்பில் சம்பாதித்த பணத்தை கொண்டு வாங்கினார்கள். அவர்களின் நினைவுக்கான அடையாளமாக நான் கொண்டிருப்பது இப்புடவை மட்டும்தான்,” என்கிறார் அவர் குழந்தைத்தனமான புன்னகையுடன்.
மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்திலுள்ள அக்ரானி தாலுகாவின் மொஜாரா கிராமாத்தில் ருகாபாய் பிறந்தார். இப்பகுதியில்தான் அவர் எப்போதும் வசித்திருந்தார்.
“என் திருமணத்துக்கு என் பெற்றோர் 600 ரூபாய் செலவழித்தனர். அச்சமயத்தில் அது பெரும் பணம். இந்த புடவை உள்ளிட்ட ஆடைகளை ஐந்து ரூபாய்க்கு அவர்கள் வாங்கினார்கள்,” என்கிறார் அவர். நகைகளை மட்டும் வீட்டில் தாய் செய்திருக்கிறார்.
“நகை ஆசாரி அல்லது கைவினைஞர் யாரும் இல்லை. வெள்ளி நாணயங்களை கொண்டு ஒரு கழுத்தணியை என் தாய் செய்தார். நிஜ காசுகள். நாணயங்களில் துளையிட்டு, கோத்டி யின் (கையால் தைக்கப்பட்ட படுக்கைகள்) ஒரு தடிமனான நூலில் அவற்றை கோர்த்தார்,” என்கிறார் ருகாபாய் சிரித்தபடி. பிறகு மீண்டும் அவர் சொல்கிறார், “வெள்ளி நாணயங்கள். இன்றுள்ள காகித பணம் அல்ல.”
பிரம்மாண்டமாக திருமணம் நடந்ததாக சொல்லும் அவர், மணப்பெண் பிறகு மொஜாராவிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்த மாப்பிள்ளை வீட்டாரின் கிராமம் சுர்வானிக்கு சென்றதாக சொல்கிறார். அங்குதான் வாழ்க்கை திருப்பத்தை கொண்டதாக சொல்கிறார். அவரின் நாட்களின் சந்தோஷமும் எளிமையும் காணாமல் போனது.
“வீடு எனக்கு அந்நியமாக இருந்தபோதும் அங்கு வாழ்வதென நான் முடிவு செய்து கொண்டேன். வாழ்க்கையின் மிச்சக்காலத்துக்கு எனக்கு மாதவிடாய் வந்தது. பெரியவள் ஆகி விட்டதாக நினைத்தார்கள்,” என்கிறார் அவர்.
“ஆனால் திருமணம் என்றால் என்ன என்பதோ கணவர் என்றால் யார் என்றோ அப்போது எனக்கு தெரியாது.”
அவர் அப்போது குழந்தையாக இருந்தார். நண்பர்களுடன் விளையாடும் நிலையில்தான் இருந்தார். ஆனால் அவரின் குழந்தை திருமணம், வயதுக்கு மீறிய சிரமங்களை சுமக்க வேண்டிய சூழலை கொடுத்தது.
”இரவில் சோளத்தையும் தானியங்களையும் நான் அரைக்க வேண்டும். கணவர் வீட்டாருக்கும் மைத்துனிக்கும் என் கணவருக்கும் எனக்கும் என ஐந்து பேருக்கு இதை நான் செய்ய வேண்டும்.”
அப்பணி அவரை சோர்வாக்கியது. முதுகு வலியையும் கொடுத்தது. “மிக்ஸி மற்றும் அரவை மில்கள் வந்து இப்போது இந்த வேலைகள் எளிதாகி விட்டன.”
அந்த காலத்தில், அவருக்குள்ளிருந்து துயரங்களை எவரிடமும் அவரால் சொல்ல முடியவில்லை. எவரும் கேட்க மாட்டார்கள் என்கிரார் அவர். அத்தகைய சூழலிலும் தன்னுடைய துயரங்களை பகிரவென அவர், ஒரு வித்தியாசமான இடத்தை கண்டுபிடித்தார். உயிரற்ற பொருள் அது. ஒரு பழைய ட்ரங்க் பெட்டியிலிருந்து மண் பாத்திரங்களை வெளியே எடுக்கிறார். “இவற்றுடன்தான் அதிக நேரம் செலவழித்திருக்கிறேன். நல்ல விஷயம், மோசமான விஷயம் எல்லாவற்றையும் இவற்றுடன் பகிர்ந்திருக்கிறேன். பாத்திரங்கள்தான் பொறுமையாக நான் சொல்வதை கேட்டவை.”
இது புதிது அல்ல. மகாராஷ்டிரா கிராமப்புறத்தின் பல பகுதிகளில், பெண்கள், இன்னொரு சமையல் கருவியில் நட்பை கண்டறிகின்றனர்; அரவைக்கல். அன்றாடம் மாவரைக்கும்போது, பல வயதுகளை சேர்ந்த பெண்கள் சந்தோஷம், துன்பம், மனக்கசப்பு சார்ந்த பாடல்களை, கணவர்களுக்கும் சகோதரர்களுக்கும் மகன்களுக்கும் கேட்காமல் இக்கருவியிடம் பாடியிருக்கின்றனர். மேலதிகமாக பாரி தொடரில் அரவைக்கல் பாடல்கள் பற்றி நீங்கள் படிக்கலாம்.
ட்ரங்க் பெட்டியை துழவிக் கொண்டிருந்த ருகாபாய்க்கு, உற்சாகத்தை அடக்க முடியவில்லை. ”இது டாவி (காய்ந்த சுரைக்காயில் செய்யப்பட்ட கரண்டி). இப்படித்தான் நாங்கள் முன்பெல்லாம் நீர் குடிப்போம்,” என்கிறார் அவர் செய்து காட்டியபடி. வெறுமனே நடித்துக் காட்டியதே அவருக்கு சிரிப்பை வரவழைக்கிறது.
திருமணம் முடிந்து ஒரு வருடத்துக்குள்ளேயே, ருகாபாய் தாயாகி விட்டார். அப்போதுதான் அவர் வீடு மற்றும் விவசாய வேலை ஆகிய இரண்டையும் எப்படி செய்வதென கற்றுக் கொண்டிருந்தார்.
குழந்தை பிறந்ததும், அதிருப்தி குடும்பத்தை சூழந்தது. “வீட்டில் அனைவருமே ஆண் குழந்தைக்குதான் ஆசைப்பட்டார்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்தது. எனக்கு அது பிரச்சினையாக இருக்கவில்லை. ஏனெனில் எந்த குழந்தையாக இருந்தாலும் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர்.
ருகாபாய்க்கு ஐந்து மகள்கள் பிறந்தனர். “ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்குபடி அதிகமாக கட்டாயப்படுத்தினார்கள். இறுதியில் இரு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொடுத்தேன். பிறகு நான் விடுவிக்கப்பட்டேன்,” என்கிறார் அவர் நினைவின் கண்ணீரை துடைத்தபடி.
எட்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின், அவரின் உடல் பலவீனமானது. “குடும்பம் பெரிதாகி விட்டது. ஆனால் எங்களின் இரு குந்தா (2000 சதுர அடி) நிலம் போதுமான விளைச்சலை கொடுக்கவில்லை. உணவுக்கு வழியில்லை. பெண்களுக்கும் சிறுமிகளுக்குமான பங்கும் குறைவு. என்னுடைய முதுகு வலிக்கு அது உதவவில்லை.” வாழ்க்கையை ஓட்ட அதிகமாக வருமானம் ஈட்ட வேண்டியிருந்தது. “வலி இருந்தபோதும் சாலை கட்டுமான வேலைக்கு என் கணவர் மோத்யா பாடவியுடன் நான் செல்வேன். தினக்கூலி 50 பைசா.”
இன்று, ருகாபாய், தன் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வளர்ந்து நிற்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். “இது புது உலகம்,” என்னும் அவர், மாற்றம் கொஞ்சம் நல்ல்வற்றை உருவாக்கி தந்திருப்பதை ஏற்றுக் கொள்கிறார்.
எங்களின் உரையாடல் முடியும்போது, தற்கால சிக்கல் ஒன்றை பகிர்ந்து கொள்கிறார். “முன்பு எங்களின் மாதவிடாய் காலத்தில் கூட, எங்கு வேண்டுமானாலும் சென்றிருக்கிறோம். இன்றோ பெண்கள் சமையலறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை,” என்கிறார் எரிச்சலுடன். ‘கடவுள்’ படங்கள் வீட்டுக்குள் வந்து விட்டது. ஆனால் பெண்கள் வெளியே வந்து விட்டனர்.
தமிழில் : ராஜசங்கீதன்