ராய்ப்பூரின் புறநகரில் இருக்கும் செங்கல் சூளைகளில் மதிய உணவுக்கான இடைவேளை. தொழிலாளர்கள் பலரும் உணவு உண்ணுகிறார்கள் அல்லது தற்காலிக குடிசைகளில் ஓய்வெடுக்கிறார்கள்.
“நாங்கள் சத்னாவை சேர்ந்தவர்கல்,” என்கிறார் மண் குடிசைக்குள் இருந்து வெளியே வரும் பெண். இங்குள்ள தொழிலாளர்கள் பலரும் மத்தியப் பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அறுவடைக் காலம் முடிந்ததும் சட்டீஸ்கரின் தலைநகருக்கு வருடந்தோறும் வரும் அவர்கள் மே அல்லது ஜூன் மாத வரை ஆறு மாதங்களுக்கு அங்கு வசிப்பார்கள். இந்தியாவின் பெரிய துறையான செங்கல் சூளைகளில் 10-23 மில்லியன் தொழிலாள்ரகள் (செங்கல் சூளைகளில் அடிமைத்தனம், 2017) பணிபுரிகின்றனர்.
இந்த வருடம் அவர்கள் வீடு திரும்பும்போது, புதிய அரசாங்கம் ஒன்றியத்தில் பதவியேற்றிருக்கும். ஆனால் அதற்கான தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பங்காற்ற முடியுமா எனத் தெரியவில்லை.
“வாக்களிக்கும் நேரம் எங்களுக்கு சொல்லப்படும்,” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண்.
தகவலை அநேகமாக ஒப்பந்ததாரரான சஞ்சய் பிரதாபதி கொடுப்பார். குடிசைகளிலிருந்து சற்றுத் தொலைவில் நின்றபடி அவர், “சாத்னாவில் தேர்தல் பற்றி தகவல் ஏதும் எங்களுக்கு இல்லை. தகவல் கிடைத்தால், அவர்களுக்கு நாங்கள் சொல்வோம்,” என்கிறார். சஞ்சயும் இங்குள்ள பல தொழிலாளர்களும் மத்தியப்பிரதேசத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினராக வரையறுக்கப்பட்டிருக்கும் பிரஜபதி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.









