“எங்கள் உடம்பில் வண்ணம் தீட்டிக்கொள்வது கடினம். (அதைச் செய்ய) இரவு முழுவதும் விழித்திருக்கவேண்டும்,” என்று கூறுகிறார் தன் உடல் மீது முதல் முதலாக ஆயில் பெயிண்ட் அடித்துக்கொள்ளும் ஆயுஷ் நாயக். “என் உடல் எரிவதுபோல இருக்கிறது. எனவே முடிந்தவரை விரைவாக பெயிண்டை காய வைக்கவேண்டும்,” என்கிறார் அந்த 17 வயது இளைஞர்.
தசரா, ஜென்மாஷ்டமி விழாக்களின்போது ஆடப்படும் பிலி வேஷா ( அல்லது ஹுலி வேஷா) என்ற நாட்டுப்புற நடனம் ஆடுவதற்காக தங்கள் உடலில் பளீர் நிற வண்ணக் கோடுகளைத் தீட்டிக்கொள்ளும் கடலோரக் கர்நாடகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களில் ஒருவர்தான் ஆயுஷ். சுற்றிலும் மேள ஓசை அதிர, புலி முகமூடி அணிந்துகொண்டு, உறுமிக்கொண்டே இவர்கள் நடனமாடுவார்கள்.
கடலோரக் கர்நாடகத்தில் பேசப்படும் துளு மொழியில் பிலி என்றால் புலி என்று பொருள். வேஷா என்றால் ஒப்பனை (அதாவது... புலிவேடம்) என்று பொருள். “இதில் எதையும், யாரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இது எங்கள் ஆன்மாவில் இருக்கிறது,” என்று கூறுகிற விரேந்திர ஷெட்டிகார் கடந்த 22 ஆண்டுகளாக பிலி வேஷா ஆடிவருகிறார். “மேளத்தின் ஓசையும், அதைச் சுற்றி ஏற்படுகிற ஆற்றலும், உங்களை அந்தத் தாளத்துக்கு ஆடவைக்கும்,” என்கிறார் அவர். 30 வயதுக்காரரான விரேந்திர ஷெட்டிகார் அமேசானில் விநியோகஸ்தராக வேலை செய்கிறார். தன் ஊரைச் சேர்ந்த இளைஞர்களை இந்த ஆட்டத்தில் பங்கேற்கும்படி ஊக்குவிக்கிறார் அவர்.
புலிகள், சிறுத்தைகள் போலத் தோன்றும் வகையில் தங்கள் உடல் முழுவதும் அக்ரிலிக் பெயிண்டால், மஞ்சள், செம்பழுப்பு நிறப் பட்டைக் கோடுகளை வரைந்து கொள்கிறார்கள் இந்தப் புலி நடனக் கலைஞர்கள். முன்பெல்லாம் கரி, மண், பூஞ்சை ஆகியவற்றைக் கொண்டே இவர்கள் பளிச்சென்ற வண்ணங்களைத் தீட்டிக்கொள்வார்கள்.
இந்த நடனத்தின் பாரம்பரிய அடவுகள் மாறி, காலப்போக்கில் சாகசச் செயல்கள் இதில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. முன்னோக்கி, பின்னோக்கி குட்டிக்கரணம் அடிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, தீயை சுவாசிப்பது என்று ஆபத்தான விளையாட்டுகளுக்கு இதில் முக்கியத்துவம் கூடிவிட்டது. இப்போதைய நடன அசைவுகளை செய்வதற்கு உடல் திறனும், வலிமையும் அபரிமிதமாகத் தேவை. எனவே, இந்தப் பாரம்பரிய நடனத்தை ஆடிவந்த முதியோர் ஒதுங்கிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிட்டிருக்கிறார்கள்.






























