"இது அனைத்தும் ஒற்றை நூலில் தொடங்கி ஒற்றை நூலிலேயே முடிவடைகிறது," என்று மெல்லிய புன்னகையுடன் ரேகா பென் வாகேலா கூறுகிறார். அவர் குஜராத்தின் மோட்டா டிம்ப்லா கிராமத்தில் உள்ள தனது வீட்டுக் கைத்தறியில் அமர்ந்து ஒற்றை இகட் பட்டோலுவை நெய்கிறார். "ஆரம்பத்தில் பாபினில் ஒற்றை நூலை சுற்றி விட்டு, இறுதியில், சாயமிடப்பட்ட நூலை பாபின் மீது மாற்றுவோம்," என்று ரேகா பென், நெசவு நூலுக்கான பாபின்கள் தயாராவதற்கு முந்தைய படோலா தயாரிப்பின் பல செயல்முறைகளை விளக்குகிறார். பின்னர் தறியில் திரிக்கப்பட்ட நூல் பொருத்தப்படுகிறது.
ரேகா பென் வசிக்கும் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள வான்கர்வாஸ் கிராமத்தில் பலர் புகழ்பெற்ற பட்டுப் புடவைகளான பட்டோலு தயாரிப்புடன் தொடர்பான ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று, 40 வயதாகும் ரேகா பென், லிம்ப்டி தாலுகாவில், ஒற்றை மற்றும் இரட்டை இகட் படோலாவை நெசவு செய்யும் ஒரே தலித் பெண் படோலா தயாரிப்பாளர் ஆவார். (படிக்க: ரேகா பென் வாழ்க்கையின் குறுக்கு செங்குத்து இழைகள் ).
சுரேந்திரநகரில் இருந்து தயாரிக்கப்படும் படோலாக்கள் 'ஸலவாடி' படோலா என்று அழைக்கப்படுகின்றன. இது படானில் தயாரிக்கப்படும் படோலாக்களை விட மலிவானது. ஆரம்பத்தில், இவை, அதன் ஒற்றை இகட் படோலாவுக்கு பெயர் பெற்றன. தற்போது ஜலவாட்டில் உள்ள வான்கர்கள் (நெசவாளர்கள்) இரட்டை இகட் படோலாவையும் நெசவு செய்கிறார்கள். "ஒற்றை இகட்டில், வடிவமைப்பு குறுக்கு இழையில் மட்டுமே இருக்கும். இரட்டை இகட்டில், செங்குத்து இழை மற்றும் குறுக்கு இழை இரண்டிலும் உள்ளன,” என்று ரேகா பென், இரண்டு வகையான படோலாவிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார்.
வடிவமைப்பை பொறுத்துதான், செயல்முறை நுட்பமாகிறது. ரேகா பென் அதை இன்னொரு முறை விளக்க முயற்சிக்கிறார். “ஒரு இகட் படோலுவில் 3500 செங்குத்து இழை நூல்களும் 13750 குறுக்கு இழை நூல்களும் உள்ளன. இரட்டை இகட் படோலுவில் 2220 செங்குத்து இழை நூல்களும் மற்றும் 9870 குறுக்கு இழை நூல்களும் உள்ளன,” என்று அவர் பாபினை குறுக்கு இழை நூலால் ஷட்டிலுக்குள் செலுத்துகிறார்.
பாபினை பார்க்கும் போது, 55 வயதான கங்கா பென் பார்மரின் உருவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. "நாங்கள் முதலில் ஒரு பெரிய மர ஸ்பூலில் நூலை சுற்றிக்கொள்வோம். பின்னர் அதிலிருந்து ஒரு சுழலும் சக்கரத்தின் உதவியுடன், பாபினுக்கு செலுத்துவோம். சுழலும் சக்கரம் இல்லாமல் பாபினுக்கு நூலை செலுத்த முடியாது,” என்று லிம்ப்டியின் காக்ரேதியா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஒரு பாபினில் வேலை செய்து கொண்டே அவர் கூறுகிறார்.
"என்ன, ஏதும் புரியலையா?" என்று கேட்ட ரேகா பென்னின் குரல், படோலா இழைகள் பற்றிய எங்கள் உரையாடலுக்கு என் கவனத்தை மீண்டும் திருப்பியது. இந்த சிக்கலான செயல்முறையை அவர் எனக்கு அன்று எத்தனை முறை விளக்கியிருப்பார் என்ற கணக்கே இல்லை. "எழுது," அவர் என் நோட்புக்கில் சுட்டிக்காட்டி உரிமையாக அதட்டுகிறார். நான் செயல்முறையை முழுமையாக புரிந்துகொள்கிறேன் என்பதை உறுதிப்படுத்த, அவர் சிறிது நேரம் நெசவு செய்வதை நிறுத்தி விட்டு என் மீது கவனம் செலுத்துகிறார்.
பத்துக்கும் மேற்பட்ட படிகளுடன், மிகவும் சிக்கலான இந்த செயல்முறையை நான் எழுதுகிறேன். இதை செய்வதற்கு பல வாரங்கள் ஆகலாம். நெசவாளர்களைத் தாண்டி இன்னும் பல தொழிலாளர்களின் உழைப்பும் இதில் அடங்கும். பட்டு நூலில் தொடங்கி 252 அங்குல நீளமுள்ள பட்டோலா சேலைக்குள் செல்லும் கடைசி நூலுடன் முடிவடையும் செயல்முறையானது, ஆறு மாதம் வரையிலான உழைப்பைக் கோரலாம்.
"இந்த செயல்முறை படிகளில் ஏதேனும் ஒரு தவறு வந்தாலும், நீங்கள் மொத்த படோலுவையும் கெடுத்துவிட்டதாகிவிடும்," என்று அவர் உணர்ச்சி வசப்படுகிறார்.
தமிழில் : அஹமத் ஷ்யாம்