கிட்டத்தட்ட நடு இராத்திரி வேளை. தமிழ்நாட்டில் உள்ள வடநெம்மேலி கிராமம் அது. ஸ்ரீ பொன்னியம்மன் தெருக்கூத்து மன்றத்தை சேர்ந்த கலைஞர்கள் எல்லோரும் காரியக்கூத்து நிகழ்த்த தயாராகிக் கொண்டிருந்தனர். வழக்கம்போல இதுவும் பல கதாபாத்திரங்களோடும் ஒப்பனையோடும் விடிய விடிய நடக்கும் கூத்து.
திரைச்சீலைக்கு பின்னால் 33 வயதான சர்மி ஒப்பனை செய்து கொண்டிருந்தார். சிவப்பு பொடியோடு எண்ணெய் கலந்து தனக்கான அதரப்பூச்சை (லிப்ஸ்டிக்) தயாரித்துக் கொண்டே அரிதாரம் பூசுவதற்கான அடிப்படை வழிமுறைகளை விளக்கினார்: “அரிதாரம் ஆம்பள வேசத்திற்கும் பொம்பள வேசத்திற்கும் வேற வேற. அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு தகுந்த மேக்கப் தான் போடுவோம். நடிக்கப்போற காட்சி நேரம் குறைவா இருந்தா அதுக்கு தகுந்த மாதிரி மேக்கப் போடுவோம்”
தமிழ்நாட்டின் பழமையான நிகழ்த்துக் கலையான தெருக்கூத்தை நிகழ்த்தி வரும் ஸ்ரீ பொன்னியம்மன் தெருக்கூத்து மன்றத்தில் 17 கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில் 4 திருநங்கை கலைஞர்களுள் ஒருவர்தான் சர்மி. “எனக்கு தெரிஞ்சு என்னோட முன்னோர்கள் கூத்து பண்ணிருக்காங்க. அவங்களுக்கு முன்னாடியும் பண்ணிருக்காங்க. இது எவ்ளோ பழமையான கலைன்னு சரியா சொல்ல தெரியல,” என்றார் சர்மி.
வீதிகளில் நடத்தப்படும் தெருக்கூத்து பெரும்பாலும் இராமாயண மகாபாரத புராணங்களை தழுவி இரவு முழுவதும் நிகழ்த்தக்கூடியது. பங்குனி(ஏப்ரல்) முதல் புரட்டாசி(செப்டெம்பர்) வரை தெருக்கூத்தின் விழாக்காலங்கள். இந்த காலத்தில் சர்மியும் மற்ற கலைஞர்களும் வாரத்தில் முக்கால்வாசி நாட்களில் கூத்து நிகழ்த்துவார்கள். அப்படி நிகழ்த்தினால் மாதத்திற்கு 15-20 கூத்துகள் ஆடுவார்கள். இவர்களுக்கு ஒரு கூத்திற்கு ரூபாய் 700-800 சம்பளம் கிடைக்கும். அப்படியாக ஒரு கலைஞருக்கு மாதம் தலா 10,000 – 15,000 வரை வருமானம் கிடைக்கும்.
விழாக்காலங்கள் முடிந்துவிட்டால், கலைஞர்கள் அனைவரும் வேறு வழியின்றி வருமானத்திற்காக மற்ற வேலைகளுக்கு செல்ல வேண்டும். சடங்காக நடத்தப்படும் காரியக்கூத்து கூட இழவு வீடுகளில் மட்டுமே நிகழ்த்தப்படும். “யாராவது செத்தா, எங்களுக்கு ஒன்னு, ரெண்டு கூத்து கொடுக்கும்,” என்று கூறும் சர்மி தனது கூத்து கம்பெனியின் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெருமந்தூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் பயணப்பட்டு வடநெம்மேலி கிராமத்திற்கு காரியக்கூத்து நிகழ்த்த வந்துள்ளார்.
























