கடைசியாக அப்துல் குமார் மக்ரே பட்டு நெசவு செய்து 30 வருடங்கள் ஆகின்றன. காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்ஸுக்கும் கீழே செல்லும் கொடுமையான குளிர்காலங்களை தாக்குப் பிடிக்க உதவும் கம்பளித் துணியை நெய்யும் கடைசி நெசவாளர்களில் அவரும் ஒருவர்.
“ஒரு நாளில் 11 மீட்டர் துணி வரை நான் நெய்திருக்கிறேன்,” என நினைவுகூருகிறார் 82 வயதாகும் அவர். கிட்டத்தட்ட பார்வை முழுமையாக இழந்துவிட்டார். கவனமாக அறையைக் கடக்க, சுவரைப் பிடித்துக் கொண்டு அவர் நடக்கிறார். “50 வயதாக இருக்கும்போது, அதிக நெசவு காரணமாக என் கண் பார்வை மங்கியது.”
ஹப்பா கதூன் சிகரம் தெரியும் பந்திப்போர் மாவட்டத்தின் தவார் கிராமத்தில் அப்துல் வாழ்கிறார். 4,253 பேர் (கணக்கெடுப்பு 2011) அங்கு வாழ்கின்றனர். தற்போது பட்டு நெய்பவர் எவரும் இல்லை என்னும் அவர், “பத்தாண்டுகளுக்கு முன் வரை, குளிர்கால மாதங்களில் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் கோடைகாலத்திலும் வசந்தகாலத்திலும் விற்பதற்கான துணிகள் நெய்யப்பட்டன,” என்கிறார்.
ஃபெரான் (பாரம்பரியமாக மேலே அணியப்படும் ஆடை), துபாதி (போர்வை), உறைகள் போன்றவற்றை ஸ்ரீநகரிலும் பிற மாநிலங்களிலும் விற்பதற்காக அப்துலும் அவரது குடும்பத்தினரும் தயாரிப்பார்கள்.
அக்கலையின்பால் அப்துல் கொண்டிருக்கும் நேசத்தை தாண்டி, அதில் பிழைப்பது என்பது இந்தக் காலத்தில் சுலபமில்லை. மூலப்பொருளான கம்பளி, நேரடியாக கிடைப்பதில்லை. அப்துல் போன்ற நெசவாளர்கள் செம்மறிகளை வளர்த்தார்கள். பட்டு நெசவுக்காக விலங்குகளை வளர்த்தனர். 20 வருடங்களுக்கு முன்பு, 40லிருந்து 45 செம்மறிகள் குடும்பத்திடம் இருந்தபோது, கம்பளி பெறுவது சுலபமாகவும் மலிவாகவும் இருந்தது என்கிறார் அவர். “நல்ல லாபமும் எங்களுக்குக் கிடைத்தது,” என நினைவுகூருகிறார். தற்போது குடும்பத்துக்கு மொத்தமே ஆறு செம்மறி ஆடுகள்தான் இருக்கின்றன.


















