டிசம்பர் 20, 2014ம் ஆண்டில் பாரி தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகி விட்டது.
எது எங்களின் பெரிய சாதனையா? இன்னும் நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதுதான் சாதனை. ஒரு சுதந்திர ஊடக தளமாக, கார்ப்பரேட் அதிகாரம் கோலோச்சும் காலத்திலும் செழித்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். பாரி தற்போது 15 மொழிகளில் தினசரி பிரசுரித்து வருகிறது. முதலீடு ஏதும் இன்றி, அரசின் நிதியும் கேட்கப்படாமலும் பெறப்படாமலும் இயங்கும் அறக்கட்டளையின் பிரதானப் பணி இதுதான். நேரடி கார்ப்பரேட் மானியங்களும் முதலீடுகளும் கிடையாது. விளம்பர வருவாயும் (கொள்கையாக) கிடையாது. பாரியை வாசிக்கவும் பார்க்கவும் கேட்கவும் நாங்கள் விரும்பும் மக்களின் பெரும்பான்மையை விலக்கும் ஆபத்து இருப்பதால் சந்தாக் கட்டணமும் கிடையாது. ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் என தன்னார்வம் கொண்டு இயங்கும் எண்ணற்ற ஆர்வலரக்ளை கொண்ட வலைப்பின்னல்தான் பாரி. குறிப்பிடத்தகுந்த பங்குக்கு திறன்சார் பணிகள் இருந்தாலும் அவையும் இலவசமாக தன்னார்வ உழைப்பில்தான் செய்யப்படுகிறது. பொதுமக்களின் தாராள நன்கொடைகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பாரியின் சுதந்திரத்தை மதிக்கும் அறக்கட்டளைகளின் உதவிகள் போன்றவற்றின் மேல் பாரி கட்டப்பட்டிருக்கிறது.
அர்ப்பணிப்புணர்வும் பொறுமையும் கொண்ட ஊழியர்களால் தற்போது இயக்கப்பட்டு வரும் பாரி, இந்தியாவில் இயற்கையாகவும் வரலாற்றுப்பூர்வமாகவும் உருவாகி வளர்ந்திருக்கும் பகுதிகளின் 95 சதவிகித பகுதி சார்ந்த செய்திகளை முறையாக சேகரித்து அளிக்கும் ஒரே இணையதளம் ஆகும். கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் 90 கோடி மக்களை பற்றியும் அவர்களின் வாழ்க்கைகள், வாழ்வாதாரங்கள், பண்பாடுகள் பற்றியும் அவர்களின் தனித்துவமான 800 மொழிகள் பற்றியும் செய்திகளை வெளியிடும் ஒரே இதழியல் தளம் பாரிதான். சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைகளை அனைவருக்கும் கையளிக்க உறுதி பூண்டிருக்கிறோம். நகர்ப்புறங்களுக்கு வேலை தேடி புலம்பெயரும் பெரும் எண்ணிக்கையிலான கிராமப்புற மக்களை குறித்தும் கிட்டத்தட்ட 100 கோடி மனிதர்களை குறித்தும் நாங்கள்தான் செய்திகளை அளிக்கிறோம்.
தொடக்கத்திலிருந்தே பாரி நிறுவனர்களாக நாங்கள், இத்தளம் இதழியல் தளமாகவும் உயிர்த்திருக்கும் மக்களின் பெட்டகமாகவும் திகழ வேண்டும் என்பதில் தெளிவு கொண்டிருந்தோம். கார்ப்பரேட்டுகள் தீர்மானிக்கும் ‘ஊடக நேர்த்தி’ கோட்பாடுகளுக்குள் உட்படாத இதழியலை கொண்ட தளத்தைதான் நாங்கள் விரும்பினோம். மானுடவியல், அறிவியல்கள், சமூகவியல்கள் ஆகியவற்றின் அறிவாற்றலும் வலிமையும் கொண்ட தளத்தை நாங்கள் விரும்பினோம். எனவே, இதழியல் அனுபவம் கொண்ட பத்திரிகையாளர்களை பாரிக்குள் கொண்டு வந்ததோடு நின்று விடாமல், பத்திரிகை துறை சாராமல் பிற துறைகளில் இருந்த அறிவார்ந்தோரையும் முதல் நாளிலிருந்து பாரிக்குள் கொண்டு வரத் தொடங்கினோம்.
விளைவாக குழப்பம், மோதல், கருத்துபேதம், வாதம் (கசப்பானவை கூட) போன்றவை நேர்ந்தாலும் இறுதியில் அசாதாரண சாதனையை தளம் படைத்துக் கொண்டிருந்தது. ஏனெனில் எல்லா துறைசார் வல்லுநர்களும் ஒரு விஷயத்தில் புரிதல் கொண்டிருந்தனர்: கட்டுரையில் நம் குரல்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சாமானிய, அன்றாட மக்களின் குரல்களைதான் அவை பிரதிபலிக்க வேண்டும். எங்களின் களப்பணிக்கான விதிகள், மக்களின் குரல்களைதான் கட்டுரைகள் அதிகம் பிரதிபலிக்க வேண்டுமே தவிர, சொந்த குரல்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதை உறுதி செய்கின்றன. மேலும் கட்டுரைகள், கல்வி இதழ்களாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை போலவும் செய்தி அறிக்கை போலவும் இல்லாமல் கதைகளாக இருப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். முடிந்த வரை செய்கிறோம். விவசாயிகள், பழங்குடிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் பிற வாழ்க்கைத் தளங்களில் இருக்கும் எண்ணற்ற மக்களிடம் பேசி, கதைகளை வழங்குகிறோம். அவர்களையே எழுதவும் ஊக்குவிக்கிறோம். சமயங்களில் அவர்களை பாட வைக்கவும் செய்கிறோம்.














