“பல தலைமுறைகளாக நாங்கள் படகோட்டுதல் மற்றும் மீன் பிடித்தல் ஆகிய இரு வேலைகளைதான் செய்து வருகிறோம். தற்போதைய வேலையின்மை நிலையை பார்க்கையில், என் குழந்தைகளும் இதையேதான் செய்வார்கள் போல தெரிகிறது,” என்கிறார் விக்ரமாதித்ய நிஷாத். வாரணாசியின் சுற்றுலா பயணிகளையும் ஆன்மிக யாத்ரீகர்களையும் கங்கையின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு படகில் கொண்டு செல்லும் வேலையை கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வருகிறார்.

ஆயிரம் கிலோமீட்டர் வரை கங்கை நதி ஓடும் உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பு, கடந்த ஐந்து வருடங்களாக 50 சதவிகிதத்தில் தேங்கி நின்றிருப்பதாக இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 தெரிவிக்கிறது.

“உள்ளூர் தயாரிப்புக்கே முக்கியத்துவம் என்றும் பண்பாடுதான் வளர்ச்சி என்றும் மோடி பிரசாரம் செய்கிறார். பண்பாடு யாருக்கானது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்? காசியை சேர்ந்த எங்களுக்கானதா வெளியாட்களுக்கானதா?” எனக் கேட்கிறார். மோடி பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரின் பிரசாரம் நல்லபடியாக எதிர்கொள்ளப்படவில்லை என்னும் அந்த படகுக்காரர், “வளர்ச்சியை உண்மையாக நாங்கள் பார்க்க வேண்டும்,” என்கிறார்.

காணொளி: வாரணாசியின் படகுக்காரர்

‘பண்பாடு யாருக்கானது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்? காசியை சேர்ந்த எங்களுக்கானதா வெளியாட்களுக்கானதா?’ எனக் கேட்கிறார் விக்ரமாதித்யா நிஷாத்

ஜனவரி 2023-ல் மோடியால் தொடங்கப்பட்ட ஆறு சவாரி, அவரைப் போன்ற படகுக்காரர்களின் வேலைகளை பறித்து விட்டதாக சொல்கிறார் நிஷாத். “வளர்ச்சி என்கிற பெயரில், உள்ளூர்வாசிகளின் வளர்ச்சியையும் பண்பாட்டையும் பறித்து அவர் வெளியாட்களுக்குக் கொடுக்கிறார்,” என அவர் பெரிய உள்கட்டமைப்பு திட்ட நிறுவனங்களில் இருந்து வரும் வெளியாட்களை குறித்து சொல்கிறார். அம்மாநிலத்தில் ஊழியர் ஈட்டும் சராசரி மாத வருமானம் ரூ.10,000 க்கும் சற்று அதிகம்தான். நாட்டிலேயே குறைவான அளவு.

இந்துக்களின் புனித ஆறாக கருதப்படும் கங்கையின் மாசுபாடு, அந்த 40 வயதுக்காரரின் இன்னொரு கவலையாக இருக்கிறது. “கங்கை நீர் சுத்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். முன்பு, ஆற்றுக்குள் ஒரு நாணயத்தை போட்டால், தெள்ளத் தெளிவாக அது உள்ளே இருப்பது தெரியும். ஆனால் இப்போது யாராவது ஒருவர் விழுந்து மூழ்கினால் கூட, அவரை மீட்க பல நாட்கள் ஆகிறது,” என்கிறார் அவர்.

PHOTO • Jigyasa Mishra
PHOTO • Jigyasa Mishra

இடது: மோடி துவக்கி வைத்த அலக்னந்தா மிதவை, கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. வலது: இந்து பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை ஆற்றுக்கு அளிக்கின்றனர்

PHOTO • Jigyasa Mishra
PHOTO • Jigyasa Mishra

இந்துக்கள் ஆற்றை புனிதமாக கருதினாலும் இத்தனை வருடங்களில் மாசுபாடு அதிகரித்திருக்கிறது. சாக்கடைகள் கங்கையின் அஸ்ஸி படகுத்துறையில் (வலது) திறந்து விடப்பட்டிருக்கிறது

மாசு கட்டுப்படுத்தவும் ஆற்றை பாதுகாத்து மீட்கவுமென 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் நமாமி கங்கா திட்டத்தை ஒன்றிய அரசு ஜூன் 2014-ல் தொடங்கியது. ஆனால் 2017ம் ஆண்டு அறிக்கையின்படி, வாரணாசியிலிருந்து சில நூறு கிலோமீட்டர் தூரத்தில் கங்கை தொடங்கும் ரிஷிகேஷுக்கு அருகே உள்ள ஆற்றுப்பகுதியின் தரம் குறைவாக இருப்பதாக நீர் தர வரிசை (WQI) அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பிரசுரித்திருக்கும் அத்தரவு எச்சரிக்கை மணி எனக் குறிப்பிடுகிறது WQI.

“ஆற்றுச் சவாரி எப்படி வாரணாசியின் பண்பாடாகும்? எங்களின் படகுகள்தான் வாரணாசியின் அடையாளமும் பண்பாடும் ஆகும்,” என்கிறார் அவர், தன் படகில் அமர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்தபடி. “பல புராதன கோவில்களை இடித்து அவர் விஷ்வநாதர்  கோவில் காரிடார் கட்டினார். தொடக்கத்தில் ஆன்மிகப் பயணமாக வாரணாசிக்கு வந்தவர்கள், பாபா விஷ்வநாத்துக்கு போக வேண்டுமென சொல்வார்கள். இப்போது அவர்கள், காரிடாருக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்,” என்கிறார் கவலையுடன் நிஷாத். அவரை போல அங்கும் வசிக்கும் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு மாற்றங்களின்பால் அவருக்கு சந்தோஷம் இல்லை.

தமிழில் : ராஜசங்கீதன்

Jigyasa Mishra

ਜਗਿਆਸਾ ਮਿਸ਼ਰਾ ਉੱਤਰ ਪ੍ਰਦੇਸ਼ ਦੇ ਚਿਤਰਾਕੂਟ ਅਧਾਰਤ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ ਹਨ।

Other stories by Jigyasa Mishra
Editor : PARI Desk

ਪਾਰੀ ਡੈਸਕ ਸਾਡੇ (ਪਾਰੀ ਦੇ) ਸੰਪਾਦਕੀ ਕੰਮ ਦਾ ਧੁਰਾ ਹੈ। ਸਾਡੀ ਟੀਮ ਦੇਸ਼ ਭਰ ਵਿੱਚ ਸਥਿਤ ਪੱਤਰਕਾਰਾਂ, ਖ਼ੋਜਕਰਤਾਵਾਂ, ਫ਼ੋਟੋਗ੍ਰਾਫਰਾਂ, ਫ਼ਿਲਮ ਨਿਰਮਾਤਾਵਾਂ ਅਤੇ ਅਨੁਵਾਦਕਾਂ ਨਾਲ਼ ਮਿਲ਼ ਕੇ ਕੰਮ ਕਰਦੀ ਹੈ। ਡੈਸਕ ਪਾਰੀ ਦੁਆਰਾ ਪ੍ਰਕਾਸ਼ਤ ਟੈਕਸਟ, ਵੀਡੀਓ, ਆਡੀਓ ਅਤੇ ਖ਼ੋਜ ਰਿਪੋਰਟਾਂ ਦੇ ਉਤਪਾਦਨ ਅਤੇ ਪ੍ਰਕਾਸ਼ਨ ਦਾ ਸਮਰਥਨ ਵੀ ਕਰਦੀ ਹੈ ਤੇ ਅਤੇ ਪ੍ਰਬੰਧਨ ਵੀ।

Other stories by PARI Desk
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan