மாலை மங்கிவரும் அந்திப் பொழுதில், கொள்ளிடம் நதிக்கரையில் அமர்ந்து கொண்டு, உழவர் வடிவேலன் எனக்குத் தன் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரது எள் வயல், அங்கிருந்து 10 நிமிடத் தொலைவில் உள்ளது. அவர் பிறந்த 12 நாட்கள் கழித்து, இந்நதியில் பெருவெள்ளம் வந்தது. அவரது கிராமத்தில் அப்போது எள் பயிரிட்டது. அதிலிருந்து நறுமணம் வீசும். தேன் நிற நல்லெண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. மிதக்கும் வாழைமட்டைகளைப் பிடித்துக் கொண்டு நீச்சல் பழகியது. காவேரி ஆற்றங்கரையில் வசித்த ப்ரியாவுடன் காதலில் விழுந்தது, தன் தந்தையின் ஆட்சேபணைகளை மீறி அவரையே திருமணம் செய்து கொண்டது, தனது 1.5 ஏக்கர் நிலத்தில் நெல், கரும்பு, உளுந்து, எள்ளு எனப் பயிரிட்டது எனப் பல கதைகள்..
இதில் முதல் மூன்று பயிர்களில் கொஞ்சம் லாபம் கிடைக்கிறது. ”நெல்லுக் காசுல கரும்பு நடுவோம்... கிடைக்கிற காச நிலத்திலேயே போட்டுடறது,” என விளக்குகிறார். எள்ளு மட்டும் வீட்டுக்குத் தேவைப்படும் எண்ணெய்க்கு. எள் விதைகள் மரச்செக்கில் ஆட்டி எடுக்கப்பட்டு ‘நல்லெண்ணையாக’, பெரிய பானைகளில் சேமிக்கப்படுகிறது. ”அதுல சமையல் பண்ணுவோம்.. ஊறுகா போடுவோம்.. அவுரு டெய்லி அந்த எண்ணெயில்தான் வாய் கொப்பளிப்பாரு.. எண்ணெய் தேச்சிக் குளிப்பாரு,” என்கிறார் ப்ரியா. வடிவேலன் சிரிக்கிறார். ”எண்ணெய்க் குளியல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்,” என்கிறார் வடிவேலன்.
வடிவேலனுக்குப் பல விஷயங்கள் பிடிக்கும். அவையனைத்துமே எளிமையான சந்தோஷங்கள். இளம் வயதில், நண்பர்களுடன் ஆற்றில் மீன் பிடித்து, சுட்டுத் தின்பது.. கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டில் மட்டுமே இருக்கும் டிவியில் சினிமா பார்ப்பது.. ‘எனக்கு டிவி பாக்க ரொம்பப் புடிக்கும்.. டிவில படம் சரியாத் தெரிலன்னாக் கூட, அதுல, ‘ஒய்ய்ங்’னு வர்ற சத்தத்த கேட்டுகிட்டு இருப்பேன்!’.
அந்த வசந்த கால நினைவுகள், காலைச் சூரியன் எழுகையில் இருள் போல விரைவில் மங்கி விடுகின்றன. ‘நெலத்த மட்டுமே நம்பி பொழைக்க முடியாதுங்க.. ஏதோ வாடகைக் கார் ஓட்டறதுனால சமாளிக்க முடியுது.” அவரது டொயோட்டா ஈடியோஸ் காரில், அவர் ஊர் திருவளர்ச் சோலையில் இருந்தது எங்களை காவிரியாற்றங்கரைக்கு அழைத்து வந்தார். இந்தக் காரை அவர் 8% வட்டிக்கு தனியாரிடம் இருந்தது கடன் வாங்கியிருக்கிறார். மாதம் 25000 திருப்பிச் செலுத்த வேண்டும்.. பணம் புரட்டறது எப்பவுமே பிரச்சினைதான் என்கிறார்கள் தம்பதியினர். வீட்டிலிருக்கும் தங்கம்தான் கஷ்டகாலத்தை எதிர்கொள்ள உதவுகிறது. ”எங்கள மாதிரி ஆட்கள் வீடு கட்ட லோன் வாங்கனும்னா, 10 செருப்புத் தேய்ஞ்சு போயிரும்.. அவ்வளவு நடக்க விட்ருவாங்க,” என்கிறார் வடிவேலன்.
மாலை நேர வானம், பிங்க், நீலம், கருப்பு என ஒரு அழகிய ஆயில் பெயிண்டிங் போல இருக்கிறது. எங்கிருந்தோ ஒரு மயில் அகவுகிறது. ”ஆத்தில மரநாய்கள் நிறைய இருக்கும்,” என்கிறார் வடிவேலன். கொஞ்சம் தள்ளி, சிறுவர்கள் ஆற்றில் குதித்து மரநாய்கள் போலவே நீந்துகிறார்கள். ”நானும் இந்த வயசில இப்படித்தான் இருந்தேன்.. வேற எங்களுக்கு என்ன பொழுதுபோக்கு?.”
வடிவேலன் ஆற்றை தெய்வமாக வணங்குபவர். ”ஒவ்வொரு வருஷமும், ஆடி 18-க்கு, காவிரியாத்துக்குப் போய், பூ, பழம் வச்சி, தேங்காய் ஒடச்சி சாமி கும்பிட்டுட்டு வருவோம். அதற்கு பதிலாக, காவிரியும், கொள்ளிடமும் அவர்களது வயல்களுக்கு கடந்த 2000 வருடங்கள் போலவே நீரை அள்ளித் தருகின்றன.
*****
”புழுக்கலும், நோலையும், விழுக்கு
உடை மடையும்,
பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து;
துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி;
‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும்
பசியும், பிணியும், பகையும், நீங்கி;
வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி;
மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும்,
மூதில் பெண்டிர்”
2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ்க்காவியமான சிலப்பதிகாரத்தில், இந்த இறை வழிபாடு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ”இன்றும் இந்த வழிபாட்டு முறை நடைமுறையில் இருந்து வருகிறது,” என்கிறார், Old Tamil Poetry என்னும் வலைப்பூவை நடத்தி வரும் செந்தில்நாதன். (இந்திர விழவு, 68-75 வரிகள்)
பழங்காலத்தில் இருந்தே பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் புழங்கிவரும், எள்ளுக்குப் பல உபயோகங்கள் உள்ளன. எண்ணெயாகச் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. எள்ளு விதைகள், இனிப்புகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை மற்றும் கறுப்பு எள்ளு பலகாரங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. நீத்தார் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
எள்ளு விதையில், 50% எண்ணெய், 25% புரதம் மற்றும் 15% மாவுச் சத்து உள்ளது. ”எள்ளு மற்றும் நைஜர் விதைகள், சக்தியின் உறைவிடம். வைட்டமின்கள் ஈ, ஏ, பி மற்றும் சி இதில் உள்ளது. கால்சியம், பாஸ்ஃபரஸ், இரும்பு, காப்பர், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற நுண் சத்துக்களைக் கொண்டது,” என்கிறது இந்திய வேளாண் ஆய்வுக் குழுமத்தின் கையேடு . எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்ட பின்னர் மிஞ்சும் புண்ணாக்கு, கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்கப்படுகிறது.
எள்ளு (Sesamum indicum L.), இந்திய நாட்டில் பிறந்த, மிகப் பழமை யான எண்ணெய் வித்து. மிகப் பழங்காலத்திலிருந்தே இங்கே பயிரிடப்பட்ட வரலாற்றைக் கொண்டது. இந்தியா உலகின் மிகப் பெரும் எள்ளு உற்பத்தியாளர். உலகில் எள்ளு பயிரிடப்படும் நிலப்பரப்பில் 24% இந்தியாவில் உள்ளது என இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கையேடு சொல்கிறது. எண்ணெய் வித்துகள் பயிரிடப்படும் நிலப்பரப்பில் 12-15%, 7-8% உற்பத்தி, 9-10% நுகர்வு இந்தியாவில் நிகழ்கிறது என அக்கையேடு மேலும் சொல்கிறது.
’Indian Food, A historical companion’, என்னும் தன் புத்தகத்தில், எள் இந்தியாவில், பழங்காலத்தில் இருந்தே இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக நூலாசிரியர் கே டி அச்சய்யா தெரிவிக்கிறார்.
தென்னிந்தியாவின் துறைமுகங்களில் இருந்து முதலாம் நூற்றாண்டிலேயே எள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. Periplus Maris Erythrai (எரித்ரேயக் கடலைச் சுற்றிய பயணம்), பெயர் தெரியாத கிரேக்க மொழி பேசும் எகிப்து மாலுமி ஒருவர், தன் காலத்தில் நிகழ்ந்த வணிகம் தொடர்பான பல தகவல்களை தன் சுய அனுபவத்தில் இருந்தது எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியான கொங்குநாட்டில் இருந்து, தந்தம், மஸ்லின், நல்லெண்ணெய், தங்கம் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன என அதில் குறிப்பிட்டிருக்கிறார். நல்லெண்ணெயுடன் ஏற்றுமதி செய்யப்பட்ட இதர பொருட்களை நோக்கினால், நல்லெண்ணெயின் அன்றைய மதிப்பு நமக்குப் புரிய வரும்.
உள்ளூரிலும் எள் வணிகம் சிறப்பாக நடைபெற்றது என அச்சய்யா சொல்கிறார். மாங்குடி மருதனார் எழுதிய, ‘மதுரைக் காஞ்சி’, நூலில், சந்தையைப் பற்றிய விவரங்களைச் சொல்கிறார். ‘மிளகுப் பொதிகள், நெல், சிறுதானியம், பருப்பு, எள் உள்ளிட்ட 16 வகையான தானியப் பொதிகள் தானிய வணிகனின் சாலையில் வைக்கப்பட்டிருந்தன என்னும் தகவலை அதில் கவிஞர் சொல்கிறார்.
நல்லெண்ணெய்க்கு அரசகுல ஆதரவும் இருந்தது என அச்சய்யாவின் புத்தகம் சொல்கிறது. விஜயநகர அரசரான கிருஷ்ண தேவராயர் காலத்தில் வசித்து வந்த டொமிங்கோ பயஸ் என்னும் போர்த்துக்கீசிய வணிகர், அரசரைக் குறித்து, இவ்வாறு சொல்கிறார்:
”காலையில் சூரியன் எழும் முன்பே முக்கால் வீசை நல்லெண்ணெயைக் குடிக்கும் அரசர், அதை உடலெங்கும் பூசிக் கொள்கிறார். பின்னர், தன் இடுப்பில் சுற்றியுள்ள சிறு ஆடையுடன், எடைகளைத் தூக்கிப் பயிற்சி செய்கிறார். அதன் பின்னர், வாள் பயிற்சியில் ஈடுபட்டு, அருந்திய எண்ணெய் முழுவதும் வியர்வையாக வெளியேறும் வரை பயிற்சி செய்கிறார்.”
வடிவேலனின் தந்தை பழனிவேல், வடிவேலனின் முன்னெடுப்புகளை ஆதரித்திருப்பார். வடிவேலன் சொல்வதை வைத்துப் பார்த்தால், அவர் தந்தை விளையாட்டுகளை விரும்புபவராக இருந்திருப்பார் என அறிந்து கொள்ள முடிகிறது. ”அவுரு ஒடம்ப நல்லாப் பாத்துகிட்டாரு. கர்லா தூக்கினாரு.. தென்னந்தோப்பில குஸ்தி பழகினாரு.. சிலம்பம் நல்லாத் தெரியும்!.”
வடிவேலனின் குடும்பம், தங்கள் நிலத்தில் விளையும் எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைத்தான் எப்போதும் உபயோகித்து வந்துள்ளார்கள். எப்போதாவது ஒருமுறை தேங்காய் எண்ணெயும் உபயோகிப்பது உண்டு. பெரிய பெரிய பாத்திரங்களில் எண்ணெயைச் சேமிப்பார்கள். ”எனக்கு நல்லா நினைவிருக்கு.. அப்பா ராலே சைக்கிள்ள உளுந்து மூட்டைகளைக் கட்டிகிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டுக்குப் போவாரு.. திரும்பி வரும்போது, மிளகாய், கடுகு, மிளகு, புளின்னு வாங்கிட்டு வருவாரு.. ஒரு வருஷத்துக்குத் தேவையான பொருள வாங்கி சமையலறையில பாதுகாப்பா வச்சிக்குவோம்.”
*****
வடிவேலனும், ப்ரியாவும் 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் திருமணம், திருச்சிக்கு அருகிலுள்ள வயலூரில் நடந்தது. “எங்கப்ப வர்ல.. எங்க கல்யாணத்த அவுரு ஒத்துக்கல,” என்கிறார் வடிவேலன். “கிராமத்துக்கு வந்து எங்க சொந்தக்காரங்களக் கூட்டிட்டு போக வந்த நண்பர்கள் எங்கப்பா கிட்ட போயி, வர்றீங்களான்னு கேட்ட்டுட்டாங்க.. செமக் கோவம் வந்துருச்சு அவருக்கு!,” என வெடித்துச் சிரிக்கிறார் வடிவேலன்.
நாம் வடிவேலன் தம்பதியினரின் வீட்டில் அமர்ந்திருக்கிறோம். அருகில் உள்ள ஷெல்ஃபில், கடவுள் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. சுவற்றில், குடும்பப் புகைப்படங்கள் – செல்ஃபிகள், விடுமுறைச் சுற்றுலாப் புகைப்படங்கள் சுவற்றில் நிறைந்திருக்கின்றன. ப்ரியாவின் ஒரே பொழுதுபோக்கான தொலைக்காட்சிப் பெட்டியும் உள்ளது. நாங்கள் சென்ற போது குழந்தைகள் பள்ளி சென்றிருந்தார்கள். அவர்கள் நாய் உள்ளே வந்து ஹலோ சொன்னது.. ”இது ஜூலி,” என அறிமுகம் செய்கிறார். “அழகா இருக்கறா,” என வியந்து சொல்கிறேன். “ஆண் நாய்,” எனச் சிரிக்கிறார் வடிவேலன். ஜூலிக்கு அது பிடிக்கவில்லை போல. வெளியே சென்றுவிட்டது.
ப்ரியா எங்களைச் சாப்பிட அழைக்கிறார். வடை, பாயசத்துடன் விருந்தே தயார் செய்து வைத்திருந்தார். வாழை இலையில் உணவைப் பரிமாறுகிறார். அற்புதமான, சுவையான விருந்து. ரொம்ப ஹெவி!
உண்ட மயக்கத்தைத் தவிர்க்க, நாங்கள் எள் பயிரிடுதலின் பொருளாதாரத்தைப் பேசத் தொடங்குகிறோம். ”இதுல என்ன கிடைக்கும்?.” “ரொம்பக் கஷ்டங்க,” என்கிறார் வடிவேலன். ”பொதுவாகவே விவசாயத்துல லாபமே கிடையாது.. ஆனால், இடுபொருட்கள் விலை மட்டும் கூடிகிட்டே போவுது. யூரியா ரொம்ப விலையேறிருச்சு.. மத்த உரங்களும் அப்படியே. எள்ளு விதைக்க காட்ட உழுகனும். அப்பறம் நீர் பாய்ச்சறதுக்கு பாத்தி பிடிக்கனும். சூரியன் இறங்கனதுக்கப்பறம்தான் நீர் பாய்ச்சறது.”
விதைத்த மூன்றாம் வாரத்தில் முதல் நீர் பாய்ச்சுவோம் என விளக்குகிறார் ப்ரியா. அதுக்குள்ள பயிர் இந்த உயரத்துக்கு வந்துரும்னு, தரையில் இருந்து 9-10 அங்குல உயரத்தைக் காட்டுகிறார். “அதுக்கப்பறம் சீக்கிரமா வளரத் தொடங்கிரும். அஞ்சாம் வாரம் களையெடுக்கனும்.. அப்பறமா யூரியா போட்டுட்டு, 10 நாளக்கி ஒருவாட்டி, தண்ணி கட்டிரனும்.. வெயில் நல்லா அடிச்சா, மகசூல் நல்லா இருக்கும்.”
வடிவேலன்
வேலைக்குப் போவதால், ப்ரியா தான் தோட்டத்தைப் பார்த்துக் கொள்கிறார். அவர்களது 1.5 ஏக்கர் நிலத்தில், எப்போதுமே குறைந்தது
2 பயிர்கள் இருக்கும். அவர், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளை
முடித்து விட்டு, சாப்பாடு கட்டிக் கொண்டு, சைக்கிளில் தோட்டம் சென்று, வேலை செய்யும்
கூலியாட்களுடன் வேலை செய்ய இணைந்து கொள்கிறார். “10 மணிக்கு எல்லாருக்கும் டீ வாங்கிக்
குடுத்தரணும். சாப்பாட்டுக்கப்பறம், மறுபடியும் டீயும், பலகாரமும் வாங்கித்தரணும்.
வழக்கமா, சுய்யமும், உருளைக் கிழங்கு போண்டாவும் வாங்கித்தருவோம்.” பேசிக் கொண்டே மேலும்
கீழும் நடக்கிறார். வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே இருக்கிறார். அவர்களது தோட்டத்தைப்
பார்க்கக் கிளம்பும் போது, ”கொஞ்சம் ஜூஸ் குடிங்க,” எனக் கொண்டு வருகிறார்.
*****
எள்ளு வயல் அழகே உருவான ஒன்றாக இருக்கிறது. பூக்கள் மிகவும் மென்மையானவை. அணிகலன் போல இருக்கின்றன. அவை பிங்க் மற்றும் வெள்ளை வண்ணங்களில், சிஃபான் சேலைகளை, ஃப்ரென்ச் நக வேலைப்பாடுகளை நினைவுபடுத்துகின்றன. இவற்றிற்கும், இவற்றிலிருந்து உருவாகி வரும் கலங்கலான நல்லெண்ணெய்க்கும் தொடர்பே இல்லை எனத் தோன்றும்.
எள்ளுச் செடி, கரும்பச்சை நிற இலைகள் கொண்ட உயரமான ஒல்லியான ஒரு செடி. அதன் தண்டுகளை ஒட்டி, பச்சை நிற எள்ளுக் காய்கள், காய்த்திருக்கின்றன. ஒவ்வொரு காயும், பாதம் பருப்பின் அளவில் உள்ளன. ஏலக்காய் போன்ற வடிவம். ஒரு காயை உடைத்துக் காண்பிக்கிறார் ப்ரியா. உள்ளே மங்கலான வெள்ளை நிறத்தில் எள்ளு விதைகள் உள்ளன. ஒரு ஸ்பூன் எண்ணெய்க்கு எத்தனை விதைகளை நசுக்க வேண்டும் என்பதை நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. ஒரு இட்லிக்குக் குறைந்த பட்சம் 2 ஸ்பூன் எண்ணெய், இட்லிப் பொடியுடன் தேவைப்படுகிறது.
ஏப்ரல் மாத வெயிலின் உக்கிரம், மூளையை யோசிக்கவே விடமாட்டேன் என்கிறது. பக்கத்தில் உள்ள ஒரு தோப்பை நாடிச் செல்கிறோம். அங்கேதான், பெண் வேலையாட்களும் ஓய்வெடுப்பார்கள் என்கிறார் வடிவேலன். பக்கத்தில் உள்ள கோபால் என்பவரின் உளுந்துத் தோட்டத்தில் பல பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சூரியனின் கொடுமையைச் சமாளிக்க, தலையில் துண்டைக் கட்டியிருக்கிறார்கள். மதிய உணவுக்கும், டீ குடிக்கவும் சற்று நேரம் எடுத்துக் கொண்ட பின்னர், தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள்
அனைவருமே முதிய பெண்கள். அவர்களில் மிக வயதானவர் மாரியாயி. வயது எழுவதற்கும் மேல். கூலி வேலை செய்யாத போது, துளசி மாலை கட்டி எடுத்துக் கொண்டு போய், ஸ்ரீரங்கம் கோவிலில் விற்று வருகிறார். மென்மையாகப் பேசுகிறார். ஆனால், சூரியன் கருணையில்லாமல், சுட்டெரிக்கிறது.
ஆனால், எள்ளுச் செடிக்கு இந்த வெயில் ஒரு பிரச்சினையில்லை. அதுக்கு எதுவுமே பிரச்சினையில்லங்க என்கிறார் வடிவேலுவின் அண்டைத் தோட்டக்காரர் எஸ்.கோபால். வடிவேலனும், ப்ரியாவும் தலையாட்டுகிறார்கள். இருவருமே மருந்து அடிப்பது, நீர்ப் பாசனம் போன்ற வழக்கமான வேளாண் பிரச்சினை’களைப் பற்றி அதிகம் பேசாமல், போகிற போக்கில் பேசிச் செல்கிறார்கள். எள்ளு, சிறு தானியப் பயிர்களைப் போல, பயிர் செய்ய எளிதான பயிர். அதிகக் கவனம் தேவைப்படாத ஒன்று. ஆனால், மழை பருவம் தவறிப் பெய்தால், அது எள்ளுப் பயிரை நாசம் செய்து விடும்.
2022 ஆம் ஆண்டு அதுதான் நடந்தது. “ஜனவரி-ஃபிப்ரவரி மாசத்துல, பயிர் இளசா இருக்கைல மழை பேஞ்சுது. அதனால, பயிர் வளராம அப்படியே நின்னு போச்சு.. எப்பப் பேயக் கூடாதோ அப்பப் பேஞ்சுது,” என்கிறார் வடிவேலன். இப்போது பயிர் அறுவடைக்கு வந்து விட்டது. ஆனால், மகசூல் குறைவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கிறார் வடிவேலன். “போனவாட்டி, 30 சென்ட்ல 150 கிலோ எள்ளு வெளஞ்சுது. இந்த வாட்டி, 40 கிலோவத் தாண்டுமான்னே சந்தேகமா இருக்கு.”
40 கிலோ அவர்களின் தேவைக்கே பத்தாது. ‘”அரவை இயந்திரத்தில், விதைகள் பேட்ச் பேட்சாக அரைப்போம். ஒரு பேட்ச்ங்கறது 15-18 கிலோ எடை இருக்கும். இப்ப இத அரைச்ச 7-8 கிலோ எண்ணெய் தேறும். எங்க வீட்டுக்கே இன்னும் ரெண்டு பேட்ச் விதைகள் வேணும்,” என விளக்குகிறார் ப்ரியா. அடுத்த நாள் எங்களை எண்ணெய் ஆலைக்கு அழைத்துச் செல்கிறேன் என உறுதியளிக்கிறார். இந்த எள் விதைகள் எப்படி அறுவடை செய்யப்படுகின்றன?
அதைக்
காண கோபால் எங்களை அன்போடு அழைக்கிறார். அவரது எள்ளு வயல் சற்றுத் தொலைவில், ஒரு செங்கல்
சூளையை அடுத்து இருக்கிறது. அங்கேயே தங்கி செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள்,
கல் ஒன்றுக்கு ரூபாய் 1 எனக் கூலி பெறுகிறார்கள். அவர்களது குழந்தைகளும் அங்கேயே வளர்கின்றன.
குழந்தைகளின் முதன்மைப் பணி ஆடு, கோழிகள் மேய்ப்பது. செங்கல் சூளைப் பணியாள் எம்.சீனியம்மாள்
எங்களுக்கு உதவி செய்ய முன்வருகிறார்.
அறுவடை செய்யப்பட்ட எள்ளுப் பயிர்கள் ஓரிடத்தில் அடுக்கப்பட்டு, தார்பாயினால் மூடப்பட்டுள்ளன. கோபால், தார்பாலினை முதலில் அகற்றுகிறார். சிலநாட்கள் அப்படி தார்பாயினால் மூடி வைத்திருந்தால், உள்ளே உருவாகும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தினால், எள்ளுக் காய்கள் வெடித்து, எள் விதைகள் சிதறும். சீனியம்மாள் எள்ளுச் செடிகளை ஒரு தடியினால் புரட்டிப் போடுகிறார். முற்றிய எள்ளுக் காய்கள் தயாராக உள்ளன. வெடித்து, எள் விதைகள் கீழே விழுகின்றன. அவற்றைச் சேகரித்து குவியலாக்குகிறார். மொத்த எள்ளுச் செடிகளிலும் உள்ள அனைத்து விதைகளும் சிதறும் வரை இதைத் தொடர்ந்து செய்கிறார்.
எள் விதைகள் நீக்கப்பட்ட செடிகளை, ப்ரியாவும் கோபாலும் சிறு சிறு கட்டுக்களாக கட்டுகிறார்கள். ”ஒரு காலத்துல ரைஸ் மில்லுல்ல நெல்லு வேகவைக்க உதவும். இப்ப அதெல்லாம் போச்சு.. சும்மா எரிச்சிர வேண்டியதுதான்,” என வடிவேலன் விளக்குகிறார்.
இப்படி நிறைய விஷயங்கள் காணாம போச்சு என்கிறார் கோபால். வயல்களில் சிறு/குறும் செடிகள் உயிர்வேலியாக இருந்தது அழிந்து போனது பற்றி அவருக்கு மிக்க வருத்தம். ”உயிர்வேலி இருந்த போது, வங்குகள்ல நரிகள் இருந்துச்சு.. அதுங்க தானியங்கள சேதம் பண்ணும் பறவைகளைப் புடிச்சித் தின்னுரும்.. இப்ப நரிகளே இல்லாம போச்சு,” என ஆதங்கப்படுகிறார்.
”ரொம்ப உண்மை,” என ஆமோதிக்கிறார் வடிவேலன். ”ஒரு காலத்துல எங்க பாத்தாலும் நரியா இருக்கும்.. எனக்குக் கல்யாணம் ஆவறதுக்கு முன்னாலே, ஆத்தோரத்துல, ஒரு குட்டி.. ஒடம்பெல்லாம் முசுமுசுன்னு மசுரா இருந்துச்சு.. எங்கப்பா கூட, இதப் பாத்தா நாய் மாதிரியே இல்லையேன்னு சொன்னார்.. அன்னிக்கு ராத்திரி, எங்க வீட்டுக்குப் பின்னாலே நிறைய நரி வந்து ஊளையிட்டுச்சு.. அப்பதான் புரிஞ்சுது.. அடுத்த நாள் கொண்டு போய் எடுத்த இடத்துலேயே விட்டுட்டு வந்துட்டேன்.”
நாங்கள்
பேசிக் கொண்டிருக்கையில், சீனியம்மாள், செடியின்
தூசி தும்பு நிறைந்த எள்ளு விதைகளை, முறத்தில் அள்ளி உயர்த்தி, கொட்டி சுத்தம் செய்கிறார். உயரத்தில் இருந்து அவர் கொட்டுவதை நுட்பமாக ஆட்டி
ஆட்டி செய்கிறார். பார்க்கையில் அழகாக இருந்தாலும், கடுமையான நுட்பமான பணி. அவரது தோளுயரத்தில்
இருந்து எள் விதைகள் மழை போலும், இசை போலும் வீழ்கின்றன.
*****
ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கா மரச்செக்கு நிறுவனத்தில், ரேடியோவில் பழைய திரைப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உரிமையாளர் ஆர்.ராஜூ, கல்லாப்பெட்டியின் பின்னே அமர்ந்திருக்கிறார். எள்ளை அரைத்துக் கொண்டிருக்கும் செக்கு முனகுகிறது. அதனருகில் உள்ள பெரிய எவர்சில்வர் பாத்திரங்களில் தங்க நிறத்தில் நல்லெண்ணெய் ததும்பிக் கொண்டிருக்கிறது. பின் கட்டில் எள் விதைகள் காய்ந்து கொண்டிருக்கின்றன.
”18 கிலோ எள்ளை ஆட்ட 1.5 மணி நேரமாகும். 1.5 கிலோ வெல்லம் போட்டு அரைக்கனும். 8 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். பெரிய ஸ்டீல் மில்லுல கெடைக்கறத விடக் கொஞ்சம் கம்மியாக் கிடைக்கும்,” என ராஜூ நமக்கு விளக்கிச் சொல்கிறார். ஒரு கிலோ எள் விதையை அரைக்க 30 ரூபாய் வாங்குகிறார். மரச் செக்கில் ஆட்டிய எண்ணெயை, கிலோ 420 ரூபாய் என விற்கிறார். ”நாங்க ஃபர்ஸ்ட் க்வாலிட்டி விதைகள, நேரடியா விவசாயிகள்ட்ட இருந்து, கிலோ 1300 ரூபாய்னு வாங்கறோம்.. அதே மாதிரி நல்ல தரமான பனைவெல்லம் கிலோ 300 ரூபாய்னு வாங்கறோம்.. அதனால, எண்ணையோட வாசனை ரொம்ப நல்லா இருக்கும்.”
10 மணியில் இருந்து 5 மணி வரை, செக்கு, நான்கு முறை ஓடுகிறது. ஃப்ரெஷ்ஷாக பிழியப்பட்ட எண்ணெய் சூரிய வெளிச்சத்தில், தெளிவாக மாறும் வரை வைக்கப்படுகிறது. கொஞ்சம் எண்ணையுடன் இருக்கும் புண்ணாக்கு, கால்நடைகளுக்கு உணவாகிறது. கிலோ 35 ரூபாய் என விற்கப்படுகிறது.
ஒரு ஏக்கர் எள் விளைவிக்க 20 ஆயிரம் செலவாகும் எனச் சொல்கிறார் ராஜூ. ஒரு ஏக்கரில் 300 கிலோ எள் விளையும். அப்படி விளைந்தால், ஒரு ஏக்கருக்கு 15 முதல் 17 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் எனக் கணக்கிடுகிறார். எள் விளையும் காலம் மூன்று மாதம்.
அங்கேதான்
பிரச்சினை என்கிறார் வடிவேலன். “நாங்க கஷ்டப்பட்டு உழைச்சா, அதனால யாருக்கு லாபம் சொல்லுங்க?
வியாபாரிகளுக்குத்தான்.எங்ககிட்ட இருந்து கைமாத்தும் போது, அவங்க ரெண்டு மடங்கு லாபம்
பாத்துருவாங்க.. அவங்களோட பங்களிப்பு என்ன? ஒன்னும் கிடையாது,” தலையசைக்கிறார். “அதனாலத்தான் நாங்க எங்க தேவைக்கு மட்டுமே பயிர்
பண்ணிக்கிறோம்..போதும்.”
திருச்சியின் காந்தி மார்க்கெட்டில் உள்ள எள் விற்பனை நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. உழவர்கள் எள், உளுந்து, பச்சைப்பயறு வகைகளை சாக்குப் பையில் கொண்டு வந்து அதன் மீது அமர்ந்திருந்திருக்கிறார்கள். வணிகர்கள் அவர்களின் முன்னோர்கள் உருவாக்கிய பெரும் கிடங்குகள் கொண்ட கடைகளின் உள்ளே அமர்ந்திருக்கிறார்கள். 45 வயதான பி.சரவணன், இன்னிக்கு மார்க்கெட்டுக்கு உளுந்து அதிகம் வந்திருக்கு என்கிறார். ஆண், பெண் தொழிலாளர்கள், தானியங்களைச் சல்லடையில் சலித்து, சாக்குகளில் கொட்டுகிறார்கள். ”உள்ளூர்ல இப்பதான் எள் அறுவடை தொடங்கியிருக்கு.. மார்க்கெட்டுக்கு இனி வர ஆரமிச்சிரும்,” என்கிறார் சரவணன்.
நல்ல அறுவடைன்னாக் கூட, தன் தந்தை காலத்தில் கிடைத்த எள் மகசூலில் நாலில் ஒரு பங்குதான் இன்னிக்குக் கிடைக்கும் என்கிறார் 55 வயதான எஸ்.சந்திரசேகரன். ”ஜூன் மாசத்துல, காந்தி மார்க்கெட்டுக்கு தினசரி 2000 மூட்டை எள் வரத்து இருக்கும்.. கடந்த சில வருஷமா, அது 500 மூட்டையாக் குறைஞ்சு போச்சு. விவசாயிகள் எள் பயிரிடறத விட்டுட்டாங்க. பயிர் பண்றது ரொம்பக் கஷ்டம். விலையும் கிலோவுக்கு 100-130 ந்னுதான் கிடைக்குது.. அதனால, விவசாயிகள் உளுந்து சாகுபடிக்கு மாறிட்டாங்க.. உளுந்துன்னா மெஷின்ல அறுவடை பண்ணி, ஒரே நாள்ல சாக்குல புடிச்சிரலாம்.”
ஆனா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதையும், நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதையும் சுட்டிக் காட்டுகிறேன். ”அப்புறம் ஏன் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கறதில்லை?’” ”அது மார்க்கெட்டப் பொறுத்தது. மத்த மாநிலங்கள்ல இருக்கற டிமாண்ட், சப்ளையைப் பொறுத்தது.. உற்பத்தி அதிகமாச்சினா, மில்லுல எள்ளு தேங்கிப் போயிரும். விலையும் குறைவா இருக்கும்.”
எங்கு
பார்த்தாலும், எந்த வேளாண் பொருள் விலையைக் கேட்டாலும் இதே கதைதான். சந்தைங்கறது சிலருக்கு
நல்லது செய்யுது. பலருக்குக் கெடுதல் செய்யுது. நல்லது யாருக்குன்னு நாம சொல்லவே வேண்டியதில்லை.
*****
சமையல் எண்ணெய் தொழில் ஒரு நீண்ட, நெடிய, சிக்கலான இறக்குமதி வரலாற்றைக் கொண்டது. தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் சமூகவியல் மற்றும் திட்ட வகுத்தல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சா, ”1976 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியா தனது தேவையில் 30% அளவை இறக்குமதி செய்து வந்தது. தற்சார்பு நிலையில் இருந்து ஆழமான துயரநிலையை நோக்கி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையில், ‘இந்திய அரசாங்கம், பால் உற்பத்திக் கூட்டுறவுகளில் பெற்ற வெற்றியை எண்ணெய் வித்துக்கள் துறையிலும் நகலெடுக்க விரும்பியது’”, எனச் சொல்கிறார்.
”அரசு தொடங்கிய மஞ்சள் புரட்சி (எண்ணெய் வித்துகள் உற்பத்தி) திட்டம் இருந்தாலும், 1990க்குப் பின்னர், எண்ணெய் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிர்களுக்கு அரசு கொடுத்து வந்த மானியங்கள், கொள்முதல் ஏற்பாடுகளின் விளைவாக, விவசாயிகள், எண்ணெய் வித்துக்களைப் பயிர் செய்வதை விட்டுவிட்டு, இந்தப் பயிர்களுக்கு மாறிவிட்டனர். 1994 ஆம் ஆண்டிற்குப் பிறகு இறக்குமதி ஊக்குவிக்கப்பட, இந்தோனேஷியாவில் இருந்து பாமாயிலும், அர்ஜெண்டினாவில் இருந்து சோயா பீன் எண்ணையும் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டது.”
”பாமாயிலும், சோயா பீன் ஆயிலும், மற்ற எண்ணெய்களை விட மலிவாக இருந்ததனால், வனஸ்பதி தயாரிப்பில் பெரிதும் உபயோகிக்கப் பட்டன. இதனால், பாரம்பரியமாக உபயோகிக்கப்பட்ட கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காயெண்ணை, கடலெண்ணெய் போன்ற எண்ணைகளுக்கான தேவைகள் குறைந்து போயின. இதன் விளைவாக, இந்த எண்ணெய் வித்துக்களுக்கான் தேவை குறைந்து போய், அவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. இதனால், இந்திய எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்வது லாபமில்லாத ஒன்றாக மாறியது’, என்கிறார் ரிச்சா குமார்.
இன்று நிலைமை எந்த அளவுக்குச் சென்றிருக்கிறது என்றால், பெட்ரோல், தங்கத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக மதிப்புள்ள இறக்குமதி சமையல் எண்ணெய்தான். மொத்த வேளாண் இறக்குமதியில் 40%மும், மொத்த இறக்குமதியில் 3%மும் ஆக சமையல் எண்ணெய் இருப்பதாக, சமையல் எண்ணெயில் தற்சாற்பை நோக்கி என்னும் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது. இந்தியத் தேவையில் 60% இன்று இறக்குமதி செய்யப்படுகிறது என அந்த அறிக்கை மேலும் சொல்கிறது.
*****
வடிவேலனின் குடும்பச் செலவுகளில் 60% த்தை, அவரது வாடகைக்கார் வருமானம் பார்த்துக் கொள்கிறது. அவரது கிராமத்துக்கு 2 கிலோமீட்டர் முன்பு இரண்டாகப் பிரியும் காவிரியைப் போல, அவரது வாழ்க்கையும் வேளாண்மை மற்றும் வாடகைக் கார் ஒட்டுதல் என இரண்டாகப் பிரிந்திருக்கிறது. ”விவசாயம் ரொம்பக் கஷ்டம்.. நெறய வேல.. ஆனா, எப்படி மகசூல் வரும்னு சொல்லவே முடியாது.”
வாடகைக் கார் ஒட்டுவது அவருக்கு வேலையாக இருப்பதால் (நீண்ட நேரம் ஓட்ட வேண்டிய காரணம்), வயல் வேலையை அவரது மனைவி பார்த்துக் கொள்கிறார். வீட்டு வேலையும் அவருடையதுதான். அவ்வப்போது வடிவேலன் உதவுகிறார். இரவில் நீர் பாய்ச்சுவது, அறுவடை இயந்திரத்தைத் தேடிக் கொண்டுவருவது போன்ற வேலைகள். ஒரு காலத்தில் கடுமையான வயல் வேலைகளையும் செய்து வந்தார் வடிவேலன். ”இப்போது செய்வதில்லை. குனிந்து மண்வெட்டி பிடித்து வேலை செய்தால் இடுப்பு பிடித்துக் கொள்கிறது. அதனால் காரை ஓட்ட முடிவதில்லை.”
எனவே வடிவேலன் தம்பதியினர், கடும் வயல் வேலை செய்யக் கூலித் தொழிலாளிகளை அமர்த்திக் கொள்கின்றனர். களையெடுத்தல், நாற்று நடுதல், எள் தாம்பு அடித்தல் போன்ற வேலைகளுக்கு வயதான பெண்களைப் பெரும்பாலும் பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.
உளுந்து பயிர் செய்வதும் கடினமான வேலைதான். “அறுவடைக்கு முன்னாலும், பின்னாலும் மழை பெஞ்சிருச்சு.. செடியக் காய வைக்கிறதுக்குள்ள ரொம்பக் கஷ்டப்பட்டோம்.” பெரிய கஷ்டம் என்கிறார் வடிவேலன். என் வீட்டு இட்லியில் இருக்கும் உளுந்தின் மீது எனது மதிப்பு மேலும் கூடுகிறது.
“எனக்கு 20 வயசு இருக்கறப்ப லாரி ஓட்டினேன்.. 14 சக்கர வண்டி. ரெண்டு ட்ரைவர் மாறி மாறி ஓட்டுவோம். இந்தியா முழுக்க போயிருக்கோம். உத்திரப் பிரதேசம், காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத்துன்னு..” அந்தப் பயணத்தில் என்னவெல்லாம் சாப்பிட்டோம் . (ஒட்டகப்பால் டீ, ரொட்டி, தால், முட்டைப் பொரியல்) எங்கே குளித்தோம் (பொதுவாக ஆறு, ஸ்ரீநகரில் மட்டும் குளிர் காரணமாகக் குளிக்கவில்லை), வண்டி ஓட்டுகையில் என்ன இசை கேட்டோம் (இளையராஜா பாடல்கள், தூக்கம் வராமலிருக்க குத்துப் பாடல்கள்.. ) என்று லிஸ்ட் போடுகிறார். அந்தக் காலங்களில் பொதுவாக நிலவிய நட்பு, கிசுகிசு, பேய்கள் எனப் பலதும் சொல்கிறார். ”ஒரு நாள் நைட் கம்பளியப் போத்திக்கிட்டு ரோட்டுல இறங்கிப் போனேன்.. அடுத்த நாள் பல பேரு அதக் கம்பளி போத்தின பேயப் பாத்ததா சொன்னாங்க,” எனச் சிரிக்கிறார்.
வீட்டில் இருந்து நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருந்ததால், தொலைதூரம் லாரி ஓட்டும் வேலையை விட்டு விட்டார். திருமணத்துக்குப் பின்னர் உள்ளூரில் மட்டுமே ஒட்டிக் கொண்டு, விவசாயத்தையும் பார்த்துக் கொண்டார். வடிவேலனுக்கும், ப்ரியாவுக்கும் இரண்டு பிள்ளைகள். பெண் பத்தாம் வகுப்பு படிக்கிறார், மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.
அவரது பிள்ளைப்பருவம் அவ்வளவு எளிதானதாக இல்லை. ”அப்போல்லாம் எங்கள யாருமே வளக்கலெ.. நாங்களே வளந்தோம்,” எனச் சிரிக்கிறார்.. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் அவருக்கு காலில் போட செருப்பு கிடைத்தது. அதற்கு முன்பு வரை, வெறுங்காலில்தான் செல்ல வேண்டும்.. பாட்டி பறித்துக் கொடுக்கும் கீரைக்கட்டை 50 பைசாவுக்கு விற்றுவர வேண்டும்.. ”சில பேரு அதிலையும் பேரம் பேசுவாங்க,” எனச் சலித்துக் கொள்கிறார். பள்ளிக்கூடத்தில் தரும் அரைக்கால் சட்டையையும், பனியனையும் போட்டுகிட்டு சைக்கிள்ள சுத்துவோம்.. அது ஒரு மூணு மாசத்துக்குத்தான் வரும்.வருஷத்துக்கு ஒருவாட்டிதான் வீட்ல துணி எடுத்துக் கொடுப்பாங்க.”
வடிவேலன் தற்போது தனது சிரமமான காலங்களைத் தாண்டி வந்து விட்டார். சிறு வயதில் ஒரு விளையாட்டு வீரர்.. ஓட்டப் பந்தயங்களில் ஓடிப் பரிசுகள் பெற்றிருக்கிறார். கபடி விளையாடியிருக்கிறார்.. ஆற்றில் நீந்தியிருக்கிறார்.. நண்பர்களுடன் சுற்றியிருக்கிறார்.. வீட்டில் அப்பாயி (அப்பாவின் அம்மா) ஒவ்வொரு இரவும் சொல்லும் கதைகளைக் கேட்டிருக்கிறார். “நான் பாதில தூங்கிருவேன்.. அப்பாயி அடுத்த நாள் விட்ட இடத்துல இருந்து சொல்லும்.. அவங்களுக்கு நிறயக் கதைகள் தெரியும், ராஜா, ராணி, சாமிக் கதைகள்னு..”
விளையாட்டு வீரரான வடிவேலனுக்கு மாவட்ட அளவில் விளையாடத் தேவையான ஷூ, நல்ல சாப்பாடு முதலியன கிடைக்கவில்லை. எனவே அவரால் மாவட்ட அளவில் விளையாட முடியவில்லை. வீட்ல பெரும்பாலும் கஞ்சிதான் இருந்தது. எப்போவாவது சில முறை இறைச்சி கிடைக்கும். பள்ளிக் கூடத்தில் மதியம் உப்புமா கிடைக்கும். இரவில் நீத்தண்ணிதான். தொட்டுக்க உப்பு. இதை அவர் அழுத்திச் சொல்கிறார்.. இப்போது தன் பிள்ளைகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவு வாங்கித் தரும் அளவுக்கு வசதி பெற்றிருக்கிறார்.
தான் பிள்ளைப்பருவத்தில் எதிர்கொண்ட துன்பங்கள் எதுவும் தன் பிள்ளைகளை அண்டிவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார். இரண்டாம் முறை, கொள்ளிட நதிக்கரையில் இருக்கும் அவர் ஊருக்குச் சென்ற போது, அவரது மனைவியும், மகளும் ஆற்று மணலைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள். ஆறு அங்குலம் தோண்டிய பின்னர், மணலில் நீர் ஊறியது. ”இது ரொம்ப சுத்தமான தண்ணி,” என்கிறார் ப்ரியா. மணலில் ஒரு மேட்டை உருவாக்கி, அதில் தன் ஹேர் பின்னை ஒளித்து வைத்து, மகளைக் கண்டு பிடிக்கச் சொல்கிறார். வடிவேலனும், அவர் மகனும், ஆழமில்லாத நீரில் குளிகிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நாங்கள் மட்டுமே இருக்கிறோம். மணலில், வீடு திரும்பிய மாடுகளின் காலடிகள் தெரிந்தன. ஆற்றோர நாணல்கள் சிலுசிலுத்தன. ஒரு பெரும் திறந்த வெளி எப்படி அழகாக இருக்க வேண்டுமோ, அப்படி இருந்தது. ”இது ஒங்க ஊர்ல கிடைக்குமா?,” எனக் கேட்கும் வடிவேலன் வீடு திரும்ப எங்களை வழிநடத்திச் செல்கிறார்.
*****
அடுத்த முறை நான் கொள்ளிடத்தைப் பார்க்கையில் ஒரு நகரத்தில் இருக்கும் உணர்வு.
அளவிட முடியாத ப்ரியம். ஆடிப்பெருக்கு கொண்டாடும்
ஆகஸ்டு (2023) மாதத்தில் வந்திருக்கிறேன். வரலாறும், கலாச்சாரமும், வழிபாடுகளும் சங்கமிக்கும்
கொள்ளிடக்கரைக்கு!
“ரொம்பக் கூட்டமா இருக்கப் போகுது,” என்று வடிவேலன் என்னை எச்சரிக்கிறார். ஸ்ரீரங்கத்தின் ஒரு அமைதியான சிறிய சாலையில் வண்டியை நிறுத்தி விட்டு வந்தார். நாங்கள் பக்தர்கள் வந்து வழிபடும், காவிரிக்கரையிலுள்ள அம்மா மண்டபத்துக்கு நடந்து செல்கிறோம். காலை 8:30 மணிக்கு அம்மா மண்டபம் நிறைந்த கூட்டம். படிகள் முழுதும் மக்கள், வாழையிலையில் தேங்காய், பூ, பழம், கற்பூரம் என வழிபாடு நடக்கிறது. திருமணம் போன்ற கொண்டாட்டம். பெரும் திருமணம்.
புதிதாகத் திருமணமாகிய தம்பதிகள், தங்கள் குடும்பத்துடன் அர்ச்சகர்களைச் சூழ்ந்திருக்கிறார்கள். புது மணப்பெண்கள் தங்கள் தாலியை புதிய கயிற்றில் கோர்த்துப் போட அவர்கள் உதவுகிறார்கள். பின்னர் கணவனும் மனைவியும் பக்தி சிரத்தையுடன் கும்பிட்டு, தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த திருமண நாள் மாலைகளை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள் மஞ்சள் கயிற்றை ஒருவர் இன்னொருவர் கழுத்தில் கட்டுகிறார்கள். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் குங்குமமும், இனிப்புகளும் வழங்குகிறார்கள். திருச்சியின் புகழ்பெற்ற உச்சிப்பிள்ளையார் கோவில், ஆற்றின் மறுகரையில் காலைச் சூரிய ஒளியில் மின்னுகிறது!
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்து வருவது போல, காவிரி, மக்களின் பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களையும் ஏந்திக் கொண்டு விரைந்து செல்கிறது. செல்லும் வழியில் நெல் வயல்களைத் தன் நீர்வளத்தால் செழுமையாக்கிக் கொண்டு. நடந்தாய் வாழி காவேரி!
தற்சார்பிலிருந்து ஆழ்ந்த துயர நிலைக்கு: இந்தியாவின் தெளிவற்ற மஞ்சள் புரட்சி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை யைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்த அதன் ஆசிரியர் டாக்டர்.ரிச்சா குமாருக்கு, இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான நிதிநல்கை, 2020 ஆம் ஆண்டுக்கான, அஸீம் ப்ரேம்ஜி பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெறப்பட்டது.
தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி