"ஏதே ரொட்டி கத் மில்தி ஹை, சிட்டா சாரே ஆம் மில்தா ஹை [இங்கு உணவுக்கு தட்டுப்பாடு, ஆனால் ஹெராயின் மட்டும் எளிதாகக் கிடைக்கிறது]".
ஹர்வன்ஸ் கோரின் ஒரே மகனும் போதைக்கு அடிமையானவர். "நாங்கள் அவரைத் தடுக்க முயற்சிக்கிறோம், ஆனால் அவர் இன்னும் போராடி, எல்லா பணத்தையும் எடுத்துச் சென்று போதைப்பொருளுக்கு செலவழிக்கிறார்" என்று 25 வயதில் புதிதாக தந்தையானவரின் மகிழ்ச்சியற்ற தாய் கூறுகிறார். சிட்டா (ஹெராயின்), ஊசி மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் மாத்திரை வடிவில் தங்கள் கிராமத்தில் எளிதாகக் கிடைக்கின்றன என்று அவர் கூறுகிறார்.
அரசு நினைத்தால் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த முடியும். இதேநிலை நீடித்தால், இன்னும் ஏராளமானோரை இழக்க நேரிடும்," என்று கூறும் ஹர்வன்ஸ் கோர் ஒரு கூலித் தொழிலாளி. அவர் ரோக்கேகலன் கிராமத்தில் உருளைக்கிழங்கு சேமிப்பு கிடங்கில் வேலை செய்கிறார். மூட்டை கட்டும் வேலைக்கு ஒரு பைக்கு 15 ரூபாய் சம்பாதிக்கிறார். அவரால் ஒரு நாளுக்கு 12 மூட்டை வரை கட்ட முடிகிறது. இதன் மூலம் ஒரு நாளுக்கு சுமார் ரூ.180 அவர் சம்பாதிக்கிறார். அவரது கணவர் சுக்தேவ் சிங், 45, நங்கல் கிராமத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிஹால் சிங் வாலாவில் ஒரு கிடங்கில் கூலி வேலை செய்கிறார். கோதுமை அல்லது அரிசி மூட்டைகளையும் அவர் கட்டுகிறார். வேலை கிடைக்கும் போது ஒரு நாளுக்கு ரூ.300 வரை அவர் சம்பாதிக்கிறார். அவர்களின் வருமானத்தை குடும்பமே நம்பியுள்ளது.
பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் வசிக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் கிரண் கோர், "எங்கள் கிராமத்திலிருந்து போதைப்பொருளை ஒழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் எவருக்கும் எங்கள் ஓட்டு கிடைக்கும்" என்று கூறுகிறார்.
கிரணின் தெளிவு அவரது கணவரும் ஒரு போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற உண்மையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. மூன்று வயது மகள், ஆறு மாத ஆண் குழந்தைக்கு தாயான அவர் கூறுகையில், "எனது கணவர் ஒரு சாதாரண தொழிலாளியாக வேலை செய்கிறார். கடந்த மூன்று வருடங்களாக அவர் அப்படித்தான். அவர் சம்பாதிப்பதை போதைப்பொருளுக்கு செலவழிக்கிறார்.
எட்டு பேர் கொண்ட தனது குடும்பத்தின் வீட்டுச் சுவர்களில் விழுந்துள்ள பெரிய விரிசல்களைப் பார்த்து, "அவற்றை சரிசெய்ய பணம் எங்கிருந்து வரும்?" என்று அவர் கேட்கிறார்.









