"ஷுரு ஷுரு மேன் ஏக் நங் பனானே மேன் ஆதி கல்லக் லக்தி தி மேரி [முன்பு ஒரு சல்லடை செய்ய அரை மணி நேரம் ஆகும்]." முகமது பாய், சல்லடை செய்வதைப் பற்றிப் பேசும்போது, விரல் நுனியில் உள்ள வெட்டுத் காயங்களைக் கட்டை விரலால் வருடுகிறார். அவர் வேலை செய்யும் போது மீண்டும் விரல்களில் வெட்டுக்காயங்கள் ஏற்படலாம். ஆனால் காலமும் அனுபவமும் அவருக்கு அவற்றை பழக்கிவிட்டது. அவர் வித்தியாசமான ஹிந்தியில் பேசுகிறார். குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒரு வகை அது. அதில் குஜராத்தி வார்த்தைகள் தாராளமாக இடம்பெற்றிருக்கின்றன. “ஏக் மஹினா தக்லிஃப் படி மேரே கோ. அப் ஏக் நாங் பாஞ்ச் மினிட் மே பன் ஜாதா ஹை [சுமார் ஒரு மாதம் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது என்னால் ஐந்து நிமிடங்களில் ஒரு சல்லடையை தயாரிக்க முடியும். உத்தியை அறிந்தவுடன், என்னால் அதை வேகமாக செய்ய முடிந்தது.]," என்று அவர் புன்னகைக்கிறார்.
நாங்கள் அகமதாபாத்தில் உள்ள குத்பி கட்டிடத்திற்குள் 10 X 10 அறையில் அமர்ந்திருக்கிறோம். அது , 43 வயது முகமது சர்னாவாலா மற்றும் அவரது 76 வயதான அம்மி (தாயார்), ருக்கையா மௌஜ்ஹுசைனி ஆகியோரின் வீடு. அகமதாபாத்தின் கலுபூர் ஸ்டேஷன் அருகே தொழிலாளர் வர்க்க முஸ்லிம்கள் வசிக்கும் சால் என்ற டவுடி வோராவின் ரோசாவில் உள்ள இந்த இரண்டு மாடி கட்டிடத்தில் உள்ள 24 வீடுகளில் அவர்களது வீடும் ஒன்று. நவீனமாகத் தோற்றமளிக்கும் ரயில் நிலையத்தின் மறுபுறம் சென்றால், நீங்கள் ஒரு பழைய நகரத்தில் இருப்பதாக உணர்வீர்கள்.
சவாலான பாதைகள், உணவு, சண்டைகள் மற்றும் சச்சரவுகள், காற்றில் அவ்வப்போது பறக்கும் அசிங்கமான வார்த்தைகள் மற்றும் மெதுவாக நகரும் போக்குவரத்தின் வழியாக கடந்தால், நீங்கள் ஒரு சிக்கலான சாலை சந்திப்பை எதிர்கொள்வீர்கள் - ஒன்று குறுக்காகச் செல்கிறது, ஒன்று வலதுபுறம் வளைகிறது, ஒன்று இடதுபுறமாக முட்டுச்சந்திற்குள் திரும்புகிறது, மற்றும் ஒன்று வளைந்து, பின்னர் நேராகி, மற்றொரு சாலையில் ஒன்றிணைகிறது. இந்த சாலைதான், மொத்தம் 110 குடும்பங்கள் வசிக்கும் டவுடி வோராவின் ரோசாவில் உள்ள வோரா அறக்கட்டளைக்குச் சொந்தமான குத்பி கட்டிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
முகமது பாய் இங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் நடந்து, வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நகரம் முழுவதும் தனது மர வண்டியை தள்ளிச் செல்கிறார். அவர் காலை ஆறு மணிக்கு தொடங்குகிறார். "அவருடைய அப்பா எங்கெல்லாம் சென்றார் தெரியுமா!" ருக்கையா, தன் கணவரை நினைவு கூர்ந்து, தன் துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறார். "அவர் ஆற்றைத் தாண்டி, சபர்மதியின் அந்தப் பக்கம் சென்று தாமதமாக இரவு 9 அல்லது 10 மணிக்குத் தான் திரும்புவார்." அப்பா மொய்ஜ் ஹுசைனி, பிப்ரவரி 2023-ல் காலமானார். அப்போது அவருக்கு வயது 79.















