மல்லிகை கொஞ்சம் உரத்துப் பேசும் பூ! முத்துப் போன்ற மல்லிகை மொட்டுக்கள் சாக்குகளில் கட்டப்பட்டு, காலை ஐந்து மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி மல்லிகைச் சந்தையில், ‘தொப்’, என்ற சத்தத்துடன் வண்டியில் இருந்து விழுகிறது. ‘வழி. வழி’, என்ற சத்தத்துடன், சாக்குப் பைகள் பிரிக்கப்பட்டு, மல்லிகை மொட்டுக்கள் தரையில் விரிக்கப்பட்ட ப்ஸாடிக் ஷீட்கள் மீது கொட்டப்படுகின்றன. இரும்புத் தராசில், ஓசையுடன் ஒரு பக்கம் ஒரு கிலோ எடைக்கல் ஏற்றப்படுகிறது.. மறு பாக்கம் தராசில் மல்லிகை மொட்டு குவிக்கப்பட்டு, எடை போடப்பட்டு, வாங்குபவரின் ப்ளாஸ்டிக் பையில் கொட்டப்படுகிறது. கூட்டத்தில் யாரோ விலை கேட்கிறார்கள்.. யாரோ விலை சொல்கிறார்கள்.. தார்ப்பாய் மிதிபடும் ஓசை.. தரையில் மிதிந்து சிதைந்த பூக்களின் மிச்சம்.. விற்பனையைக் கூர்ந்து கவனிக்கும் ஏஜெண்டுகள், விற்பனை விவரங்களை கணக்குப் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறார்கள். ‘அஞ்சி கிலோ வேணும்’, என்றொரு குரல் கேட்கிறது.
பெண் வணிகர்கள், சந்தையில் நல்ல பூக்களைத் தேடி அலைகிறார்கள். மொட்டுக்களைக் கையில் அள்ளி, பூக்களின் தரத்தைச் சோதிக்கிறார்கள்.. அவர்கள் கைகளில் இருந்தது மழைச்சாரல் போல மொட்டுக்கள் மீண்டும் குவியலின் மீது விழுகின்றன. பெண் வணிகர் ஒருவர், ஒரு ரோஜாவையும், சாமந்தியையும் சேர்த்துப் பிணைத்து, ஹேர்பின் உபயோகித்துத் தன் கூந்தலில் இட்டுக் கொள்கிறார். வாங்கிய மல்லிகை மொட்டுக்களைக் கூடையில் போட்டு, தலை மீது ஏற்றிக் கொண்டு, சந்தடி நிறைந்த சந்தையை விட்டு வெளியேறிச் செல்கிறார்.
சந்தையை ஒட்டிய சாலையில், குடைநிழலில் அமர்ந்து, ஒரு பெண், மொட்டுக்களைச் சரமாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறார். பச்சை நூலின் வழித் தொடுக்கப்படும் மொட்டுக்களினுள்ளே அதன் மணம் அமைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறது. சில மணி நேரத்தில், ஒரு பெண்ணின் கூந்தலிலோ, வாகனத்தினுள்ளோ அல்லது ஒரு கடவுள் படத்தின் மீதோ வைக்கப்பட்டு, மலர்கையில், அவற்றினுள் இருக்கும் மணம் வெளியாகி, நான் மதுரை மல்லி என உரத்து அறிவிக்கும்!
பரியின் சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று முறை மாட்டுத்தாவணிச் சந்தைக்கு வந்திருக்கிறோம். முதன்முறை, செப்டெம்பர் 2021 ல் வந்தோம். விநாயகர் சதுர்த்திக்கு நான்கு நாட்கள் முன்பு. இரண்டாம் முறை கோகுலாஷ்டமி பண்டிகையன்று. மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தின் பின்புறத்தில், கொரோனா காலக் கெடுபிடிகள் இருந்தன அப்போது. சமூக விலக்கம் அமுலில் இருந்தாலும், சந்தையில் நெருக்கடி இருந்தது.
எனக்கு மல்லிகையைப் பற்றி வகுப்பெடுப்பதற்கு முன்பு, மதுரை பூக்கடைச் சந்தையின் தலைவர், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ‘என் பெயர் பூக்கடை இராமச்சந்திரன். இந்தச் சந்தைதான் என் பல்கலைக்கழகம்.






























