"மழைக்காலத்துக்கு முன் கிராம சபை கட்டடத்தை பழுதுபார்த்து விடுவது நல்லது," என்கிறார் லுபுங்பத் மக்களிடம் பேசும் சரிதா அசுர்.
ஒரு தண்டோராக்காரர் பிரதான தெருவில் கொஞ்ச நேரத்துக்கு முன் அறிவித்த கிராம சபைக்கு கூட்டம் இப்போது தொடங்கி இருக்கிறது. வீடுகளிலிருந்து ஆண்களும் பெண்களும் கிளம்பி கிராம சபைக் கட்டடத்தில் கூடி இருக்கின்றனர். அந்த ஈரறை கட்டடத்துக்குத்தான் சரிதா நிதி திரட்டி பழுது பார்க்க விரும்புகிறார்.
ஜார்க்கண்ட் மாவட்டத்தின் கும்லா மாவட்டத்தில் இருக்கும் இந்த கிராமத்து மக்கள் உடனே ஒப்புக் கொண்டனர். சரிதாவின் தீர்மானம் நிறைவேறியது.
முன்னாள் தேசிய ஹாக்கி விளையாட்டு வீரரான அவர், "எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை நாங்கள்தான் காண வேண்டும் என்றும் எங்களின் கிராம சபை கிராமத்தை மேம்படுத்த முடியும் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். எங்களின் எல்லாருக்கும் இது அதிகாரம் வழங்கி இருக்கிறது, குறிப்பாக பெண்களுக்கு," என்கிறார்.
மாவட்ட தலைநகரிலிருந்து ஒரு மணி நேர பயணத்திலும் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலிருந்து 165 கிமீ தொலைவிலுமுள்ள இக்கிராமத்தை சுலபமாக அடைய முடியாது. காட்டுக்குள் அமைந்திருக்கிறது. மலையேறி, கற்சாலை வழியாக இங்கு வந்து சேர வேண்டும். பெரியளவில் பொது போக்குவரத்து இங்கு சுலபமாக கிடைப்பதில்லை. அவ்வப்போது சிறு வாகனங்களும் ஆட்டோக்களும் வருவதுண்டு.
அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுவாக (PVTG) பட்டியலிடப்பட்டிருக்கும் அசுர் சமூகத்தின் 100 குடும்பங்கள் இங்கு இருக்கின்றன. கும்லாவை தாண்டி இந்த பழங்குடி இனம், ஜார்க்கண்டின் லோகர்தாகா, பலமு மற்றும் லத்தேகர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கிறது. மாநிலத்தில் அவர்களின் மொத்த மக்கள்தொகை 22 ,459 ( 2013ம் ஆண்டின் இந்தியாவிலுள்ள பழங்குடிகள் புள்ளிவிவரம் ) ஆகும்.
கிராமத்தில் கிட்டத்தட்ட பாதி பேர் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் எல்லா கிராம சபை பணிகளும் ஆவணப்படுத்தப்படுகிறது. "எல்லாமே பதிவு செய்யப்படுகிறது. நோக்கமும் வரையறுக்கப்படுகிறது. மக்களின் பிரச்சினைகளை நாங்கள் கையில் எடுக்கிறோம்," என்கிறார் இளைஞர் அமைப்பு தலைவரும் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரருமான சஞ்சித் அசுர்.
முன்பெல்லாம் கிராம சபை கூட்டங்களுக்கு ஆண்கள் மட்டும்தான் வருவார்கள் என சுட்டிக் காட்டுகிறார் சரிதா. "என்ன பேசப்பட்டது என எங்களுக்கு (பெண்களுக்கு) தெரியவே செய்யாது," என்கிறார் முன்னாள் தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர். கிராமத்து குடும்பங்களுக்கு இடையே இருக்கும் மோதல்களுக்கு தீர்வு காணவே பிரதானமாக கூட்டங்கள் நடக்கும்.
"இப்போது சூழல் அப்படி இல்லை. எந்த விஷயத்தை கிராம சபை விவாதித்தாலும் நாங்கள் சென்று விடுவோம். முடிவில் எங்களின் கருத்தும் செல்வாக்கு கொண்டிருக்கும்," என்கிறார் சரிதா சந்தோஷமாக.
கிராம சபையில் பங்கேற்பதில் சந்தோஷம் கொள்வதோடு அடிப்படை பிரச்சினைகளையம் அதுனூடாக தீர்க்க முடிகிறது என ஊர் மக்கள் கூறுகின்றனர். "நீர் பிரச்சினையை நாங்கள் தீர்த்து விட்டோம். முன்பு எங்களின் பெண்கள் நீரெடுக்க நீண்ட தூரம் செல்வார்கள். இப்போது தெருவிலேயே நீர் கிடைக்கிறது. ரேஷன் கடைக்கு முன்பெல்லாம் இன்னொரு ஊருக்கு செல்வோம். இப்போது எங்களுக்கு பக்கத்திலேயே கடை வந்து விட்டது," என்கிறார் பெனடிக்ட் அசுர். "அது மட்டுமில்லை, அகழ்விலிருந்தும் எங்களின் கிராமத்தை காப்பாற்றியிருக்கிறோம்."
காட்டில் பாக்சைட் அகழ்ந்தெடுக்க வெளியாட்கள் வந்தால், அலார சத்தம் எழுப்பி, கிராம வாசிகள் கூடி, அவர்களை எப்படி விரட்டி விட்டார்கள் என மக்கள் நினைவுகூர்ந்தார்கள்.
கிராம சபை கமிட்டியுடன் சேர்த்து அடிப்படை உள்கட்டமைப்பு கமிட்டி, பொது வளக் கமிட்டி, விவசாய கமிட்டி, சுகாதார கமிட்டி, கிராம பாதுகாப்பு கமிட்டி, கல்வி கமிட்டி மற்றும் லஞ்ச ஒழிப்பு கமிட்டி ஆகியவற்றையும் லுபுங்பத் கிராமத்தினர் உருவாக்கியிருந்தனர்.
"ஒவ்வொரு கமிட்டியும் அது சார்ந்த பிரச்சினைகளை விவாதிக்கிறது. பயனாளிகள் தேர்வு முறையும் விவாதிக்கப்படுகிறது. பிறகு அவர்கள் எடுத்த முடிவை அடிப்படை உள்கட்டமைப்பு கமிட்டிக்கு அனுப்பி வைப்பார்கள். பிறகு அந்த முடிவு கிராம மேம்பாடு கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும்," என விளக்குகிறார் கிராம சபை உறுப்பினரான கிறிஸ்டோபர். “உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும்போது சமூகநீதி வேர் பிடிக்கும்," என்கிறார் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் வளர்ச்சி மையத்தின் தலைவரான பேராசிரியர் அசோக் சர்க்கார்.
கிராமவாசிகள் கிராம சபையில் கூடியதும் முடிவு எடுப்பார்கள். பிறகு அந்த முடிவை ஊர் தலைவரும் வார்டு உறுப்பினர்களும் செயின்பூரின் ஒன்றிய அலுவலகத்துக்கு தெரிவிப்பார்கள்.
"கிராமத்துக்கென இருக்கும் உதவித்தொகை, உணவு பாதுகாப்பு, குடும்ப அட்டை சார்ந்த விஷயங்கள் என எல்லா திட்டங்களையும் கிராம சபை முன்னெடுத்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது," என்கிறார் கும்லா மாவட்டத்தின் ஒன்றிய வளர்சசி அலுவலராக டாக்டர் ஷிஷிர் குமார் சிங்.
கோவிட் தொற்று சமயத்தில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பினார். பராமரிப்பு மையத்தை கிராம சபைதான் உருவாக்கியது. தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உணவு, நீர் மற்றும் மருந்துகளை அது வழங்கியது.
பள்ளி மூடப்பட்டு வெளியேற்றப்பட்ட மாணவர்களுக்கு, கிராம கல்வி கமிட்டி தனித்துவமான தீர்வு கொடுத்தது. "கல்வியறிவு பெற்ற ஒரு இளைஞரை நியமித்து அவர்களுடன் இருந்து கல்வி வழங்க வைக்க நாங்கள் முடிவு செய்தோம். எல்லா குடும்பங்களும் அந்த இளைஞருக்கு ஊதியமாக ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தன," என விளக்குகிறார் கிறிஸ்டோபர் அசுர்.
"தொடக்கத்தில், கிராம சபை என்கிற பெயரில், ஒன்றிய அதிகாரிகள் ஒரு பதிவேட்டுடன் எங்களின் கிராமத்துக்கு வருவார்கள். திட்டங்களை விளக்கி, பயனாளிகளை தேர்ந்தெடுத்து விட்டு, பதிவேட்டை திரும்ப கொண்டு சென்று விடுவார்கள்," பலருக்கு கிடைக்க கூடிய பலன்களை கிடைக்க விடாமல் என்கிறார் கிறிஸ்டோபர்.
லுபுங்பத் கிராம சபை அந்த நிலையை மாற்றி விட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்