சகாரியா பழங்குடியான குத்தி சமான்யா, மத்தியப்பிரதேச வனத்துறையால் ‘சிறுத்தைப் புலியின் நண்பன்’ என வரையறுக்கப்பட்டிருக்கிறார். “சிறுத்தைப் புலி தென்பட்டால் காட்டு ரேஞ்சரிடம் சொல்ல” அவர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த வேலையாக தோற்றமளிக்கலாம். ஆனால் அந்த வேலைக்கு ஊதியம் இல்லை. ஆப்பிரிக்காவின் சிறுத்தைப்புலிகள், 8,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கடலையும் மலையையும் தாண்டி ராணுவ விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் குனோவுக்கு கொண்டு வரப்படுவதாக சொல்லப்பட்டது. அவற்றின் பயணத்துக்கென பெரும் அந்நிய செலாவணியை இந்திய அரசு செலவழித்திருக்கிறது. தொகை வெளிப்படுத்தப்படவில்லை.
சிறுத்தைப் புலி நண்பர்கள், வேட்டைக்காரர்களிடமிருந்து அவற்றை பாதுகாக்கவும், அவை சென்று சூறையாடும் வீடுகளில் வசிப்பவர்களிடமிருந்து அவற்றை காக்கவும் உதவுவார்கள். எனவே, குனோ-பால்பூர் தேசிய பூங்காவுக்கு (KNP) அருகே உள்ள கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் வசிக்கும் தினக்கூலிகள், விவசாயிகள், பழங்குடிகளை உள்ளடக்கிய 400-500 சிறுத்தைப்புலி நண்பர்களும் தேசத்துக்கு சேவை புரிய தயாராகி விட்டார்கள்.
ஆனால் சிறுத்தைப் புலிகள் வந்திறங்கியதிலிருந்து அவை கூண்டுகளில்தான் அதிக நேரம் அடைக்கப்பட்டிருந்தன. அவை உள்ளே இருப்பதையும் மற்றவர்கள் வெளியே இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் வேலிகளும் குனோ காடுகளில் எழுப்பப்பட்டன. “எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சீசியப்புராவிலும் பக்சாவிலும் புதிய கேட்கள் வந்திருக்கின்றன,” என்கிறார் சிறுத்தைப் புலி நண்பனாக இருக்க பெயர் கொடுத்த ஸ்ரீனிவாஸ்
குத்தியும் ஆயிரக்கணக்கான சகாரியா பழங்குடிகள் மற்றும் தலித்கள், குனோ காடுகளில் சிறுத்தைப்புலிகளுடனும் பிற வன விலங்குகளுடனும் ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர். ஜூன் 2023-ல் சிறுத்தைப் புலி திட்டத்துக்காக பக்சா கிராமத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவுக்கு வெளியேற்றப்பட்ட கடைசி மக்களில் குத்தியும் ஒருவர். வசிப்பிடத்தை சிறுத்தைப்புலிகளுக்கு இழந்து எட்டு மாதங்களான நிலையில், ஏன் காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதில் அவருக்கு எரிச்சல் இருக்கிறது. “காட்டை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து கொண்டு நான் எப்படி சிறுத்தைப் புலியின் நண்பனாக முடியும்?” எனக் கேட்கிறார்.
சிறுத்தைப்புலிகளை சுற்றி போடப்பட்டிருக்கும் கடும் பாதுகாப்பில், எந்தப் பழங்குடியாலும் சிறுத்தைப்புலியை கண்ணால் கூட பார்க்க முடியாது. குத்தி மற்றும் ஸ்ரீனிவாஸ் இருவருமே சொல்கையில், “காணொளியில் மட்டும்தான் நாங்கள் சிறுத்தைப்புலியை பார்த்தோம்,” என்கிறார்கள். அதுவும் வனத்துறையால் அனுப்பப்பட்ட காணொளி.
செப்டம்பர் 2022-ல் முதல் எட்டு சிறுத்தைப்புலிகள் வந்திறங்கின. 2024 பிப்ரவரியோடு 16 மாதங்கள் ஆகிவிட்டன. 2023-ல் 12 சிறுத்தைப்புலிகளை கொண்ட அடுத்த குழுவும் வந்திறங்கி விட்டது. வந்திறங்கியவற்றில் ஏழும் இந்திய மண்ணில் பிறந்த குட்டிகளில் மூன்றும் என மொத்தமாக 10 சிறுத்தைப் புலிகள் இதுவரை இறந்து விட்டன.
அதை பற்றி ஒன்றும் கவலை வேண்டாம் என்கிறது சிறுத்தைப் புலிகளை கொண்டு வருவதற்கான செயல்திட்டம் . ஏனெனில் இத்திட்டத்தின் வெற்றிக்கு 50 சதவித சிறுத்தைப்புலிகள் உயிர் வாழ்ந்தாலே போதுமானது. ஆனால் இந்த விகிதம், கட்டுப்பாடின்றி சுற்றும் சிறுத்தைப்புலிகளுக்குதாம். குனோவின் சிறுத்தைப் புலிகளோ 50 X 50 மீட்டர் தொடங்கி 0.5 X 1.5 சதுர கிலோமீட்டர் அளவு வரையிலான அடைப்புகளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. வானிலைக்கு பழகவும் தொற்று ஏற்படாமலிருக்கவும் ஏதேனும் நோய் வந்தால் அதிலிருந்து மீளவும் வேட்டைக்கு பழகவும்தான் இந்த ஏற்பாடு. இவற்றைக் கட்ட மட்டும் மொத்தமாக ஆன செலவு 15 கோடி ரூபாய். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள், வனத்துக்குள் சிறுத்தைப்புலிகள் உலவுவதும் வாழ்வதும் இனவிருத்தி செய்வதும் வேட்டையாடுவதும்தான். இதில் எதுவும் நடக்கவில்லை.
இதற்கு பதிலாக, சிறுத்தைப்புலிகள் தற்போதைய முகாம்களுக்குள் வேட்டையாடுகின்றன. ஆனால், “அவற்றால் எல்லைகளை உருவாக்கி இனவிருத்தி செய்ய முடியவில்லை. தென்னாப்பிரிக்க பெண் சிறுத்தைப்புலிகளுக்கு ஆண் சிறுத்தைப்புலிகளுடன் உறவாட போதிய நேரம் கிடைக்கவில்லை. குனோவில் பிறந்த ஏழு குட்டிகளில் ஆறுக்கு ஒரே தந்தை, பவன்தான்,” என்கிறார் டாக்டர் ஏட்ரியன் டோர்டிஃப். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விலங்கு வைத்தியரான அவர் சிறுத்தைப் புலி திட்டத்தின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். ஆனால் அவர் ஓரங்கட்டப்பட்டு, வெளிப்படையாக பேசியதற்காக வெளியேற்றப்பட்டார்.
சிறு சரணாலயமாக 350 சதுர கிலோமீட்டர் அளவில் இருந்த குனோ, இரண்டு மடங்காக அளவு கூட்டப்பட்டு, வன விலங்குகள் திறந்த வெளியில் வேட்டைக்கு செல்லும் வகையில் தேசியப் பூங்காவானது. 1999ம் ஆண்டிலிருந்து 16,000-க்கும் மேலான பழங்குடிகளும் தலித்களும் பெரும்பூனை விலங்குகள் கொண்டு வரப்படும் காரணத்தை காட்டி இங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
“நாங்கள் வெளியே. சிறுத்தைப் புலிகள் உள்ளே!” என்கிறார் பாக்சாவை சேர்ந்த சகாரியா பழங்குடியான மங்கிலால் ஆதிவாசி. 31 வயது இளைஞரான அவர், சமீபத்தில் வெளியேற்றப்பட்டவர். ஷியோபூர் தாலுகாவின் சக்பாமூல்யாவில் புதிய நிலத்திலும் வீட்டிலும் வாழ்க்கையை ஓட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
குத்தி, ஸ்ரீனிவாஸ்மற்றும் மங்கிலால் ஆகியோர் சகாரியா ஆதிவாசிகள். எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுவாக (PVTG) மத்தியப்பிரதேசத்தில் வரையறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். விறகு, பழங்கள், வேர்கள், மூலிகைகள் போன்ற காட்டுற்பத்தியை அதிகம் சார்ந்தவர்கள்.
“பக்சாவில் (அவர்கள் வெளியேற்றப்பட்ட இடம்) காடுகளுக்கு செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. என் குடும்பத்துக்கு பாரம்பரிய உரிமை தலைமுறை தலைமுறைகளாக இருந்த 1,500 மர மெழுகு மரங்களை விட்டு வந்திருக்கிறேன்,” என்கிறார் மங்கிலால். வாசிக்க: வேங்கை உள்ளே, பழங்குடிகள் வெளியே . இப்போது அவரும் அவரின் கிராமமும் அம்மரங்களிலிருந்து உள்ள தூரம் 30-35 கிலோமீட்டர்கள். அவர்களால் அந்தக் காட்டுக்குள் கூட நுழைய முடியாது. வேலியடைக்கப்படிருக்கிறது.
”இடம்பெயர்த்தப்பட்டதற்கு நிவாரணமாக 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் வீடு கட்ட ஒரு மூன்று லட்ச ரூபாய்ம், உணவு வாங்க 75,000 ரூபாயும் விதைகள் மற்றும் உரங்கள் வாங்க ஒரு 20,000 ரூபாயும் மட்டும்தான் கிடைத்தது,” என்கிறார் மகிலால். மீத 12 லட்ச ரூபாய், ஒன்பது பிகா (மூன்று ஏக்கர்) நிலத்துக்கும் மின்சாரத்துக்கும் சாலைகளுக்கும் குடிநீர் வசதிக்கும் சுகாதார வசதிக்கும் செலவாகி விட்டதாக, வனத்துறையால் அமைக்கப்பட்ட இடப்பெயர்வு கமிட்டி சொல்லியிருக்கிறது.
புதிதாக உருவாகியிருக்கும் பக்சா கிராமத்தின் (பழைய பெயரையே தொடர விரும்பியிருக்கிறார்கள்) தலைவராக பல்லு ஆதிவாசி இருக்கிறார். குளிர்காலத்தின் மாலை நேரம் ஒன்றில், கட்டுமான தூசும், கறுப்பு தார்ப்பாய்கள் போடப்பட்ட கூடாரங்களையும் குளிர்காற்றில் அலைபாயும் பிளாஸ்டிக் துகள்களையும் சுற்றி பார்க்கிறார். அரைகுறையாக முடிக்கப்பட்ட செங்கல் மற்றும் சிமெண்ட் வீடுகள், ஷியோபூர் டவுனுக்கு செல்லும் நெடுஞ்சாலைக்கு இணையாக சற்று தூரம் வரை நீண்டிருக்கின்றன. “எங்களின் வீடுகளை கட்டி முடிக்கவோ நிலங்களில் வரப்பு கட்டவோ எங்களிடம் பணம் இல்லை,” என்கிறார் அவர்.
“நீங்கள் பார்ப்பது எங்களின் நடவு அல்ல. இந்த நிலத்தை நாங்கள் இங்குள்ள மக்களுக்கு குத்தகைக்கு விட்டோம். அவர்கள் கொடுக்கும் பணத்தை கொண்டு எங்களால் பயிர் விதைக்க முடியாது,” என்கிறார் பல்லு. புது ஊரை சேர்ந்த ஆதிக்க சாதி மக்களின் நிலங்கள் பண்படுத்தபட்டிருப்பதை போல தங்களின் நிலம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
பாரி, பல்லுவை 2022-ல் நேர்காணல் செய்தபோது, புலம்பெயர்த்தப்பட்ட பலரும் 20 வருடங்களுக்கு முன் அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட இன்னும் காத்திருப்பதாக கூறினார். “நாங்களும் இப்படி சிக்கிக் கொள்ள விரும்பவில்லை,” என்றார் அவர். வாசிக்க: குனோ பூங்காவில் யாருக்கும் பிரதானப் பங்குக் கிடைக்கவில்லை
ஆனால் அந்த நிலையில்தான் இப்போது அவரும் மற்றவர்களும் இருக்கின்றனர்.
“குனோவை விட்டு உடனே நாங்கள் செல்ல வேண்டுமென்பதற்காக, எங்களின் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றனர். இப்போது சென்று கேட்டால், அவர்கள் புறக்கணிக்கிறார்கள்,” என்கிறார் குத்தி சாமன்யா.
*****
கடைசி பழங்குடிகளும் வெளியேற்றப்பட்டபிறகு, 748 சதுர கிலோமீட்டர் தேசியப் பூங்கா மொத்தமாக சிறுத்தைப்புலிகளுக்கு என்றானது. இத்தகைய தனிச்சலுகை இயற்கை பாதுகாவலர்களுக்கே அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. கேஞ்சடிக் டால்ஃபின், கானமயில், கடல் ஆமைகள், ஆசிய சிங்கம், திபெத்திய மான் போன்ற பூர்வ உயிர்கள்தான் அதிகமாக அழிவை சந்திக்கும் தன்மையில் இருப்பதாக வன உயிர் செயல்திட்டம் 2017-2031 தெரிவிப்பதாக அவர்கள் சொல்கின்றனர். சிறுத்தைப் புலிகள் அல்ல.
குனோவுக்கு சிறுத்தைப்புலிகளை கொண்டு வரவென இந்திய அரசு பல சட்டமுறைகளை வளைத்திருக்கிறது. 2013ம் ஆண்டின் உச்சநீதிமன்ற உத்தரவு ஒன்று, இந்தியாவில் அருகிப் போன ஆசிய சிறுத்தைப்புலி வகைக்கு பதிலாக ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகளை கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்தது.
ஆனால் ஜனவரி 2020-ல், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) தொடுத்த முறையீட்டு மனுவில், பரீட்சார்த்த முறையில் வேண்டுமானால் சிறுத்தைப் புலிகளை கொண்டு வரலாமென உச்சநீதிமன்றம் கூறியது. மேலும் அது NTCA மட்டுமே அதன் சாத்தியத்தை முடிவு செய்ய முடியாதென்றும் ஒரு வல்லுநர் குழு அதை வழிநடத்த வேண்டுமென்றும் கூட குறிப்பிட்டது.
சிறுத்தைப் புலி திட்டத்துக்கான 10 உறுப்பினர்கள் கொண்ட உயர் கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் கமிட்டியிலிருந்த அறிவியலாளர் டோர்டிஃப், “எந்த கூட்டத்துக்கும் நான் அழைக்கப்படவில்லை,” என்கிறார். சிறுத்தைப் புலி திட்டம் சார்ந்த வல்லுநர்களிடம் பாரி பேசியபோது அவர்களின் ஆலோசனை ஏற்கப்பட்டதே இல்லை என கூறுகின்றனர். “தலைமையில் உள்ள ஆட்களுக்கு எந்த சிந்தனையும் இல்லை. எங்களையும் சுதந்திரமாக செயல்பட விடவில்லை.” ஒரு விஷயம் தெளிவாக இருந்தது. உயர்மட்டத்தில் இருக்கும் யாரோ ஒருவர், இத்திட்டம் வெற்றிகரமாக நடப்பதாக காண்பிக்க விரும்புகிறார். எனவே எந்தவித ‘எதிர்மறை’ செய்தியும் தடுக்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவு கொடுத்த சாத்தியத்தால் சிறுத்தைப்புலி திட்டம் வேகமாக நடப்புக்கு வந்தது. செப்டம்பர் 2022-ல் இயற்கை பாதுகாப்புக்கான வெற்றி அது என அறிவித்த பிரதமர் மோடி, தன் 72வது பிறந்தநாளை குனோவில் கொண்டாடி, இறக்குமதி செய்யப்பட்ட சிறுத்தைப் புலிகளின் முதல் குழுவை வெளியே விட்டார்.
‘குஜராத்தின் பெருமை ’ எனக் கருதப்படும் சிங்கங்களை, 2000மாம் வருடங்களில் மோடி ஆட்சியிலிருந்தபோது குஜராத்தை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை என்கிற தகவல், அவர் இன்று இயற்கை பாதுகாவலர் என அழைக்கப்படுவதற்கு புறம்பாக இருக்கிறது. IUCN-ன் (இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம்) சிவப்புப் பட்டியலில் இருக்கும் ஆசியாவின் சிங்கங்கள் அவையென உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட பிறகும் இதுதான் நிலையாக இருந்தது.
இருபது ஆண்டுகளுக்கு பிறகு, சிங்கங்களின் இரண்டாவது வசிப்பிடமாக கருதப்படும் இடம், பாதுகாப்பை கோரும் நிலையில் இருக்கிறது. ஆசிய சிங்கங்கள் தற்காலத்தில் ஒரே இடத்தில் மட்டும்தான் வசிக்கின்றன. அது, குஜராத்தின் சவுராஷ்டிரா தீபகற்பமாகும். குனோவுக்கு உண்மையில் வர வேண்டியவை சிங்கங்கள்தாம். அதுதான் அறிவியல் ரீதியிலான பாதுகாப்புக்கு செய்ய வேண்டிய விஷயம்.
சிறுத்தைப் புலிகள் திட்டத்தை முன் நகர்த்த, தந்த விற்பனைக்கு எதிரான தன் நிலைப்பாட்டை தளர்த்தியது இந்தியா. ஏனெனில் சிறுத்தைப் புலிகளின் இரண்டாம் குழு வந்தது நமிபியா நாட்டிலிருந்து. 1972ம் ஆண்டின் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 49B-ன்படி, இறக்குமதி உள்ளிட்ட எந்த வகையில் தந்த வணிகம் நடப்பது சட்டவிரோதம். ஆனால் நமிபியா, தந்தம் ஏற்றுமதி செய்யும் நாடு. எனவே, 2022ம் ஆண்டில் பனாமாவில் நடந்த, அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான சர்வதேச வணிக மாநாட்டில் (CITES) தந்த வணிகத்துக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கு பெறவில்லை.
கடைசி பழங்குடிகளும் வெளியேற்றப்பட்ட பிறகு, தேசியப் பூங்கா முற்றிலும் சிறுத்தைப்புலிகளுக்கு என்றானது. ஆனால் நம் தேசிய பாதுகாப்பு இலக்குகளாக கேஞ்சடிக் டால்ஃபின், கானமயில், கடல் ஆமைகள், ஆசிய சிங்கம், திபெத்திய மான் போன்ற அருகி வரும் உயிர்களாக இருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் சிறுத்தைப் புலிகள் அல்ல
பக்சாவில் மங்கிலால், சிறுத்தைப் புலிகளை பற்றி யோசிக்கவில்லை என்கிறார். அவரின் சிந்தனையெல்லாம், ஆறு பேர் கொண்ட குடும்பத்துக்கு எப்படி உணவும் விறகும் பெறுவது என்பதை பற்றிதான். “விவசாயம் செய்து மட்டும் நாங்கள் பிழைக்க முடியாது. அதற்கு சாத்தியமில்லை,” என்கிறார் அவர் உறுதியாக. குனோவில் இருக்கும் அவர்களின் வீடுகளில் சோளம், கம்பு, பருப்பு, காய்கறிகளை விளைவிக்கின்றனர். “இந்த நிலத்தில் நெல் நன்றாக விளையும். ஆனால் அதற்கு நிலத்தை பண்படுத்த நிறைய செலவாகும். எங்களிடம் பணமில்லை.”
ஸ்ரீநிவாசோ, வேலை தேடி ஜெய்ப்பூருக்கு இடம்பெயரும் திட்டத்தில் இருக்கிறார். “எங்களுக்கு இங்கு வேலை ஏதும் இல்லை. காடு அடைக்கப்பட்டுவிட்டதால், ஊதியமும் இல்லை,” என்கிறார் எட்டு வயது குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளின் தகப்பனாக இருக்கும் அவர்.
காடுகள், சுற்றுப்புறச் சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் நவம்பர் 2021-ல் வெளியிடப்பட்ட, இந்தியாவுக்குள் சிறுத்தைப் புலிகள் கொண்டு வரும் செயல்திட்டத்தில் உள்ளூர்வாசிகளுக்கு வேலைகள் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சிறுத்தைப்புலி பராமரிப்பு மற்றும் சுற்றுலா சார்ந்து கிடைத்த சில வேலைகளை தவிர்த்து உள்ளூர்வாசிகளுக்கு பெரிய பலன் இல்லை.
*****
முதலில் சிங்கங்களும் தற்போது சிறுத்தைப் புலிகளும் மாநில அளவிலும் தேசிய அரசியலிலும் நட்சத்திர பங்கை வகிக்கின்றன. அரசியல்வாதிகளின் பிம்பங்களை பெருக்கிக் கொள்ள பயன்படுகின்றன. பாதுகாப்பு என்பது வெறும் கண் துடைப்புதான்.
சிறுத்தைப் புலிக்கான செயல்திட்டம் ஒரு 44 பக்க ஆவணம். நாட்டின் மொத்த இயற்கை பாதுகாப்பையும் சிறுத்தைப் புலிகளின் காலடியில் அது போடுகிறது. சிறுத்தைப்புலிகள் பாதுகாப்பு ‘புல்வெளிகளை மீட்கும்… புல்வாய் மான்களை மீட்கும்… காடுகளை மனிதர்களிடமிருந்து காக்கும்…’ சுற்றுச்சூழல் உலாவை ஊக்குவிக்கும். சர்வதேச அளவில் நம் பிம்பத்தை மேம்படுத்தும். ‘சிறுத்தைப் புலிகளை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு இந்தியா பங்களிப்பதாக பார்க்கப்படும்.’
புலிகள் பாதுகாப்புக்காக 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 195 கோடி ரூபாயிலிருந்தும் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திலிருந்தும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் CSR நிதியிலிருந்தும் இத்திட்டத்துக்கான நிதி வருகிறது. இந்தளவுக்கு தில்லியின் மேலாண்மை, செயல்பாடு மற்றும் நிதியை வேறெந்த பறவையோ விலங்கோ பெற்றதே இல்லை.
முரண்நகை என்னவென்றால், இந்தளவுக்கு ஒன்றிய அரசு காட்டும் தீவிர கவனம்தான் இந்த திட்டத்தை குலைத்ததே. “மாநில அரசை நம்புவதற்கு பதிலாக, இந்திய அரசின் அதிகாரிகள் தில்லியிலிருந்து இத்திட்டத்தை கட்டுப்படுத்த விரும்பினார்கள். பல பிரச்சினைகள் இதனால் எழுந்தன,” என்கிறார் ஜெ.எஸ். சவுகான்.
மத்தியப்பிரதேசத்துக்கு சிறுத்தைப் புலிகள் வந்தபோது இவர்தான் தலைமை வார்டனாக இருந்தார். “குனோ தேசியப் பூங்காவில் கூடுதலாக 20 சிறுத்தைப் புலிகள் வருவதற்கான இடமில்லை என வேண்டிக் கொண்டேன். சிறுத்தைப் புலி செயல்திட்டம் குறிப்பிடுவதை போல சில விலங்குகளை வேறு இடத்துக்கு அனுப்பலாமென்றும் சொல்லி பார்த்தேன்.” 759 சதுர கிலோமீட்டருக்கு வேலி அடைக்கப்பட்ட முகந்திரா மலை புலி சரணாலயத்தைதான் சவுகான் சொல்கிறார்.
இந்திய வனத்துறையின் மூத்த அதிகாரியான சவுகான், தேசிய புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் செயலரான எஸ்.பி.யாதவுக்கு பல கடிதங்களை எழுதியதாக சொல்கிறார். “உயிரின் தேவைகளை கருத்தில் கொண்டு சரியான முடிவுகளை எடுங்கள்.” ஆனால் எந்த பதிலும் வரவில்லை. ஜூலை 2023-ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். சில மாதங்களில் ஓய்வு பெற்றார்.
எதிர்கட்சியான காங்கிரஸ் அச்சமயத்தில் ஆண்டு கொண்டிருந்த மாநிலத்துக்கு (ராஜஸ்தானுக்கு) சிறுத்தைப்புலிகளை அனுப்ப முடியாது என அவற்றை கையாண்டு கொண்டிருந்தவர்கள் தெளிவாக சொல்லி விட்டார்கள். “தேர்தல் வரையிலேனும் (2023 நவம்பர், டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது) அது சாத்தியப்படாது.”
சிறுத்தைப் புலியின் நலம் முக்கியமாக இருக்கவில்லை.
“எளிய பாதுகாப்பு திட்டம்தான் இது என நம்பும் அளவுக்கு நாங்கள் முட்டாள்தனமாக இருந்தோம்,” என்கிறார் தற்போது அத்திட்டத்திலிருந்து தள்ளியிருக்க விரும்பும் டோர்டிஃப். “இதிலுள்ள அரசியல் காரணத்தை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.” பல சிறுத்தைப்புலி இடப்பெயர்வுகளை செய்திருப்பதாக சொல்லும் அவர், அவை யாவும் இயற்கை காரணங்களை மட்டுமே கொண்டவை, அரசியல் காரணங்களை கொண்டிருக்கவில்லை எனவும் கூறுகிறார்.
டிசம்பர் மாதம், மத்தியபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், காந்தி சாகர் வன உயிர் சரணாலயத்தில் (புலிகள் சரணாலயம் அல்ல) சிறுத்தைப் புலிகளை கொண்டு வர ஆவன செய்யப்படுமென ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால் சிறுத்தைப்புலிகளின் மூன்றாவது குழு எங்கிருந்து வருமென தெரியவில்லை. ஏனெனில், சாவதற்காக ஏன் இந்தியாவுக்கு சிறுத்தைப் புலிகள் அனுப்பப்படுகின்றன என தென்னாப்பிரிக்க அரசாங்கத்துக்கு எதிராக பல இயற்கை பாதுகாப்பு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. “கென்யா நாட்டை கேட்கப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் கென்யாவிலேயே சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத வல்லுநர் ஒருவர்.
*****
“காடு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது,” என்கிறார் மங்கிலால் நக்கலாக.
சவாரி செல்லும் பூங்காவில் சிறுத்தைப் புலிகள் தேவையில்லை. கூண்டுகளில் அடைபட்ட விலங்குகளே போதும்.
சிறுத்தைப் புலிகளுக்கு பின்னால் இந்திய அரசின் மொத்தமும் இருக்கிறது. விலங்கு மருத்துவர்கள், ஒரு புதிய மருத்துவமனை, 50 கண்காணிப்பாளர்கள், 15 வேன் ஓட்டுநர்கள், 100 வனக் காவலர்கள், வயர்லெஸ் இயக்குபவர்கள், இன்ஃப்ரா ரெட் கேமரா ஒளிப்பதிவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வருவதற்கென ஒரு ஹெலிகாப்டர் தளமும் கூட இருக்கிறது. இவை எல்லாம் மையப் பகுதியில்தான். சுற்றியிருக்கும் பகுதியில் கூட பாதுகாவலர்களும் ரேஞ்சர்களும் இருக்கின்றனர்.
ரேடியோ கழுத்துப் பட்டை கொண்டு கண்காணிப்பு நடக்கிறது. சிறுத்தைப் புலிகள் காட்டில் இல்லை. எனவே மனிதப் பரிச்சயம் இன்னும் நேரவில்லை. சிறுத்தைப் புலிகள் வந்திறங்கியபோது உள்ளூர்வாசிகள் எவரும் உற்சாகம் கொள்ளவில்லை. ஏனெனில் ஆயுதம் தாங்கிய காவலர்கள், மோப்ப நாய்களுடன் அவர்களின் குக்கிராமங்களுக்குள் வந்தனர். காவலர்களின் சீருடைகளும் நாய்களின் பற்களும் காண்பிக்கப்பட்டன. சிறுத்தைப் புலிகளுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால், மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தப்படும் என்பதற்கான சமிக்ஞையாக அது இருந்தது. நாய்கள் அவர்களை மோப்பம் பிடித்து, கொல்வதற்காக அவிழ்த்து விடப்படும்.
“போதுமான அளவுக்கு இரை” இருக்குமென்பதால்தான் குனோ தேர்ந்தெடுக்கப்பட்டது என்கிறது சிறுத்தைப்புலி அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கான 2023ம் வருட அறிக்கை . ஆனால் அதில் உண்மையில்லை. அல்லது அரசாங்கம் வேறு வழிகளை ஆராயவில்லை. “குனோ தேசியப் பூங்காவில் இரைகளுக்கான தளத்தை உருவாக்க வேண்டும்,” என மத்தியப்பிரதேசத்தின் காடுகள் பாதுகாப்பு முதன்மை தலைவரான அசீம் ஸ்ரீவாஸ்தவா இக்கட்டுரையாளரிடம் கூறுகிறார். ஜூலை 20203-ல் பொறுப்பேற்ற அவர், சிறுத்தைகளின் எண்ணிக்கை 100 வரை எட்டியிருப்பதால் உணவு கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்கிறார்.
“புள்ளிமான்கள் இனவிருத்தி செய்யவென 100 ஹெக்டேர் அடைப்பிடம் கட்டிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இரைகளுக்கான தேவை அதிகரிக்கிறது,” என்னும் ஸ்ரீவாஸ்தவா, இந்திய வனத்துறை அதிகாரியாக இருபது வருடங்களில் பெஞ்ச், கன்ஹா மற்றும் பந்தவ்கர் புலி சரணாலயங்களை நிர்வகித்திருக்கிறார்.
சிறுத்தைப் புலிகளுக்கான நிதியில் பிரச்சினை இல்லை என்கிற சமீபத்தில் வெளியான அறிக்கை . மேலும் அது, “சிறுத்தைப் புலி அறிமுகத்தின் முதல் கட்டம் ஐந்து வருடங்களில் 39 கோடி ரூபாயில் நடக்கும்,” எனக் கூறுகிறது.
“அதிகமாக பேசப்பட்ட, பெரும் செலவிலான பாதுகாப்பு திட்டம்,” என சிறுத்தைப் புலி திட்டத்தை விவரிக்கிறார் இயற்கை பாதுகாப்பு அறிவியலாளரான டாக்டர் ரவி செல்லம். இவற்றுக்கான இரைகளை உருவாக்குதல் தவறான முன்னுதாரணமாக அமையும் என்கிறார் அவர். “பாதுகாப்புதான் நோக்கம் எனில், இரையை அளிப்பதன் மூலம், தெரியாத விளைவுகளால் இயற்கை முறையை நாம் பாதிப்புக்குள்ளாக்குகிறோம். சிறுத்தைப் புலிகளையும் நாம் வன உயிர்களாக நடத்த வேண்டும்,” எனக் கூறுகிறார் சிங்கங்களை ஆய்வு செய்துவிட்டு தற்போது சிறுத்தைப் புலி திட்டத்தை ஆராய்ந்து வரும் வன உயிரியலாளர்.
நீண்ட காலத்துக்கு பிடித்து வைத்திருந்துவிட்டு, இரையாக சிறு அடைப்பிடத்துக்குள் விடுவதன்மூலம், அவற்றின் ஆரோக்கியத்தை நெடுங்காலத்துக்கு பாதிப்படைய வைக்கிறோம் என்கிறார் செல்லம். 2022ம் ஆண்டிலேயே அவர் எச்சரித்திருக்கிறார் : “கொண்டாடப்பட்ட விலையுயர்ந்த ஒரு சவாரிப் பூங்காவாகத்தான் இது மிஞ்சும்.” அவரின் வார்த்தைகள் உண்மையாகி வருகின்றன. டிசம்பர் 17, 2023-ல் தொடங்கிய ஐந்து நாள் விழாவிலிருந்து சிறுத்தைப்புலி சவாரிகள் தொடங்கியிருக்கின்றன. ஏற்கனவே 100-150 பேர் தினசரி 3,000-லிருந்து 9,000 ரூபாய் வரை குனோவில் ஜீப் சவாரிக்கு செலவு செய்து சென்று வருகின்றனர்.
ஹோட்டல்களும் சவாரிகள் திட்டமிடுபவர்களும் அதிகரித்து வருகின்றனர். ‘இயற்கையான ரிசார்ட்’டில் இரவு தங்கலுடன் கூடிய சிறுத்தை சவாரிக்கு இரண்டு பேர் செல்ல 10,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.
பக்சாவிலோ பணமில்லை. எதிர்காலத்துக்கு நிச்சயமில்லை. “சிறுத்தைப் புலி வருவதால் எங்களுக்கு எந்தப் பலனுமில்லை,” என்கிறார் பல்லு. “முழுத் தொகையான 15 லட்சம் ரூபாயை அவர்கள் கொடுத்திருந்தால் எங்களின் நிலத்தை பண்படுத்தி, வீடுகளும் கட்டி முடித்திருப்போம்.” கவலையுடன் மங்கிலால், “எந்த வேலையும் நாங்கள் செய்யவில்லை. எப்படி நாங்கள் சாப்பிடுவோம்?” என்கிறார்.
சகாரியாக்களின் தினசரி வாழ்வின் பிற விஷயங்களும் பாதிப்பை கண்டிருக்கின்றன. பழைய பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தீபி, புதிய இடத்துக்கு வந்த பிறகு படிப்பை தொடர முடியவில்லை. “பக்கத்தில் பள்ளி ஏதுமில்லை,” என்கிறார் அவர். அருகாமை பள்ளியே வெகுதூரத்தில் இருக்கிறது. இளம் குழந்தைகள் அதிர்ஷ்டம் வாய்த்தவை. தினசரி காலை ஓர் ஆசிரியர் வந்து திறந்த வெளியில் அவர்களுக்கு பாடம் நடத்துகிறார். “அவர்களும் சென்று படிப்பார்கள்,” என்கிறார் என்னை பார்த்து மங்கிலால் சிரித்தபடி. ஜனவரி விடுமுறை என்பதால் ஆசிரியர் வரவில்லை என எனக்கு நினைவுபடுத்துகிறார்.
வசிப்பவர்களுக்கு குடிநீர் கிடைக்கவென ஓர் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. பெரிய நீர் தொட்டிகள் சுற்றி கிடக்கின்றன. கழிப்பறை வசதிகள் இல்லாதது பெண்களுக்கு சிரமமாக இருக்கிறது. “நாங்கள் (பெண்கள்) என்ன செய்வதென சொல்லுங்கள்?” எனக் கேட்கிறார் ஓம்வதி. “கழிவறைகள் கிடையாது. நிலமும் மொத்தமாக தட்டையாக்கப்பட்டு விட்டது. மரங்களே இல்லை. ஒளிந்து போகவும் முடியாது. திறந்தவெளியில் போக முடியாது. பயிருக்கு நடுவேயும் நாங்கள் போக முடியாது.”
ஐந்து குழந்தைகளின் 35 வயது தாயான அவர், தற்போது வாழும் புல்வெளியையும் தார்ப்பாய் கூடாரங்களையும் தாண்டி பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்: “விறகுகள் கொண்டு வர தூரமாக நாங்கள் செல்ல வேண்டும். காடு இப்போது தூரத்தில் இருக்கிறது. எப்படி நாங்கள் சமாளிப்பது?” பிறர், இங்கு வரும்போது கொண்டு வந்த சிறு அளவு விறகுகளை கொண்டும் நிலத்திலிருந்து பிடுங்கியெடுக்கும் வேர்களை கொண்டும் சமாளிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அதுவும் விரைவில் தீர்ந்துவிடும்.
சிறுத்தைப் புலி திட்டத்துக்காக எழுப்பப்பட்ட வேலிகளால், மரங்களை தாண்டிய காட்டு உற்பத்தி பொருட்களின் (NTFP) இழப்பு தெளிவாக புலப்படுகிறது. அதை பற்றி மேலதிக தகவல் அடுத்தக் கட்டுரையில்.
சுற்றுலா வருமானத்தில் 40 சதவிகிதம் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென சிறுத்தைப்புலி செயல்திட்டம் குறிப்பிடுகிறது. “வெளியேற்றப்பட்ட மக்களுக்கென ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் சிறுத்தைப் புலி கண்காணிப்பவர்களுக்கென ஊக்கத்தொகை அளிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் திட்டங்களான சாலைகள், சுகாதார வசதிகள், பள்ளிகள் போன்றவையும் அமைக்கப்பட வேண்டும்.” பதினெட்டு மாதங்கள் கழிந்துவிட்டது. எல்லாம் வெறும் தாளில்தான் இருக்கிறது.
“எத்தனை காலம்தான் இப்படி நாங்கள் வாழ்வது?” எனக் கேட்கிறார் ஓம்வதி ஆதிவாசி.
முகப்பு படம்: ஏட்ரியன் டோர்டிஃப்
தமிழில்: ராஜசங்கீதன்