வசதி படைத்தவரோ ஏழையோ, முதியவரோ இளையவரோ எவராகினும் தங்களின் காலணிகளை கழற்றிவிட்டு அரசரின் கால்களை தொட வேண்டும். எனினும் ஓர் எளிய இளைஞன், நிமிர்ந்து நின்று அவரை நேரடியாக கண்கள் நோக்கி பார்த்தான். எந்த இரு முரண் கருத்தையும் ஒடுக்கும் அரசரின் முன் அத்தகைய எதிர்ப்புதன்மையை காட்டுவது பஞ்சாபின் ஜோகா கிராமத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. கொடுங்கோல அரசருக்கு கோபத்தை வரவழைத்தது.
அந்த இளைஞனின் பெயர் ஜாகிர் சிங் ஜோகா. அவரின் வீரம் நிறைந்த தனிநபர் போராட்டம், ஒன்றிய தொழிற்துறை பாதுகாப்பு படை (CISF) கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் தற்போதைய மண்டி மக்களவை உறுப்பினரும் பாலிவுட் பிரபலமுமான கங்கனா ரனாவத்தை அறைவதற்கு 90 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்தது. ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிக்க முயன்ற பாடியாலா அரசர் புபிந்தர் சிங்கை எதிர்த்துதான் ஜோகா தன் போராட்டத்தை பதிவு செய்தார். அது 1930களில் நடந்த சம்பவம். அடுத்த நடந்த விஷயங்கள் நாட்டுப்புற இலக்கியமாகி காணாமல் போனது. ஆனால் ஜோகாவின் போராட்டம் முடிந்துவிடவில்லை.
பத்தாண்டுகள் கழித்து, ஜோகாவும் லால் கட்சியிலிருந்து அவரின் அப்போதைய தோழர்களும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டத்தை கிஷன்கரில் (தற்போது சங்க்ரூர் மாவட்டத்தில் இருக்கிறது) நடத்தி, புபிந்தர் சிங்கின் மகனின் கட்டுப்பாட்டில் இருந்த 784 கிராமங்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைப்பற்றி, நிலமற்றவர்களுக்கு விநியோகித்தனர். பாடியாலாவின் முன்னாள் ராணுவ வீரரும் பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சருமான கேப்டன் அம்ரிந்தர் சிங், புபிந்தர் சிங்கின் பேரன்.
அந்த நிலம் மற்றும் பிற போராட்டங்களை தொடர்ந்து 1954ம் ஆண்டில் ஜோகா நாபா சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும் அவரை மக்கள் தேர்தலில் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் 1962, 1967 மற்றும் 1972 ஆண்டுகளிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.












