ஒவ்வொரு நாள் காலையும் அகிஃப் எஸ்.கே. ஹேஸ்டிங்ஸ் பாலத்துக்கடியில் இருக்கும் ஒரு குடிசையிலிருந்து கிளம்பி, கொல்கத்தாவின் பிரபலமான சுற்றுலா தளமான விக்டோரியா மெமோரியலுக்கு சென்று விடுகிறார். போகும் வழியில் ராணி மற்றும் பிஜிலியையும் கூட்டிக் கொள்கிறார்.
இரு வெள்ளை குதிரைகள்தான் அவரின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படை. “நான் குதிரை வண்டி ஓட்டுகிறேன்,” என்கிறார் அகிஃப். ஹேஸ்டிங்க்ஸுக்கு அருகே நிறுத்தி வைத்திருக்கும் விலங்குகளை காலை 10 மணிக்கு விக்டோரியாவுக்கு - மத்திய கொல்கத்தாவிலிருக்கும் பளிங்குக் கட்டிடத்தை சுற்றி இருக்கும் பகுதிக்கும் திறந்த வெளிக்கும் சொல்லப்படும் உள்ளூர் பெயர் - கொண்டு வருகிறார். பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் நினைவில் கட்டப்பட்ட அக்கட்டடம், 1921ம் ஆண்டில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.
அகிஃப் அன்றாடம் வாடகைக்கு எடுக்கும் வண்டி, விக்டோரியா மெமோரியலின் குயின்’ஸ் வே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வரிசையில் தன் வண்டியை சுட்டிக்காட்டி, அவர் சொல்கிறார், “தங்க நிறத்தில் இருப்பதுதான் என்னுடையது.”
தெருவை தாண்டி விக்டோரிய மெமோரியலின் கேட்டருகே ஒரு சிறு கூட்டம் ஏற்கனவே கூடியிருக்கிறது. “அந்த காலத்தில் இங்கு அரசர்கள் வாழ்ந்தனர். அவர்கள் குதிரை வண்டிகளில்தான்ச் செல்வார்கள். இப்போது விக்டோரியாவுக்கு வருபவர்கள், அந்த உணர்வை பெற விரும்புகிறார்கள்,” என்கிறார் 2017ம் ஆண்டில் இந்த வேலையை செய்யத் தொடங்கிய அவர். மேலும் அவர், “விக்டோரியா (மெமோரியல்) இருக்கும் வரை, குதிரை வண்டிகள் இருக்கும்.” போலவே அவரை போன்ற குதிரை வண்டி ஓட்டுபவர்களின் வேலைகளும் இருக்கும். தற்போது இப்பகுதியில் 50 வண்டிகள் இயங்குகின்றன.
குளிர்காலம் வந்துவிட்டது. கொல்கத்தா வெளிப்புறத்தில் புழங்க தயாராகி விட்டது. அகிஃப், மாலை நேரங்களில் பிசியாகி விடுகிறார். இங்கு சீசன் நவம்பரில் தொடங்கி பிப்ரவரி வரை இருக்குமென கூறுகிறார். அதற்குப் பிறகு கோடை வந்துவிடும். கடும் வெயில் இருக்கும். குறைந்த எண்ணிக்கையில்தான் மக்கள் குதிரை வண்டிகளில் பயணிக்க வருவார்கள்.
மெமோரியலுக்கு எதிரே டீக்கடைகளும் பலகாரக் கடைகளும் நிறைந்திருக்கும் நடைபாதை அருகே நாங்கள் அமர்ந்திருந்தோம். அங்குதான் சுற்றுலாபயணிகளும் வாகன ஓட்டிகளும் சிற்றுண்டு உண்ணுவார்கள்.
சற்று தூரத்தில் ராணியும் பிஜிலியும் நின்று கொண்டிருக்கின்றன. கோதுமை உமி, தானியம் மற்றும் புல் கலந்த காலை உணவை உண்ணபடி அவ்வப்போது தலையசைத்துக் கொள்கின்றன. சீக்கிரம் அவை கிளம்ப வேண்டும். அவை சாப்பிட்டு முடித்ததும் நவீன கால தேர் தயாராகி விடும். குதிரைகளுக்கு உணவளிப்பதும் அவற்றை சுத்தம் செய்வதும்தான் வண்டி ஓட்டுபவரின் வாழ்வதாரத்துக்கு அடிப்படை. “ஒரு குதிரையை பராமரிக்க நாளொன்றுக்கு 500 ரூபாய் ஆகிறது,” என்கிறார் அகீஃப். தானியம் மற்றும் புல் ஆகியவற்றை தாண்டி வைக்கோலும் கொடுக்கப்படுகிறது. அவற்றை அவர், கித்தெர்போரருகே வாத்குங்கேவிலுள்ள கடையில் வாங்குகிறார்.
அவருக்கான உணவு மதியம் வரும். அதை சமைத்து பொட்டலம் கட்டி அவரின் அக்கா கொடுத்தனுப்புவார்.
காலையில் அகிஃப்ஃபை நாம் சந்தித்தபோது பரபரப்பு அப்பகுதியை தொற்றியிருக்கவில்லை. அவ்வப்போது சுற்றுலா பயணிகள் வண்டிகளை நோக்கி வருவார்கள். உடனே பல ஓட்டுநர்களும் நாளின் முதல் சவாரி கிடைக்கும் நம்பிக்கையில் அவர்களை சுற்றி வந்து விடுவார்கள்.
“நல்ல வியாபாரம் இருந்தால், மூன்று நான்கு சவாரி எனக்குக் கிடைக்கும்,” என்னும் அகிஃப் இரவு 9 மணி வரை பணிபுரிகிறார். 10, 15 நிமிடங்களுக்கு நீடிக்கும் சவாரி, விக்டோரியா மெமோரியல் வாசலருகே தொடங்கி, ரேஸ் கோர்ஸை கடந்து, வில்லியம் கோட்டையின் தெற்கு வாசலில் திரும்பும். ஒவ்வொரு சவாரிக்கும் ஓட்டுநர்கள் 500 ரூபாய் கட்டணம் விதிக்கிறார்கள்.
“ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 25 ரூபாய் எனக்கு கிடைக்கும்,” என்கிறார் அகிஃப். மிச்சம் உரிமையாளருக்கு செல்லும். நல்ல வியாபாரம் இருக்கும் நாளில் சவாரிகள் 2,000-3,000 ரூபாய் வருமானம் கொடுக்கும்.
இதிலிருந்து வருமானம் ஈட்ட பிற வழிகளும் இருக்கின்றன. “திருமணங்களுக்காக இந்த வண்டிகள் வாடகைக்கு அமர்த்தப்படுவதும் உதவுகிறது,” என்கிறார் அவர். மணமகனுக்கு வண்டி தருவதற்கான கட்டணம், நிகழ்வு நடக்கும் இடம் இருக்கும் தூரத்தை பொறுத்தது. நகரத்துக்குள் எனில் 5,000 - 6,000 ரூபாய் வரை ஆகும்.
“எங்களின் வேலை மணமகனை நிகழ்ச்சி இடத்துக்கு அழைத்து செல்வதுதான். அங்கு சென்று அவரை விட்டதும், நாங்கள் திரும்பி வந்து விடுவோம்,” என்கிறார் அகிஃப். சில நேரங்களில் அவர்கள் கொல்கத்தாவுக்கு வெளியேவும் பயணிக்கின்றனர். அகிஃப் மேதினிப்பூருக்கும் கராக்பூருக்கும் குதிரை வண்டியுடன் சென்றிருக்கிறார். “நெடுஞ்சாலையில் இரண்டு மூன்று மணி நேரங்கள் வரை இடைவெளியின்றி பயணித்திருக்கிறேன்,” என்னும் அவர், “தேவைப்படும்போது பிறகு ஓய்வெடுப்பேன்,” என்கிறார். இரவு நேரத்தில் அவர் நெடுஞ்சாலைக்கு அருகே நின்று, குதிரைகளை அவிழ்த்து விட்டு, வண்டியில் தூங்கி விடுவார்.
“சினிமா ஷூட்டிங்குகளுக்கும் வண்டிகள் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன,” என்கிறார் அகிஃப். சில வருடங்களுக்கு முன், அவர் போல்பூருக்கு ஒரு வங்க மொழி டிவி சேனல் சீரியல் ஷூட்டிங்குக்காக சென்றார். கிட்டத்தட்ட 160 கிலோமீட்டர் பயணித்தார். ஆனால் திருமணங்களும் படப்பதிவுகளும் தொடர்ச்சியாக கிடைக்காது. வேலை இல்லாதபோது அவர் வருமானத்துக்கு வேறு வழி பார்க்க வேண்டும்.
இந்த இரு குதிரைகளுடன் அகிஃப் அக்டோபர் 2023-லிருந்து வேலை பார்த்து வருகிறார். “இந்த தொழிலை நான் தொடங்கியபோது, பகுதி நேரமாக என் (திருமணமான) சகோதரியின் குடும்பத்தின் குதிரைகளுடன் வேலை பார்த்தேன்,” என்கிறார் 22 வயதாகும் அவர். கொஞ்ச காலம் வேறொருவரிடம் அகிஃப் பணிபுரிந்தார். இப்போது சகோதரி குடும்பத்தின் வண்டிகளில் வேலை பார்க்க திரும்பி வந்து விட்டார்.
இங்கு வண்டிகளை ஓட்டும், குதிரைகளை பராமரிக்கும் அகிஃப் போன்ற பல தொழிலாளர்களுக்கு இது முழு நேர வேலை இல்லை.
”வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பதில் பயிற்சி பெற்றவன் நான். புர்ராபஜாரின் நண்பர் வைத்திருக்கும் ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கிறேன்,” என்னும் அகிஃப் மேலும், “என்னுடைய தந்தை வீடுகளுக்கு கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளராக இருந்தார். 1998-ல் கொல்கத்தாவுக்கு, நான் பிறக்கும் முன் அவர் வந்தார்,” என்கிறர. பராசத்தில் இருந்தபோது, அவரது தந்தை காய்கறி விற்பவராக இருந்தார். அவரின் பெற்றோர் அகிஃபின் உறவினர் திருமணமாகி வாழ்ந்து வந்த நகரத்துக்கு இடம்பெயர்ந்தனர். “என் உறவினருக்கு மகன்கள் இல்லாததால் என்னை அவர் வளர்த்தார்,” என்கிறார் அகிஃப். அவரின் தந்தை அலாவுதின் ஷேக்கும் தாய் சயீதாவும் பராசத்தில் அலாவுதீன் சிறு கடை நடத்தி வரும் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் இருக்கும் பூர்விக வீட்டுக்கு திரும்பி விட்டனர்.
அகிஃப் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். அவரின் தம்பி, அவர்களின் சகோதரியுடன் வசித்து வருகிறார். எப்போதாவது அவரும் வண்டி ஓட்டுகிறார்.
குதிரை வண்டி ஓட்டுநர்களின் பிரச்சினை வேலைகள் கிடைக்காதது மட்டுமல்ல. சட்டதுக்கு அவர் மாமூல் தர வேண்டும். “50 ரூபாய் தினமும் நான் கொடுக்க வேண்டும்,” என்கிறார் அகிஃப். விலங்குகளை ஒழுங்காக நடத்தப்பட வேண்டுமென பதிவு செய்யப்பட்டிருக்கும் மனுவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாரா எனக் கேட்ட போது, அவர் சொல்கிறார், “ஒவ்வொரு மாதமும் யாரேனும் ஒருவர் வந்து குதிரைகளை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என சொல்வார்கள். ‘எல்லா வண்டிகளையும் வாங்கிக் கொண்டு நீங்கள் பணம் கொடுக்கலாமே?’ என நாங்கள் கேட்போம். இந்த குதிரைகள்தான் எங்களின் வாழ்வாதாரம்.”
‘அந்த காலத்தில், அரசர்கள் இங்கு வாழ்ந்தார்கள். குதிரை வண்டிகளில் அவர்கள் செல்வார்கள். இப்போது விக்டோரியாவுக்கு வருபவர்களும் அத்தகைய உணர்வை பெற விரும்புகின்றனர்,’ என்கிறார் அகிஃப்
PETA-வின் மனு, குதிரை வண்டிகளுக்கு பதிலாக மின்சார வண்டிகள் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிடுகிறது. “குதிரைகள் இல்லாமல் எப்படி நீங்கள் இதை குதிரை வண்டி என சொல்ல முடியும்?” என அந்த இளம் குதிரை வண்டியோட்டி புன்னகையுடன் கேட்கிறார்.
“குதிரைகளை பராமரிக்காதவர்களும் சிலர் இருக்கிறார்கள்,” என அகிஃப் ஒப்புக் கொள்கிறார். “ஆனால் நான் பராமரிக்கிறேன். அவற்றை பார்த்தாலே அவை நன்றாக கவனித்துக் கொள்ளப்படுவது தெரியும்!”
தமிழில்: ராஜசங்கீதன்