தில்லி ஹமாரா ஹை!
தேஷ் பர் வோஹி பாத் கரேகா,
ஜோ கிசான் மஸ்தூர் கி பாத் கரேகா!
[டெல்லி
நம்முடையது!
விவசாயிகளுக்கு
தொழிலாளர்களுக்கும் உழைப்பவர்கள் மட்டுமே,
நாட்டை
ஆள வேண்டும்!]
நாட்டின் தலைநகரான புதுடெல்லியின் ராம்லீலா மைதானத்தில் 2024-ம் ஆண்டு மார்ச் 14, வியாழக்கிழமை அன்று நடைபெற்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான மகாபஞ்சாயத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளின் முழக்கம் இதுவே.
"நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2020-21) திக்ரி எல்லைக்கு வந்து ஓராண்டு முழுக்கப் போராடினோம்," என்று பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகள் குழு ராம்லீலா மைதானத்தில் பாரியிடம் கூறினர். "தேவைப்பட்டால் மீண்டும் வருவோம்."
மைதானத்திற்கு அருகிலுள்ள சாலைகளில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளிலிருந்து விவசாயிகளை அழைத்து வந்த பேருந்துகள் வரிசையாக நின்றன. காலை 9 மணியளவில், வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்திற்கு செல்லும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்குப் பின்னால், ஆண்களும் பெண்களும் சிறு குழுக்களாக செங்கலால் கட்டப்பட்ட விறகு அடுப்பில் ரொட்டிகளை சமைத்து காலை உணவை முடித்துக் கொண்டிருந்தனர்.
அது 'அவர்களுடைய' கிராமம். இந்த உற்சாகமான காலையில் விவசாயிகள் ராம்லீலா மைதானத்திற்குள் கொடிகளை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். 'கிசான் மஸ்தூர் ஏக்தா ஜிந்தாபாத் [விவசாயிகள் தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக]!' என்ற முழக்கம் காற்றில் எதிரொலித்தது. காலை 10:30 மணியளவில் தரையில் விரிக்கப்பட்டிருந்த பச்சை நிற பாலிதீன் தாள்களில் அவர்கள் முறையாக அமர்ந்தனர். நூற்றுக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான மகாபஞ்சாயத்து தொடங்குவதற்கு ஆயத்தமாகினர்.
ராம்லீலா மைதானத்தின் வாயில்கள் காலையில்தான் திறக்கப்பட்டன. மைதானத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர். கூட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டுமென்றே நிலத்தை தண்ணீரால் நிரப்ப முயற்சி செய்யப்பட்டதாக விவசாயத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளைப் பெறும் டெல்லி காவல்துறை, 5,000 பேருக்குள் கூட்டத்தின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த ஆலோசனை வழங்கியிருந்தது. இருப்பினும், கிட்டத்தட்ட பத்து மடங்கு விவசாயிகள் தீர்க்கமாக மைதானத்தில் திரண்டிருந்தனர். கணிசமான ஊடகங்களும் வந்திருந்தன.
பாட்டியாலாவின் தாபி குஜ்ரானில் பிப்ரவரி 21 அன்று தலையில் படுகாயமடைந்து இறந்த பதிண்டா மாவட்டத்தின் பலோஹ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்கரன் சிங்கிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, அமர்வு தொடங்கியது.
மகாபஞ்சாயத்தில்
முதல் பேச்சாளரான டாக்டர் சுனிலம், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் (SKM) சங்கல்ப் பத்ரா
அல்லது விவசாய சங்கத் தீர்மானத்தை வாசித்தார். SKM மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின்
25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மேடையில் இருந்தனர்; அங்கிருந்த மூன்று பெண் தலைவர்களில்
மேதா பட்கரும் ஒருவர். ஒவ்வொருவரும் 5 முதல் 10 நிமிடங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு
சட்ட உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.
2024 பிப்ரவரியில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு இடையிலான ஷம்பு மற்றும் கனோரி எல்லையில் போராடிய விவசாயிகள் மீது அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடி நடத்தியது குறித்து விவசாயிகள் சீற்றமடைந்துள்ளனர். படிக்க: 'நான் ஷம்பு எல்லையில் சிறையில் அடைக்கப்பட்டதாக உணர்கிறேன்'
தலைநகருக்குள் நுழையும் விவசாயிகளுக்கு அரசு விதித்துள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒரு பேச்சாளர் ஆவேசமாக அழைப்பு விடுத்தார்: "டில்லி ஹமாரி ஹை,. தேஷ் பர் வோஹி ராஜ் கரேகா, ஜோ கிசான் மஸ்தூர் கி பாத் கரேகா! [டெல்லி நமக்கு சொந்தமானது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே நாட்டை ஆள முடியும்].”
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய மற்றும் தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் 'கார்ப்பரேட், வகுப்புவாத, சர்வாதிகார ஆட்சிக்கு' எதிராக தற்போதைய அரசை தண்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
"2021 ஜனவரி 22-க்குப் பிறகு, விவசாய அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எந்த பேச்சுவார்த்தையும் இல்லாதபோது, பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படும்?" என்று ராகேஷ் திகைத் தனது உரையில் கேட்டார். இவர் பாரதிய கிசான் யூனியனின் (BKU) தேசிய செய்தித் தொடர்பாளரும், SKM தலைவரும் ஆவார்.
"2020-21 விவசாயிகள் போராட்டத்தின் முடிவில், நரேந்திர மோடி அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை C2 + 50 சதவீதத்தில் சட்ட உத்தரவாதம் வழங்கப்படும் என்று உறுதியளித்தது. அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தனர், அதுவும் செய்யப்படவில்லை," என்று அகில இந்திய விவசாய சங்கத்தின் (AIKS) பொதுச் செயலாளர் டாக்டர் விஜூ கிருஷ்ணன் கூறினார். விவசாய போராட்டங்கள் குறித்த பாரியின் முழுமையான செய்திகளைப் படியுங்கள்.
ஒரு வருடம் நீடித்த விவசாயிகளின் போராட்டங்களின் போது இறந்த 736-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பற்றியும், அவர்கள் குடும்பங்களுக்கு அரசு இன்னும் இழப்பீடு வழங்காதது, அவர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் கைவிடப்படாதது பற்றியும் கிருஷ்ணன் மேடையிலிருந்து பேசினார். "மின்சார சட்டத் திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும், ஆனால் அது செய்யப்படவில்லை", என்று மகாபஞ்சாயத்தில் பாரியிடம் பேசிய அவர் மேலும் கூறினார்.
பின்னர்
கிருஷ்ணன், உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் ஐந்து விவசாயிகள் மற்றும் ஒரு
பத்திரிகையாளரை வெட்டிக் கொன்றதாகக் கூறப்படும் அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனியின் மகன்
ஆஷிஷ் மிஸ்ரா தெனி பதவியில் நீடிப்பதற்கு SKM-ன் எதிர்ப்பை பதிவு செய்தார்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நாடு முழுவதும் பல இடங்களில் நடந்து வரும் போராட்டங்கள் தொடரும் என்று திகைத் கூறினார்.
தனது குறுகிய உரையின் முடிவில், ராகேஷ் திகைத் மகாபஞ்சாயத்தின் தீர்மானங்களை நிறைவேற்ற அனைவரும் கைகளை உயர்த்துமாறு கேட்டுக் கொண்டார். மதியம் 1:30 மணிக்கு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கொடிகளுடன் கைகளை உயர்த்தினர். தலைப்பாகைகள், தாவணிகள், சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் தொப்பிகள் வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் பிரகாசமான சூரியனின் கீழ் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டிருந்தன.
தமிழில்: சவிதா