ஸ்ரீ பத்ரியா மாதா கோயில் நுழைவாயிலில் கேட்கும் இசைவாணர்களின் பாடல், 200 ஆண்டு பழமையான கட்டடத்திற்கு உள்ளே செல்ல செல்ல ஒலி மெல்ல குறைகிறது. இப்போது நாம் 20 அடிக்கு கீழே நிலத்தை அடைந்தவுடன் திடீர் நிசப்தம் நிலவுகிறது.
15,000 சதுர அடிக்கு மேல் விரிந்துள்ளது இந்த சுழல்பாதை நூலகம். குறுகிய பாதைகளுடன் 562 அலமாரிகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அடுக்கப்பட்டுள்ளன. தோலால் பிணைக்கப்பட்ட நூல்கள், பழங்கால மரப்பட்டய கையெழுத்துப் பிரதிகள், பழைய பதிப்பு நூல்கள், இந்து, இஸ்லாமியம், கிறிஸ்தவம் மற்றும் பிற சமயங்கள் தொடர்புடைய கட்டுரைகள், சட்டம், மருத்துவம், தத்துவம், பூகோளவியல், வரலாறு என இன்னும் பல புதிய தலைப்புகளும் இடம்பெற்றுள்ளன. புனைகதை பகுதி செவ்வியல் மற்றும் நவீன கால நாவல்களால் நிரம்பியுள்ளன. பெரும்பாலான நூல்கள் இந்தியிலும், சில ஆங்கிலத்திலும் இருக்கின்றன. சமஸ்கிருத நூல்களும் இடம்பெற்றுள்ளன.
பஞ்சாபைச் சேர்ந்த சமய பண்டிதர் ஹர்வன்ஷ் சிங் நிர்மலின் சிந்தனையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டது. அவர் கோயில் வளாகத்திற்குள் குகை அமைத்து 25 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து நிலவறையில் நூலகம் அமைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 2010-ம் ஆண்டு மறைவதற்கு முன்பு வரை கல்விக்கும் விலங்குகள் நலத்திற்கும் நிர்மல் நிதி திரட்டியுள்ளார்.
“அவர் ஒரு மனிதாபிமானி. மனிதனின் தோலும், முடியும் வேறுபட்டாலும் மனத்தால் அனைவரும் ஒன்றே எனும் கருத்தை அனைத்து சமயங்களும் சொல்கின்றன,” என்கிறார் ஸ்ரீ ஜகதாம்பா சேவா சமிதி எனும் அறக்கட்டளையின் செயலாளர் ஜூகல் கிஷோர். இந்த அறக்கட்டளை, கோயில் மற்றும் நூலகத்துடன் 40,000க்கும் அதிகமான பசுக்களுக்கு கோசாலை அமைத்து நிர்வகித்து வருகிறது.






















