மாயா பிரஜாபதி ஒரு பாழடைந்த செங்கல் குடிசைக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார். அவர் நீண்ட நேரம் களிமண் கலைப்பொருட்களை உருவாக்கிவிட்டு சிறிது ஓய்வெடுக்கிறார்.
அவர் அறைக்குள் பெருமையுடன் சுட்டிக்காட்டி, "நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன்," என்கிறார். மங்கலான வெளிச்சமுள்ள அறையின் மூலையில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு அளவிலான விளக்குகள், பானைகள், பொம்மைகள் மற்றும் சிலைகள் தரையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
நாற்பதுகளின் முற்பகுதியில் இருக்கும் மாயா விளக்குகிறார். "இவை அனைத்தும் தீபாவளிக்கான தயாரிப்பு. அந்த பண்டிகை காலத்திற்காகவே ஆண்டு முழுவதும் கடுமையாக உழைக்கிறோம்."
உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரின் புறநகரில் உள்ள சின்ஹாட்டின் கும்ஹாரன் மொஹல்லா (குயவர்களின் சமூகம்) பகுதியில் உள்ள சில திறமையான பெண் தொழிலாளர்களில் மாயாவும் ஒருவர். "இங்கு மண்பாண்டத் தொழிலே ஆண்களின் வாழ்வாதாரம். பெண்கள் இதற்கு உதவுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வீட்டு வேலைகளும் உள்ளன. ஆனால், என்னைப் பொறுத்தவரை அது வேறு."
மாயா பிரஜாபதியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது, தனக்கும் தனது இரண்டு குழந்தைகளுக்கும் உணவளிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. "என் கணவர் அண்மையில் இறந்துவிட்டார். இப்போது நான் தான் வீட்டிற்கு வருமானம் ஈட்டுகிறேன்; இப்படித்தான் எங்கள் வயிற்றை நாங்கள் நிரப்புகிறோம். இத்தொழில் எனக்குத் தெரிந்துள்ளதால் எங்களால் இன்னும் பிழைக்க முடிகிறது.”
மாயா அண்மையில் மண்பாண்டத் தொழிலை கையில் எடுத்திருந்தாலும், சிறு வயதில் இருந்தே களிமண்ணை வார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். "நான் குழந்தையாக இருந்தபோது பொம்மைகள், சிலைகள் மற்றும் பல அலங்கார களிமண் பொருட்களை தயாரிக்கத் தொடங்கினேன். அநேகமாக எனக்கு 6 அல்லது 7 வயதாக இருந்தபோது, எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அதைச் செய்தார்கள்." இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அவர் திருமணம் செய்து கொண்டு சின்ஹாட்டுக்கு குடிபெயர்ந்தார். "இன்று, என்னால் வழக்கமாக பானைகள், கண்ணாடிகள் மற்றும் விளக்குகள் செய்ய முடியும். ஆனால் பொம்மைகள் மற்றும் மூர்த்திகளை [கடவுள்களின் சிலைகள்] செய்வதை நான் மிகவும் ரசிக்கிறேன்," என்று கூறுகிறார்.
"அவற்றை உருவாக்க நிறைய பொறுமை தேவைப்படுகிறது. அதில் எனக்கு பல ஆண்டு தேர்ச்சி உள்ளது. என்னிடம் வெவ்வேறு பொருட்களுக்கான அச்சுகள் உள்ளன. நான் அவற்றில் களிமண்ணை வைப்பேன். பின்னர் அது காய்ந்ததும், வரைந்து வண்ணம் பூசுகிறேன். ஓவியம் வரைவது மிகவும் கடினமான பகுதி. அதற்கு நேரமும் ஆகும்."
தீபாவளியின்போது தான் விற்பனை அதிகமாக இருக்கும் என்று மாயா கூறுகிறார். ஆண்டு முழுவதும் இப்பண்டிகைக்கான தயாரிப்புதான். " இந்த அலங்காரப் பொருட்களை விற்க தீபாவளி சிறந்த நேரம். சின்ஹாட் பஜாரில் நூற்றுக்கணக்கில் விற்கிறோம். சில நேரங்களில், வியாபாரிகள் எங்களிடமிருந்து வாங்குவதற்காக வீடுகளுக்கு வருவார்கள்." மற்ற நேரங்களில் இந்த விற்பனையை கணிக்க முடியாது. எனவே தீபாவளியின் போது சம்பாதிப்பதை நாங்கள் சேமிக்க வேண்டும்," என்று கூறுகிறார்.
மண்பாண்டத் தொழிலில் இருந்து கிடைக்கும் பணம் அதற்கான உழைப்பை ஈடுசெய்வதில்லை என்றாலும், மாயா தனது முன்னோர்களின் கைவினைக்கு நன்றி தெரிவிக்கிறார். ஏனென்றால் அது கடினமான காலங்களில் தன்னைக் கருணையுடன் காப்பாற்றியதாக கூறுகிறார்.
மொஹல்லாவின் மற்றொரு பகுதியில், வயதான பேச்சாளர் பஞ்சாபி தாளங்களை ஒலித்து, கொதிக்கும் நெருப்பு மற்றும் சுழலும் குயவரின் சக்கர ஒலிகளை மங்கச் செய்தார்.
" வேலை செய்யும் போது என் மகன்கள் எதையாவது கேட்க விரும்புகிறார்கள்," என்று சிரித்துக் கொண்டே தேஷ்ராஜ் கூறுகிறார். கடந்த 40 ஆண்டுகளாக, தேஷ்ராஜின் பணி பானைகள் உட்பட சில சிறந்த களிமண் கலைப்பொருட்களை உருவாக்குவது. சலிப்பான நாளுக்கு கொஞ்சம் உற்சாகத்தை இசையே அளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.
தேர்ந்த கைவினைஞர் தனது சோர்வடைந்த, ஆனால் திறன்மிக்க விரல்களை முறையாக நகர்த்துகிறார். ஈரமான களிமண்ணை வார்த்து சுழலும் சக்கரத்தில் பானைகளை உருவாக்குகிறார். ஒவ்வொரு பானை முடிந்ததும், பாதி கட்டப்பட்ட தனது வீட்டின் மொட்டை மாடியில் நேர்த்தியான முறையில் மொத்தம் நாற்பது என வரிசைகளில் அவற்றை கவனமாக அடுக்குகிறார்.
இதற்கிடையில், முந்தைய இரவின் பானைகள் சுடப்படும் வளாகத்தில் உள்ள பட்டியில் (உலை) இருந்து புகை கிளம்புகிறது. புகை மூட்டங்கள் அவர்களின் வீட்டை நிரப்புகின்றன. ஆனால் அன்று பிற்பகல் வீட்டில் இருந்த தேஷ்ராஜின் குடும்ப உறுப்பினர்கள் (இரண்டு மகன்கள், ஒரு மருமகள், இரண்டு குழந்தைகள்) புகையின் ஊடுருவலைப் பற்றி கவலைப்படாமல் இருந்தனர். அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளைத் தொடர்கின்றனர்.
"பானைகள், கோப்பைகள், அகல் விளக்குகள், தட்டுகள் மற்றும் பிற அலங்கார பொருட்கள் என என்னால் எதையும் செய்ய முடியும்," என்று அவர் மேலும் கூறுகிறார். "இப்போதெல்லாம் நான் குஜ்ஜிகளை [பூஜைகளில் பயன்படுத்தப்படும் சிறிய பானைகள்] செய்கிறேன். அவை சாத் பூஜையில் பயன்படுத்தப்படுகின்றன," என்று கூறுகிறார். சாத் பூஜை என்பது சூரியக் கடவுளை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து பண்டிகையாகும். இது பொதுவாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நிகழ்த்தப்படுகிறது.
"நான் ஒரு நாளைக்கு சுமார் 1000 முதல் 1200 பொருட்களை தயாரித்து ஒரு டஜன் 15 ரூபாய்க்கு விற்கிறேன். சில நேரங்களில், வாங்குபவர் பேரம் பேசினால், அதை ஒரு டஜனுக்கு 10 ரூபாய்க்கு விற்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.
ஒரு ரூபாய்க்கு மேல் விற்கப்படும் சிறிய மண் கலைப்பொருட்கள், நீண்ட கால, கடும் உழைப்புக்குப் பிறகு அவற்றின் இறுதி வடிவத்தைப் பெறுகின்றன. குளத்திலிருந்து களிமண் தோண்டுவதற்காக சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோலாய் கிராமத்திற்கு அவரது மகன் புறப்படும் போது அதிகாலை நான்கு மணிக்கு அது தொடங்குகிறது என்று தேஷ்ராஜ் கூறுகிறார். அவரது குடும்பத்தில் உள்ள ஆண்கள் மட்டுமே இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். அவரது மகன் இதை காலை 7 மணிக்கு இ-ரிக்ஷாவில் வீட்டிற்கு கொண்டு வருகிறார்.
களிமண் வெயிலில் உலர வைக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக உலர்ந்த மேடுகளை நசுக்கி, சல்லடை மூலம் பாறைகளை அகற்றுவது அடங்கும். களிமண், மாவு போன்ற நிலைத்தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது என்று அவரது தந்தை கூறுகிறார். தேஷ்ராஜ் மதிய வேளையில்தான் சக்கரத்தில் பானைகள் செய்யத் தொடங்குகிறார். அவை முடிந்ததும், அனைத்தும் இரவில் சூளையில் வைக்கப்படுகின்றன.
தேஷ்ராஜ் தன் புறங்கையால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார். "காலப்போக்கில் மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கான முழு செயல்முறையும் எளிதாகிவிட்டது, ஆனால் செலவுகளும் அதிகரித்துள்ளன," என்று அவர் கூறுகிறார். பின்னர் அவர் கால்களின் வலியைப் போக்க தனது அமர்ந்த நிலையில் இருந்து எழுந்து நிற்கிறார்.
"நான் இப்போது மோட்டார் பொருத்தப்பட்ட குயவர் சக்கரத்தைப் பயன்படுத்துகிறேன். முன்பு, என்னிடம் கைகளால் சுற்றும் சக்கரம் இருந்தது, அதை கையால் சுழற்ற வேண்டியிருந்தது. குளத்திலிருந்து களிமண்ணை நாங்கள் முன்பெல்லாம் தலையில் சுமந்து கொண்டு வருவோம். ஆனால் இப்போது லோலாய் கிராமத்திலிருந்து (சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில்) களிமண்ணை எடுக்க இ-ரிக்ஷாவைப் பயன்படுத்துகிறோம்," என்று கூறுகிறார்.
செலவுகளுக்கு ஏற்ப நியாயமான பங்கு கிடைக்க வேண்டும். குடும்பத்தின் மாத மின் கட்டணம் சுமார் 2500 ரூபாய் என்றால், இ-ரிக்ஷா பயணம் கூடுதலாக 500 ரூபாயை சேர்க்கிறது. "எங்கள் உணவு, எரிவாயு மற்றும் பிற செலவுகளைச் சேர்த்தால், இறுதியில் எங்களுக்கு எதுவும் மிஞ்சாது," என்று தேஷ்ராஜ் மனமுடைந்த நிலையில் கூறுகிறார்.
வேறு வேலைக்கு முயற்சித்தீர்களா என்று கேட்டபோது தேஷ்ராஜ் தோள்களைக் குலுக்குகிறார். "எனக்குத் தெரிந்தது இதுதான். இதுதான் என் அடையாளம். நான் ஒரு குயவர். வேறு எதுவுமே தெரியாது." அந்த ஊரில் இருந்த மற்ற குயவர்களை சுட்டிக் காட்டி, மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் அவர்களின் குலுங்கும் தலைகள் தெரிந்தன, "நாங்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உறவினர்கள். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் முன்னோர்களில் ஒருவர் அசல் கும்ஹர். நாங்கள் அவருடைய வழித்தோன்றல்கள்," என்றார்.
இப்பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன என்கிறார் தேஷ்ராஜ். "நாங்கள் ஒரு பெரிய குடும்பம் போல வாழ்கிறோம். எனது 55 வருட வாழ்க்கையில், என் தாத்தாவிற்கு பிறகு, என் தந்தை இத்தொழிலை செய்து பார்த்திருக்கிறேன். நான் அதைச் செய்தேன. இப்போது என் மகனும் அதையே செய்கிறான்."
சிவா பன்சாலுக்கு 14 வயதானபோது அவரது தந்தை இறந்தார். இதனால் அவரது தாயார் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி சொந்த காலில் நிற்கும் நிலைக்கு அவரை தள்ளினார். அப்போது "மண்பாண்டங்கள்தான் எனக்கு நம்பிக்கை அளித்தது," என்கிறார் அவர்.
இந்த இளைஞர் வேலைக்காக இந்தாண்டு தொடக்கத்தில் பள்ளியிலிருந்து இடைநின்றார். "இந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் எனக்கு உதவி செய்துள்ளனர். ஒவ்வொருவரிடமிருந்தும் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்," என்கிறார் சிவா. "நான் இன்னும் இத்தொழிலில் நிபுணத்துவம் பெறவில்லை. ஆனால் பெரும்பாலான பொருட்களை என்னால் செய்ய முடியும். பொருட்களைச் செய்வதைத் தவிர, குளத்திலிருந்து களிமண்ணை எடுத்துச் செல்லவும், உலையை ஏற்றவும் கும்ஹார்களுக்கு உதவுகிறேன். அதற்கு அவர்களால் முடிந்த தொகையை எனக்கு பணமாக கொடுக்கிறார்கள்," என்று கூறும் சிவா, இப்போது தனது தந்தை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
அவருக்கு குடும்ப வாழ்வில் சிக்கல் இருந்தபோதிலும், கும்ஹார் கிராமத்தில் ஒருபோதும் தனிமையை உணர்ந்ததில்லை என்று சிவா கூறுகிறார். "எங்களுக்குள் நிறைய அன்பு இருக்கிறது. எல்லோரும் என்னை அறிந்திருக்கிறார்கள். என் மீது அக்கறை காட்டுகிறார்கள். சிலர் உணவு வழங்குகிறார்கள். சிலர் வேலை வழங்குகிறார்கள்.”
அவர் தனது வழிகாட்டியான ஹீராலால் பிரஜாபதியின் வீட்டிற்கு நடந்து செல்கிறார். "சாச்சா மிகவும் நல்லவர். இங்குள்ள மிகச் சிறந்தவர்களில் ஒருவராக கூட அவர் இருக்கலாம்," என்று சிவா கூறுகிறார், "நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்." ஹீராலால் சிரித்துக் கொண்டே சிவாவின் முதுகில் தட்டிக் கொடுத்து, "நான் ரொம்ப நாளாக இதைச் செய்கிறேன். நாங்கள் படிக்காதவர்கள். அதனால் நாங்கள் அனைவரும் சிறு வயதிலிருந்தே இதைச் செய்தோம்.”
தனது வழக்கமான வேலையுடன், லக்னோவில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு மட்பாண்ட வகுப்புகளை கற்பிக்கிறேன் என்று ஹீராலால் கூறுகிறார். "அங்கு எனது படைப்பாற்றலை வேறொரு நிலைக்கு எடுத்துச் செல்கிறேன். அவர்கள் வருடாந்திர கண்காட்சி நடத்தும்போது நாங்கள் இதுவரை செய்யாத பொருட்களை அங்கு செய்கிறோம். இந்த ஆண்டு, நீரூற்று, செய்தேன்! எனது கலையை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.”
"நான் பல இடங்களுக்குச் சென்றதில்லை. ஆனால் கண்காட்சியில் எனது சில கலைப்பொருட்களை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மக்கள் வாங்கியதாக பள்ளி ஊழியர்கள் என்னிடம் கூறினர். என் கலை ஆஸ்திரேலியாவில் இருக்கிறது..." என்று நம்ப முடியாமல் அவர் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.
தமிழில்: சவிதா