வீட்டுக்குள் இருக்கும் நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருக்கும் கோமா ராமா ஹசாரே, கிராமத்தின் சாலையை வெறித்து பார்த்து நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது அந்தப் பக்கம் செல்பவர்கள், நின்று அவரை விசாரிக்கையில் அவர்களுடன் பேசுகிறார். அதிக நாட்கள் நீடித்திருந்த நோயால், அவரின் மனைவி ஒரு வாரத்துக்கு முன் இறந்திருந்தார்.
ஏப்ரல் மாதத்தின் (2024) ஒரு நாள். மாலை 5 மணி. வெயில் அதிகமாக இருந்தது. வடக்கு கட்சிரோலியின் அர்மோரி தாலுகாவிலுள்ள தேக்கு மற்றும் மூங்கில் காடுகளின் மடியில் இருக்கும் பலாஸ்காவோன் கிராமம் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. இன்னும் சில நாட்களில் கட்சிரோலி-சிமூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தற்போதைய பாஜக மக்களவை உறுப்பினரான அஷோக் நெடே மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். பெரிய எதிர்பார்ப்பு இல்லை. உண்மையில் கவலைதான் இருந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக, கோமாவுக்கு வேலை ஏதும் இல்லை. வழக்கமாக இந்த நேரத்தில் 60 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் நிலமற்ற தொழிலாளரான அவரைப் போன்றவர்கள் இலுப்பை அல்லது தெண்டு இலைகளை சேகரிப்பது அல்லது காட்டில் மூங்கில் வெட்டுவது விவசாயம் பார்ப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.
“ஆனால் இந்த வருடம் செய்ய முடியாது,” என்கிறார் கோமா. “யார் பிரச்சினையை எதிர்கொள்வது?”
”மக்கள் வீடுகளுக்குள்ளே இருந்து கொள்கின்றனர்,” என்கிறார் கோமா. வெயில் அதிகமாக இருக்கும் நாட்கள். நீங்கள் வெளியே செல்ல முடியாது. கடந்த நாற்பது வருடங்களாக பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான ஆயுத மோதலால் பாதிக்கப்பட்டிருப்பதால் கட்சிரோலி உள்ளிட்ட கிராமங்களுக்கு இத்தகைய ஊரடங்கு நிலை புதிதல்ல. ஆனால் இம்முறை புது விருந்தாளிகள் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலை உருவாக்கி இருந்தது.
இளம் கன்றுகளும் பெண் யானைகளையும் கொண்ட 23 வன யானைகளின் மந்தை, பலாஸ்காவோனின் அருகில் முகாமிட்டிருக்கிறது.














