தொடக்கத்திலிருந்து பேசுவோம்…
2014ம் ஆண்டிலிருந்து பாரி முன்வைத்துவரும் இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றிய பெருங்கதை, இந்திய மொழிகளிலிருந்து தொடங்குகிறது. நாட்டிலுள்ள கிராமப்புறங்களின் 83 கோடியே 30 லட்சம் மக்கள் கிட்டத்தட்ட 700 மொழிகளை பேசுகின்றனர். 86 வகை வரிவடிவங்களை பயன்படுத்துகின்றனர். எழுத்துகள் இல்லாத மொழிகளையும் உள்ளடக்கிய இம்மொழிப்பன்முகத்தன்மைதான் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அடிப்படை. இவை இல்லாமல், மக்களுக்கான பெட்டகம் செயல்படுவது மட்டுமல்ல, கற்பனை கூட செய்ய முடியாது. இந்திய மொழிகளிலான இந்த மொழிபெயர்ப்புகள்தாம் ஒவ்வொரு பாரிக் கட்டுரையின் பயணத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
“இதழியலில் இந்தப் பெட்டகம் ஒரு முன்னோடி முயற்சி. சமூகநீதி பார்வையில் மொழிபெயர்ப்பை இது பார்க்கிறது,” என்கிறார் ஸ்மிதா கடோர். “கிராமப்புற இந்தியர்களின் பெரும்பகுதிக்கு ஆங்கிலம் இன்னும் எட்டாக் கனியாக இருக்கும் நிலையில், அறிவு உற்பத்தி மற்றும் பகிர்வு ஆகியவை ஆங்கிலம் படிக்கக் கூடிய, பேசக்கூடிய வர்க்கங்களின் தனிச்சலுகையாக மட்டுமே மிஞ்சாமல் இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.”
எங்களின் மொழிபெயர்ப்பு ஆசிரியர் குழுவினரும் மொழிபெயர்ப்பாளர்களும் வார்த்தைகள் கொண்டிருக்கும் பண்பாட்டு பின்னணி குறித்து அடிக்கடி பகிர்வார்கள். விவாதிப்பார்கள். கலந்துரையாடுவார்கள். இப்படித்தான் ஒருநாள்…
ஸ்மிதா: தெலங்கானாவின் செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த குரும்புரி பஞ்சாயத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், புருசோத்தம் தாகூரை பார்த்ததும் சந்தோஷமடைந்த காட்சியை அவர் விவரித்த கட்டுரை ஞாபகம் இருக்கிறதா? ஒரு முதியவர் கூட, ‘ரொம்ப நாள் கழித்து ஒடியா பேசுபவரை நான் சந்தித்திருக்கிறேன். உங்களை சந்தித்ததில் மிகவும் சந்தோஷம்!’ என சொன்னாரே?
அதே போல, ரகு என்ற புலம்பெயர் தொழிலாளர் சிறுவன் புதிய பள்ளியில் சேர்ந்து, அங்கிருக்கும் ஆசிரியர்களும் நண்பர்களும் அவனுக்கு புரியாத மொழியில் பேசியதால் பட்ட அவதியை குறித்து மகாராஷ்டிராவின் ஜோதி ஷினோலி எழுதிய இக் கட்டுரை யும் முக்கியமானது. சிறுவனின் தாயான காயத்ரி சொல்கையில், “மூன்று வாரங்கள் சென்னை பள்ளி ஒன்றுக்கு சென்ற பிறகு, அவன் வீட்டுக்கு வந்து ஒரு நாள் அழுதான். பள்ளிக்கு செல்லப் போவதில்லை என்றான். எதுவும் அங்கு புரியவில்லை என்றும் அனைவரும் அவனிடம் கோபமாக பேசுவதாகவும் சொன்னான்,” என்றார்.
வேலை தேடி புலம்பெயர வேண்டியக் கட்டாயம் கிராமப்புற மக்களுக்கு ஏற்படுகையில் அவர்களின் மொழி அடையாளம் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது.
ஷங்கர்: ஆனால் சில நேரங்களில் வார்த்தைகளும் புலம்பெயரும் ஸ்மிதா. கையால் மகரந்தம் சேர்க்கும் தொழிலாளர் பற்றிய செந்தளிரின் இக் கட்டுரை யில், பெண் தொழிலாளர்கள் ‘க்ராஸ்’ அல்லது ‘க்ராசிங்’ என்ற ஆங்கில வார்த்தை கொண்டு, கையால் மகரந்தம் சேர்க்கும் தங்களின் பணியை குறிப்பிடுகின்றனர். அவர்களின் பேச்சு மொழியில் ஒரு ஆங்கில வார்த்தையும் அங்கமாகியிருக்கிறது. கிராமப்புறங்களில் இத்தகைய வார்த்தைகள் பலவற்றை கேட்க முடியும்.
இது அற்புதமாக இருந்தாலும் சவால் நிறைந்தது. என்னுடைய சொந்த மாநிலமான கர்நாடகாவில் இருந்து ஆங்கிலத்தில் வெளியான சில கட்டுரைகளை பார்க்கும்போது, அங்கு வசிக்கும் உழைக்கும் மக்களின் குரல்களில் பூர்விகத்தன்மை இல்லாமலிருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒரு புத்தகத்தில் இருக்கும் கற்பனையான பாத்திரங்கள் போல அவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் வாழ்க்கையும் நிறங்களும் இருக்காது. எனவே மொழிபெயர்க்க தொடங்கும்போது, மக்கள் பேசுவதை கேட்பதை நான் உறுதிபடுத்திக் கொள்வேன். அவர்கள் பேசும் விதத்தை கவனித்து, அக்கதையில் அவர்கள் பிரதிபலிப்பை கொண்டு வருவேன். வெறுமனே சேகரிக்கப்பட்ட ‘எழுத்தா’கிவிடக் கூடாது என நினைப்பேன்.
பிரதிஷ்தா: மொழிபெயர்ப்பு எப்போதும் சுலபமாக இருந்ததில்லை. தாய்மொழியில் எழுதப்படும் கட்டுரைகளில் எனக்கு எப்போதும் சிரமம்தான். குஜராத்தியிலோ இந்தியிலோ இருக்கும் கட்டுரையை வாசிக்கும்போது மிகச் சரியாக இருக்கும். ஆனால் அதை எத்தனை உண்மையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாலும் அதன் அமைப்பு, வாக்கிய அமைப்பு, எழுத்து நடை போன்றவை செயற்கையானதாக தெரியும். இத்தகைய சூழல்களில் எந்த விஷயத்துக்கு நான் நேர்மையாக இருக்க வேண்டுமென யோசிப்பேன். கட்டுரையின் ஆன்மாவுக்கா, விளிம்புநிலை சமூகத்தினரின் அனுபவத்தை மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதிலா அல்லது மூல எழுத்துக்கும் வார்த்தைகளுக்கும் அமைப்புக்குமா? இந்திய மொழியில் நான் தொகுக்க வேண்டுமா, ஆங்கில மொழியில் தொகுக்க வேண்டுமா? இறுதியில் அது ஒரு நீண்ட செயல்பாடாகவும் கருத்துகளின் பரிமாற்றமாகவும் சில முறை இரு தரப்பின் கடும் விவாதமாகவும் மாறியிருக்கிறது.
மொழிகளை கடந்து தொடர்பு கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதால்தான் மொழிபெயர்ப்பும் சாத்தியமாகிறது. ஆனால் படங்கள், சத்தங்கள், எழுத்து நடை, குறிப்பிட்ட ஒரு மொழியின் அறிவு தொகுதி மற்றும் அதன் பண்பாட்டு வெளி, அதன் தனித்துவ தன்மை போன்றவற்றை பாரியுடன் பணிபுரியும்போதுதான் என்னால் புரிந்து கொண்டு மதிக்க முடிந்தது. சில நேரங்களில் ஒரே கட்டுரையை இரு விதங்களில் இரு மொழிகளில் நாங்கள் பிரசுரித்ததும் உண்டு. இரு விதங்கள் என்றால் இரண்டு முற்றிலும் வேறான கட்டுரைகளென சொல்லவில்லை. மொழிபெயர்ப்பு மூலத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
ஜோஷுவா: மொழிபெயர்ப்பு என்பதே மறு உருவாக்கம்தானே, பிரதிஷ்தா? வங்காள மொழியில் நான் கிரைண்ட்மில் பாடல்களில் பணிபுரிந்தபோது உண்மையில் நான் மறு உருவாக்கம்தான் செய்து கொண்டிருந்தேன். ஒவிஸை என் தாய்மொழியில் மொழிபெயர்க்க, செய்யுளையும் எழுத்து நயத்தையும் மீண்டும் மீண்டும் கற்று மறக்க வேண்டியிருந்தது. கவிஞராக இருப்பதுதான் கஷ்டமென நினைத்தேன். ஆனால் கவிதையை மொழிபெயர்ப்பது மிகவும் கஷ்டமான பணி.
மராத்தி மொழியின் வாய்மொழி இலக்கியத்தை அதே வெளிப்பாடு, கருத்து, சிந்தனை, உச்சரிப்பு, மோனை, உருவகங்கள் ஆகியவற்றோடு அப்படியே எப்படி மொழிபெயர்க்க முடியும்? கிராமப்புற பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்களால் ஈர்க்கப்பட்ட நான், என் கவிதையை ஒரு பெண் போல் சிந்தித்து சாதி, ஆணாதிக்கம், வர்க்கப் போராட்டம் போன்றவற்றின் அரைகல்லில் அரைக்கப்பட்டு சிந்தும் மகிழ்ச்சியற்ற தானியங்கள் போல அர்த்தம் தொனிக்கச் செய்கிறேன். ஒவ்வொரு முறை நான், துசு, பாது, குலோ - ஜார கான் அல்லது ப்ரோதோகோதா போன்ற கிராமப்புற வங்காளத்தின் பெண்ணிய இசை மற்றும் கவிதை போன்றவற்றின் வாய்மொழி பாரம்பரிய தொடர்ச்சியை தேடுகிறேன்.
விரக்தியும் பரவசமும் கலந்த பணி.
மேதா: எது சவால் மிகுந்ததென நான் சொல்லவா? நகைச்சுவையை மொழிபெயர்ப்பதுதான். சாய்நாத்தின் கட்டுரைகள் ரொம்பவே கஷ்டம்! பெருவயிறு கொண்ட விலங்கும் யானைப் பாகனும் கட்டுரையை வாசிக்கும்போது ஒரே நேரத்தில் புன்னகைத்துக் கொண்டும் தலையை சொறிந்து கொண்டும் இருந்ததை தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் பார்வதி என்ற சாதுவான யானையின் மீது அமர்ந்து கொண்டு, அதன் அன்பான பாகனான பார்புவிடம் மூவர் பேசும் அற்புதமான காட்சியை உருவாக்குகிறது. விலங்கின் வயிறு எப்படி முழுமையாக நிரம்பியிருக்கிறது என புரிந்து கொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சி பலனளிக்கவில்லை.
அதன் தன்மையை, யானை சவாரி கொண்டிருக்கும் நயம் மற்றும் வேகத்தையும் நுட்பங்களையும் மாற்றாமல் மராத்திக்கு நான் மொழிபெயர்க்க வேண்டும்.
பெரும்பாலான பாரி கட்டுரைகளை போலவே இதிலும் சவால், தலைப்பிலிருந்தே தொடங்கியது. தொடர்ந்து அந்த விலங்குக்கு உணவிட வேண்டிய அவசியம், அன்றாடம் மொத்த கிராமமும் உணவளித்த பிரபலமான பாத்திரம் ‘பகாசூரனை’ நினைவுக்குக் கொண்டு வந்தது. எனவே மராத்தியில் நான் ஹாதி தாதா ஆணி பகாசுராச்சம் போட் என தலைப்பிட்டேன்.
விலங்கின் வயிறு, பண்டோராவின் பெட்டி, வெளிச்சத்தின் நாடகம் போன்ற சொற்றொடர்களை மொழிபெயர்க்கையில், நம் மொழியின் வாசகர்களுக்கு தெரிந்த சொல்லாடல்களையும், கருதுகோள்களையும், கதாபாத்திரங்களையும் நாம் கண்டறிவது முக்கியமென கருதுகிறேன்.
பிரதிஷ்தா: பிற பண்பாடுகளிலிருந்து கவிதைகளை மொழிபெயர்க்கும்போது நானும் இத்தகைய சுதந்திரங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் பாரி கட்டுரையில் அதை ஏன் ஒருவர் செய்கிறார் என புரிந்து கொள்ள முடிகிறது. மொழிபெயர்த்தல் என்பதன் அர்த்தத்தில் ஒரு பகுதியை வாசகரும் தீர்மானிக்கிறாரென நான் நினைக்கிறேன்.
‘பாரியின் மொழிபெயர்ப்புகள் வெறும் மொழியியல் செயல்பாடு அல்ல. நமக்கு பரிச்சயமான உலகங்களையும் தாண்டிய பின்னணிகளை தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளே அவை’ – பி.சாய்நாத்
கமல்ஜித்: பஞ்சாபியில் நடப்பதை நான் சொல்கிறேன். நான் மொழிபெயர்க்கும்போது என் மொழியின் விதிகளை சில நேரங்களில் நானே மீறியிருக்கிறேன். அதனால் விமர்சனங்களும் வந்திருக்கின்றன.
உதாரணமாக ஆங்கிலத்தின் கட்டுரைகளில், எல்லாரின் பிரதி பெயர்ச்சொற்களிலும் சமூகப் பிரிவுகள் இருக்காது. அனைவருக்குமே ஒரே வகை பிரதி பெயர்ச்சொல்லாகதான் இருக்கும். ஆனால் பஞ்சாபி மொழியிலோ, பிற இந்திய மொழிகளில் இருப்பதை போலவே, பிரதிப் பெயர்ச்சொற்கள் அதிகாரம், வர்க்கம், வயது, சமூகநிலை, பாலினம், சாதி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறும். எனவே ஆங்கிலத்திலிருந்து பஞ்சாபிக்கு மொழிபெயர்க்கும்போது, என்னுடைய மொழியின் சமூக மொழியியல் வடிவங்களை நான் பின்பற்றினால், என்னுடைய சித்தாந்தங்களுடன் அது முரண்படுவதாக அமையும்.
எனவே மொழிபெயர்ப்பின் தொடக்கத்திலிருந்தே எல்லா மனிதர்களுக்கும் ஒரே வித மரியாதையை கொடுப்பதென முடிவெடுத்தோம். குருவோ, அரசியல்வாதியோ அறிவியலாளரோ தூய்மை பணியாளரோ ஆணோ திருநங்கையோ அனைவருக்குமே என் மொழிபெயர்ப்பில் சம மரியாதை இருக்கும்.
எனவே தன் தரன் கிராமத்தின் நிலவுடமையாளர்களின் வீடுகளில் மாட்டுச் சாணம் சேகரிக்கும் பணியை செய்யும் தலித் பெண்ணான மஞ்சித் கவுர் பற்றிய கட்டுரை யை பஞ்சாபியில் பிரசுரித்தபோது, வாசகர்களிடமிருந்து கேள்விகள் எனக்கு வந்தன. “உன் மொழியில் மஞ்சித் கவுருக்கு ஏன் அதிக மரியாதை கொடுக்கிறாய்?”, என்றெல்லாம் கேட்டார்கள். பல வாசகர்கள் நான் கணிணி மொழிபெயர்ப்பு செய்வதாக கூட நினைத்தனர். ஏனெனில் ‘அவள்’ என குறிக்காமல் ‘அவர்’ என நான் குறிப்பிட்டிருந்தேன்.
தேவேஷ்: அட, இந்தி மொழியில் கூட விளிம்பு நிலை சமூகத்தினரை மரியாதையுடன் குறிப்பிடும் வார்த்தைகள் இல்லை. அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்தாத வார்த்தைகளை கண்டறிவதே கடினம். ஆனால் மொழிபெயர்த்தல் பணியால் இப்பிரச்சினையை நாங்கள் எதிர்கொண்டு, பிற மொழிகளில் இருக்கும் வழக்கங்களிலிருந்து யோசனைகள் உருவாக்கிக் கொண்டோம்.
போலவே இயற்கை, அறிவியல், பாலினம், மாற்றுத்திறன் போன்ற வார்த்தைகளுக்கான சரியான வார்த்தைகளை கண்டறிவதில் நான் சிரமத்தை சந்தித்தேன். இந்தி அகராதியில் சரியான வார்த்தைகள் இல்லை. சில நேரங்களில் மொழி மீது இருக்கும் கொண்டாட்ட உணர்வு, அடிப்படையான கேள்விகளை மறையச் செய்து விடுகிறது. உதாரணமாக பெண்கள், கடவுளராக குறிக்கப்படுவதையும் மாற்றுத்திறனாளிகளை ‘தெய்வீக உடல் பெற்றவர்கள்’ என குறிக்கும் ‘திவ்யாங்’ வார்த்தை கொண்டு குறிப்பதையும் சொல்லலாம். ஆனால் கள யதார்த்தத்தில், மக்களின் நிலை முன்பை விட மோசமாக இருக்கும்.
கவிதா ஐயரின் ‘குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக தனியாக நடந்து சென்றேன் ’ ( ‘मैं नलबंदी कराने के लिए घर से अकेली ही निकल गई थी’ ) கட்டுரையை நாங்கள் மொழிபெயர்த்தபோது, அளப்பரிய இலக்கியம் இந்தியில் இருந்தும் இலக்கியமற்ற வகைகள் மக்களின் துயரை தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்பதை உணர்ந்தோம். அறிவு, அறிவியல், மருத்துவம், சுகாதாரம் மற்றும் சமூகம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகளை பேசுவதற்கான ஒரு சொற்களஞ்சியம் இங்கு உருவாக்கப்படவில்லை.
ஸ்வர்ண காந்தா: போஜ்புரியிலும் இதே கதைதான். சொல்லப்போனால் இன்னும் மோசம் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இம்மொழியில் எழுத்தாளர்களை விட இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம். கல்விக்கான மொழியாக இல்லாததால், போஜ்புரி மொழியில் மருத்துவம், பொறியியல், இணையம், சமூக தளம் போன்ற புதிய தொழில்கள் சார்ந்த வார்த்தைகள் இல்லை.
நீங்கள் சொல்வது போல் புதிய வார்த்தைகளை உருவாக்கலாம்தான் தேவேஷ். ஆனால் அது குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடும். ‘திருநங்கை’ என்ற வார்த்தைக்கு நாங்கள் வழக்கமாக ‘ஹிஜ்ரா’, ‘சக்கா,’ ‘லவுண்டா’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவோம். ஆனால் அவை ஆங்கிலத்தில் கடுமையான வசவு வார்த்தைகளாக இருக்கின்றன. போலவே, எந்தளவுக்கு நாங்கள் முயற்சித்தாலும் பெண்கள் தினம், மனநலம், சட்டங்களின் பெயர்கள் (சுகாதார சட்டம்), விளையாட்டு நிகழ்ச்சிகள் (ஆண்களுக்கான சர்வதேச உலகக் கோப்பை) போன்ற வார்த்தைகளை மொழிபெயர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.
குடும்பத்துக்குள்ளும் வெளியும் சாதி மற்றும் பாலின பாகுபாடுக்கு எதிராக போராடும் பிகாரின் சமஸ்டிப்பூர் மாவட்டத்திலுள்ள மகாதலித் சமூகத்தை சேர்ந்த 19 வயது சிறுமி ஷிவானியின் கட்டுரை யை மொழிபெயர்த்தபோது இதுதான் நேர்ந்தது. இத்தகைய பாகுபாடு காட்டப்படும் முறைகளை பற்றிய அறிதல் எனக்கு அதிகம் இருந்தபோதும், நிஜ வாழ்க்கைகளிலிருந்து வரும் இத்தகைய செய்திகளை கொண்ட கட்டுரைகளை நாம் வாசிக்கும் வாய்ப்பையே பெற்றதில்லை என்பதை உணர்ந்தேன்.
மொழிபெயர்ப்புகள்தாம் ஒரு சமூகத்தின் அறிவார்ந்த சமூக வளர்ச்சியை வழங்குமென நான் நம்புகிறேன்.
நிர்மல்: அதே போல்தான் முறைப்படுத்தப்படாத ஒரு மொழியில் பணிபுரிவதும். சத்தீஸ்கரின் ஐந்து பகுதிகளில் - வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தி - கிட்டத்தட்ட இரண்டு டஜன் வடிவ சத்தீஸ்கரி மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. எனவே சத்தீஸ்கரியில் மொழிபெயர்ப்பது சவால் மிகுந்தது. குறிப்பிட்ட ஒரு வார்த்தையை தேர்ந்தெடுக்கக் கூட நான் அடிக்கடி குழப்பமடைவேன். பத்திரிகையாளர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களிடம் உதவி கேட்பேன். புத்தகங்களின் உதவியையும் கொள்வேன்.
சாய்நாத் எழுதிய பரிசுகள் கொடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் எச்சரிக்கை வேண்டும் என்கிற கட்டுரையில், புழக்கத்தில் இல்லாத பல சத்தீஸ்கரி வார்த்தைகளை நான் எதிர்கொண்டேன். சட்டீஸ்கரின் சுர்குஜா பகுதி ஜார்க்கண்டின் எல்லைக்கருகே இருக்கிறது. அங்கு ஒராவோன் பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். காடுகள் தொடர்பான வார்த்தைகள் அவர்கள் பேசும் சத்தீஸ்கரியில் வழக்கம். அக்கட்டுரை, அதே சமூகத்தை சேர்ந்த பெண்ணை பற்றி என்பதால், பழங்குடியினரை தொடர்பு கொள்ள முயன்று, அப்பகுதியின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை பயன்படுத்தினேன். ஆனால் அச்சமூக மக்கள் குருக் மொழியில்தான் பேசுவார்கள்.
ஒரு காலத்தில் அன்றாட வாழ்வில் புழங்கிய சுகுர்தும், கெளவ்யா, ஹாங்கா, ஹாங்கே, லண்டா, ஃபாண்டா, கேடா, அல்கர்ஹா போன்ற வார்த்தைகள், அச்சமூகத்தினர் நீர், நிலம் மற்றும் காடுகளிடமிருந்து அகன்றதால் எப்படி பயன்பாட்டில் இல்லாமல் போனது என்பது தெரிய வந்த போது ஆச்சரியமாக இருந்தது.
சுற்றுச்சூழலும் வாழ்வாதாரங்களும் ஜனநாயகமும் மொழிகளின் எதிர்காலத்துடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. மொழிகள் கொண்டு வரும் அபரிமிதமான வகைமைகள் மதிக்கப்பட்டதே இல்லை – பி.சாய்நாத்
பங்கஜ்: ஒருவர் மொழிபெயர்க்கும் மக்களின் உலகத்துக்குள் செல்வது மொழிபெயர்ப்பு பணியில் முக்கியமென நான் உணர்ந்தேன். ஆருஷின் கட்டுரை , ஒரு திருநம்பிக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கக் கூடிய காதலுக்கும் அவர்களின் போராட்டம் கொண்டிருக்கும் நுட்பங்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. சரியான கலைச்சொல்லை கண்டறிய, கலைச்சொற்களை பற்றி எச்சரிக்கையாக ஆராய்ந்தேன். உதாரணமாக ’பாலின மறுதேர்வு சிகிச்சை’ என்ற வார்த்தையை அடைப்புக்குறிகளிட்டும் ’பாலினம் உறுதி செய்யும் சிகிச்சை’ என்கிற வார்த்தையை முன்னிறுத்தியும் எழுதினேன்.
திருநர் சமுகத்தை இழிவுபடுத்தாத வார்த்தைகளை நான் கண்டுபிடித்தேன்: ருபண்டோர்கமி அல்லது நாரி அல்லது பாலினம் உறுதிப்படுத்தப்பட்டால், ருபண்டொரிடோ புருஷ் அல்லது நாரி என குறிப்பிடுவோம். அது ஒரு அழகான வார்த்தை. போலவே தற்பாலின சேர்க்கையாளர்களை சோமோகோமி என குறிப்பிடுவோம். ஆனால் இன்று வரை பால்புதுமையரை மதிப்புற குறிப்பிடும் சரியான வார்த்தை எங்களிடம் இல்லை. வெறுமனே வார்த்தைகளை மட்டும் எங்கள் மொழிக்கு கொண்டு வருகிறோம்.
ராஜசங்கீதன்: கோவிட் 19 தோற்றுப் பரவலின்போது பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகளை விவரித்த கட்டுரை என் நினைவுக்கு வருகிறது பங்கஜ். அக்கட்டுரை என்னை உலுக்கியது. உலகம், புதிதாக கண்டறியப்பட்ட நோயை சமாளிக்க போராடிக் கொண்டிருந்தபோது, அமைப்புரீதியாக அரசாங்கம் ஏழைகளின் பால் கொண்டிருக்கும் அலட்சியமும் அகங்காரமும் சாமானிய இந்தியர்களின் பிரச்சினைகளை பன்மடங்காக்கியது. தனிச்சலுகை பெற்ற மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கையே சிரமமாக இருந்த காலக்கட்டத்தில், விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளை பொருட்படுத்த எவருமில்லை. ஆகாங்க்ஷாவின் காமாத்திப்புரா கட்டுரை , நம் பொதுப்புத்திக்குள் வர நாம் அனுமதிக்காத மக்களின் துயரங்களின் பக்கம் நம் கவனத்தை திருப்பியது.
வாடிக்கையாளர்கள் வந்து செல்லும், அவர்களின் மூச்சடைக்கும் சிறு அறைகளில், தேசிய ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், இளம் குழந்தைகளும் தங்க வேண்டிய சூழல். அந்தக் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு இந்த புதுச்சூழல் எப்படி இருந்திருக்கும்? பாலியல் தொழிலாளராகவும் தாயாகவும் இருக்கும் பிரியா, பிழைப்பு மற்றும் தாய்மை உணர்வுகளுக்கு இடையில் ஊசலாடும் நிலை. அவரின் மகன் விக்ரமோ அவர்களை சுற்றி இருக்கும் கொடுமையான வாழ்க்கைகளினூடாக தன்னுடைய வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டறிய முயற்சிக்கிறார்.
குடும்பம், அன்பு, நம்பிக்கை, சந்தோஷம், வளர்ப்பு போன்ற விஷயஙக்ள் இக்கட்டுரையில் அதிர்ச்சி தரும் வடிவங்களை எடுக்கின்றன. ஆனால் ஆச்சரியகரமாக அவை அதே சமூக விழுமியங்களைக் கொண்டிருக்கின்றன. இக்கட்டுரைகளை மொழிபெயர்க்கையில், நம்பிக்கையற்ற சூழலிலும் நம்பிக்கையை நோக்கிய மனிதர்களின் உள்ளார்ந்த தேடலை புரிந்து கொள்ள முடிந்தது.
சுதமாயி: நிச்சயமாக. LGBTQIA+ கட்டுரைகள் மொழிபெயர்ப்பதற்கு முன் வரை அச்சமூகத்தினரை பற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில், அவர்கள் மீதும் அவர்கள் சார்ந்த விஷயங்கள் மீதும் எனக்கு ஒரு அச்சமே கூட இருந்தது. திருநர் சமூகத்தினரை சாலைகளிலும் சிக்னல்களுக்கருகேயும் பார்க்கும்போதும் வீட்டுக்கு அவர்கள் வரும்போதும் அவர்களை பார்க்கக் கூட நான் அஞ்சுவேன். நானுமே கூட அவர்கள் ஏதோவொரு வகை செயற்கையான தன்மையுடன் இருக்கிறார்கள் என நினைத்தேன்.
அவர்களை பற்றிய கட்டுரைகளை மொழிபெயர்க்கையில் கலைச்சொற்கள் சரியாக இருக்க வேண்டுமென்பதற்காக அவர்களை பற்றி தெரிந்தவர்களை நான் தேட வேண்டியிருந்தது. பிறகு இக்கட்டுரைகளை வாசித்து, புரிந்து, தொகுக்கும் செயல்பாட்டில், புரிதலை அடைந்து திருநர் மீதான அச்சத்தை விலக்கி வர என்னால் முடிந்தது. இப்போது எங்கு அவர்களை பார்த்தாலும் அன்புடன் சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்கிறேன்.
அவரவரின் பாரபட்சங்களை அகற்றி, தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் மொழிபெயர்ப்புகள் ஒருவகையில் உதவுகிறது.
பிரணதி : பல பண்பாட்டுக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது நான் அவ்வாறு உணர்ந்திருக்கிறேன். பல்வேறு பண்பாட்டு வெளிகளிலிருந்து வரும் கட்டுரைகளை கவனமாக வாசித்து மொழிபெயர்ப்பதிலேயே பலவகை பண்பாட்டு முறைகள் குறித்து மொழிபெயர்ப்பாளர் கற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு கட்டுரையின் பண்பாட்டு அம்சங்களை அதன் மூலமொழியில் புரிந்து கொள்வது கட்டாயமான விஷயம்.
இந்தியாவை போன்ற காலனியாதிக்க நாடுகளில், ஆங்கிலம்தான் தொடர்பு மொழி. சில நேரங்களில் பலரின் பூர்வ மொழிகள் நமக்கு தெரிவதில்லை. அவர்களுடன் இயங்க ஆங்கிலத்தை சார்ந்திருப்போம். ஆனால் மனசாட்சியுள்ள மொழிபெயர்ப்பாளர் விடாமுயற்சியுடன் பொறுமையாக பல்வேறு பண்பாட்டு முறைகளையும் வரலாறுகளையும் மொழிகளையும் கற்றுக்கொள்கையில் நல்ல விளைவு கிடைக்கும்.
ராஜீவ்: எத்தனை பொறுமையாக இருந்தாலும், குறிப்பிட்ட தொழில்கள் பற்றிய கட்டுரைகள் எழுதும்போது என்னால் சரியான வார்த்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை. தொழிலின் நுட்பங்களை , அதன் உபகரணங்களின் சரியான பெயர்களை குறிப்பிட்டு, விரிவாக விளக்குவதென்பது சவாலான விஷயம். காஷ்மீரின் நெசவாளர்கள் பற்றிய உஃபாக் ஃபாத்திமாவின் கட்டுரை யில், சர்கானா மற்றும் சஷ்ம் இ புல்புல் போன்ற நெய்யும் வடிவங்களின் பெயர்களை மொழிபெயர்க்க, நான் சிரமப்பட்டேன். அவற்றுக்கு இணையான வார்த்தைகள் மலையாளத்தில் இல்லை. எனவே விரிவான சொற்றொடர்களைத்தான் நான் பயன்படுத்த முடிந்தது. பட்டு என்கிற வார்த்தை கூட சுவாரஸ்யமாக இருந்தது. மலையாளத்தில் பட்டுத் துணியை குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தை காஷ்மீரில் நெய்யப்பட்ட கம்பளி துணியாக இருக்கிறது.
கமார்: உருது மொழியில் சொற்களஞ்சியம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் குறித்த பாரியின் கட்டுரைகளை மொழிபெயர்க்கையில் அவற்றுக்கான வார்த்தைகள் கண்டறிவது சிரமம். இந்தி மொழியின் நிலைமை வித்தியாசமானது. ஒன்றிய அரசால் முன்னிறுத்தப்பட்டு, மாநில அரசின் ஆதரவில் இயக்கப்படும் மொழி அது. அம்மொழிக்கென அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. எனவே அம்மொழிக்கு கலைச்சொற்கள் சுலபமாக கிடைத்துவிடுகிறது. உருது மொழி அப்படி கிடையாது. பல கலைச்சொற்களுக்கு உருது மொழியில் இன்னும் ஆங்கில கலைச்சொற்களைதான் பயன்படுத்துகிறோம்.
ஒரு காலத்தில் உருதுமொழி முக்கியமாக இருந்தது. தில்லி கல்லூரி மற்றும் ஹைதராபாத்தின் ஒஸ்மானியா பல்கலைக்கழகம் போன்றவை உருது மொழிபெயர்ப்புகளுக்கு புகழ்பெற்றவை. கல்கத்தாவில் ஃபோர்ட் வில்லியம் கல்லூரியின் பிரதான நோக்கமே, மொழிபெயர்ப்புகளை செய்யவென பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பது மட்டும்தான். இன்று அந்த இடங்களெல்லாம் இல்லை. 1947ம் ஆண்டுக்கும் பிறகு இந்திக்கும் உருதுமொழிக்கும் இடையே நடக்கும் சண்டையை பார்க்கிறோம். உருதுமொழிக்கான கவனம் முற்றிலும் மறைந்தே விட்டது.
கமல்ஜித்: தேசப்பிரிவினை, மொழியையும் பிரித்து விட்டதாக நினைக்கிறீர்களா? எனக்கென்னவோ மக்கள் கூட பிரிவினைவாதிகளாக இருக்கலாம், மொழிகள் பிரிக்க முடியாது என தோன்றுகிறது.
கமார்: மொத்த நாட்டுக்கும் சொந்தமாக உருதுமொழி இருந்த காலக்கட்டம் ஒன்று இருந்தது. தெற்கில் கூட அம்மொழி இருந்தது. அவர்கள் அதை தக்காணிய உருது என அழைத்தார்கள். அம்மொழியில் கவிஞர்கள் இலக்கியம் படைத்தனர். அவை உருது பாடத்திட்டத்திலும் இடம்பெற்றன. ஆனால் இஸ்லாமியர் ஆட்சி முடிந்ததும் அது எல்லாமும் முடிவுக்கு வந்தது. நவீன இந்தியாவில் ’இந்தி பெல்ட்’ என நாம் அழைக்கும் உத்தரப்பிரதேசம், பிகார் மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளில் மட்டும்தான் உருது இருக்கிறது.
அங்கெல்லாம் பள்ளிகளில் உருது மொழி கற்பிக்கப்பட்டன. இந்துக்கள் இஸ்லாமியர் என்ற பேதமெல்லாம் இருக்கவில்லை. எனக்கு தெரிந்தே, ஊடகத்தில் பணிபுரியும், இந்து மதத்தை சேர்ந்த பல மூத்த பத்திரிகையாளர்களுக்கு, உருது மொழியும் தெரியும். பால்ய காலத்தில் அவர்கள் அம்மொழியை பள்ளியில் பயின்றார்கள். ஆனால் இப்போது அவர்கள் உருது கற்பிப்பதில்லை. ஒரு மொழியை நீங்கள் கற்றுக் கொடுக்காமல் அம்மொழி எப்படி உயிர் வாழும்?
ஒரு காலத்தில் உருதுமொழி படிப்பதால் ஒருவருக்கு வேலை கிடைக்கும் சூழல் இருந்தது. சில வருடங்கள் முன் வரை கூட, சில உருது மொழி செய்தித்தாள்களும் உருது மொழி ஊடகத்தினரும் இருந்தனர். ஆனால் 2014ம் ஆண்டுக்கு பிறகு நிதி இன்றி செய்தித்தாள்களும் நின்று போனது. உருது மொழி பேசும் மக்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துவிட்டது.
தேவேஷ்: மொழி மற்றும அரசியல் ஆகியவை கலந்த உண்மையான துயரக்கதை இது கமார். ஆனால் நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகளை இன்று யார் படிக்கின்றனர்? உங்களது பணியின் அர்த்தமென எதை பார்க்கிறீர்கள்?
கமார்: ஓ, பாரியில் நான் சேர்ந்ததும் நடத்தப்பட்ட வருடாந்திர சந்திப்பில் அதை நான் சொன்னேன். இங்கிருப்பவர்கள் மொழியை பாதுகாக்க விரும்புபவர்கள் என நான் தெரிந்து கொண்டேன். அதனால்தான் இன்றும் நான் பாரியில் இருக்கிறேன். உருது மொழி மட்டுமென இல்லை. அருகி வரும் ஒவ்வொரு மொழியையும் பாதுகாக்கவென உறுதி கொண்ட ஒரு பெட்டகமே இங்கு இருக்கிறது.
இக்கட்டுரை, பாரி மொழிகள் குழுவினரான தேவேஷ் (இந்தி), ஜோஷுவா போதிநெத்ரா (வங்காளம்), கமல்ஜித் கவுர் (பஞ்சாப்), மேதா கலே (மராத்தி), முகமது கமார் தப்ரெஸ் (உருது), நிர்மல் குமார் சாஹூ (சட்டீஸ்கரி), பங்கஜ் தாஸ் (அசாமி), பிரணதி பரிதா (ஒடியா), பிரதிஷ்தா பாண்டியா (குஜராத்தி), ராஜசங்கீதன் (தமிழ்), ராஜீவ் செலானாத் (மலையாளம்), ஸ்மிதா கடோர் (வங்காளம்), ஸ்வர்ண காந்தா (போஜ்புரி), ஷங்கர் என். கெஞ்சானுரு (கர்நாடகா) மற்றும் சுதாமாயி சட்டெனப்பள்ளி (தெலுங்கு) ஆகியோரால் எழுதப்பட்டது. ஸ்மிதா கடோர், மேதா கலே, ஜோஷுவா போதிநெத்ரா ஆகியோர் கொண்ட ஆசிரியர் குழுவின் உதவியோடு பிரதிஷ்தா பாண்டியாவால் தொகுக்கப்பட்டது. புகைப்பட தொகுப்பு பினாய்ஃபர் பருச்சா.
தமிழில் : ராஜசங்கீதன்