தனது படிப்புக்கு உதவும் என்று ஸ்மார்ட் ஃபோன் வாங்க விரும்பினார் 18 வயது மாணவியான ஜஸ்தீப் கௌர். இதற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் கடனாகக் கொடுத்தார்கள் அவரது பெற்றோர். இந்தக் கடனை அடைப்பதற்காக, 2023-ம் ஆண்டு கோடை விடுமுறையில் நடவு வேலை செய்தார் ஜஸ்தீப்.
பஞ்சாபில் முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில், தங்கள் குடும்பத்துக்கு உதவி செய்வதற்காக ஏராளமான தலித் மாணவர்கள் விவசாய வேலை செய்கிறார்கள்.
“மகிழ்ச்சிக்காக நாங்கள் நிலத்தில் வேலை செய்யவில்லை. எங்கள் குடும்பத்துக்கு வேறு வழியில்லை என்பதால் வேலை செய்கிறோம்,” என்கிறார் ஜஸ்தீப். அவர் பஞ்சாபில் பட்டியல் சமூகமான மசாபி சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு நிலம் இல்லை. அவர்கள் ஆதிக்க சாதி விவசாயிகளின் நிலங்களில் வேலை செய்கிறார்கள்.
ஒரு பசுமாடு வாங்குவதற்காக, ஒரு நுண் நிதி நிறுவனத்தில் பெற்ற 38 ஆயிரம் ரூபாய் கடனில் இருந்துதான் ஜஸ்தீப் ஸ்மார்ட் போன் வாங்க கடன் கொடுத்தார்கள் அவரது பெற்றோர். பால் ஒரு லிட்டர் ரூ.40 வரையில் விற்கும். அந்தப் பணம் வீட்டுச் செலவுக்கு உதவுகிறது. முக்த்சர் மாவட்டத்தில் உள்ள அவர்களுடைய ஊரான குந்தே ஹலால் கிராமத்தில் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த ஊரில் 33 சதவீத மக்கள் விவசாயத் தொழிலாளர்கள்.
ஜூன் மாதம் ஜஸ்தீப் கல்லூரித் தேர்வு எழுதியபோது ஸ்மார்ட் ஃபோன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது இடையில் இரண்டு மணி நேரம் இடைவெளி எடுத்து, ஆன்லைனிலேயே அந்த தேர்வை முடித்தார் அவர். “வேலையை விட்டுவிட்டு என்னால் போக முடியாது. நான் கல்லூரிக்குப் போயிருந்தால், அன்றைய தேதியில் என்னுடைய கூலி குறைக்கப்பட்டிருக்கும்,” என்கிறார் ஜஸ்தீப்.



















