“108-ஐ (அவசர ஊர்திக்கான எண்) பல முறை அழைத்து பார்த்தேன். இணைப்பு பிஸியாகவே தொடர்பு எல்லைக்கு அப்பாலோதான் இருந்தது.” அவரின் மனைவி கருப்பை தொற்றால் பாதிக்கப்பட்டு, மருந்துகள் எடுத்தும் தீவிரமாக உடல்நலம் குன்றியிருந்தது. இரவு ஆகிவிட்டது. அவரது வலி அதிகரித்து விட்டது. அவருக்கு மருத்துவ உதவி கிடைக்க கணேஷ் பஹாரியா கடுமையாக முயன்று கொண்டிருந்தார்.
“இறுதியில் உள்ளூர் அமைச்சரின் உதவியாளர் உதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தொடர்பு கொண்டேன். தேர்தல் பிரசாரத்தின்போது எங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்திருந்தார்,” என நினைவுகூர்கிறார் கணேஷ். ஆனால் அமைச்சர் இல்ல என உதவியாளர் கூறி விட்டார். “எங்களுக்கு உதவி செய்ய அவர் மறுத்து விட்டார்.”
கலக்கத்துடன் கணேஷ், “ஓர் அவசர ஊர்தி இருந்திருந்தால் அவளை பொகாரோ அல்லது ராஞ்சி போன்ற இடங்களிலுள்ள (நகரங்கள்) நல்ல அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றிருப்பேன்,” என்கிறார். ஆனால் அவர், உறவினரிடம் 60,000 ரூபாய் கடன் பெற்று அருகே இருந்த தனியார் மருத்துவ மையத்துக்கு மனைவியை அழைத்து சென்றார்.
“தேர்தல் நேரத்தில், இது நடக்கும், அது நடக்கும் என பலவற்றை சொல்கிறார்கள்… எங்களை ஜெயிக்க மட்டும் வையுங்கள் என்கிறார்கள். ஆனால் பிறகு அவர்களை சென்று நீங்கள் சந்திக்கும்போது, உங்களை பார்க்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை,” என்கிறார் 42 வயது ஊர்த் தலைவர். பஹாரியா சமூகத்துக்கான அடிப்படை வசதிகளை அரசு புறக்கணிப்பதாக சொல்கிறார் அவர்.
பகூர் மாவட்டத்தின் ஹிரான்பூர் ஒன்றியத்திலுள்ள சிறு கிராமம், தங்காரா. பஹாரியா பழங்குடி சமூகத்தை சேர்ந்த 50 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. ராஜ்மகால் மலைத்தொடரின் பக்கவாட்டில் தனித்து இருக்கும் அந்த கிராமத்தை அடைய, மோசமான சாலையில் எட்டு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.
“எங்கள் அரசுப் பள்ளி மோசமான நிலையில் இருக்கிறது. புதிய பள்ளி கேட்டோம். ஆனால் எங்கு கிடைத்தது?” எனக் கேட்கிறார் கணேஷ். பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் சேராததால், அரசின் மதிய உணவை பெற முடிவதில்லை.










