65 வயது முனாவ்வர் கான், காவல்நிலையத்தை அடைந்தபோது மகனின் துயர்மிகு ஓலங்களை கேட்க முடிந்தது. 15 நிமிடங்கள் கழிந்து அச்சத்தம் அடங்கியது. இஸ்ரேல் கானின் தந்தையான அவர், காவலர்கள் மகனை அடிப்பதை நிறுத்தி விட்டனர் என நினைத்தார்.
அன்று காலை, ஒரு மதக்கூட்டத்தில் கலந்து கொண்டு போபாலை விட்டு கிளம்பியிருந்தார் இஸ்ரேல். 200 கிலோமீட்டர் தொலைவில் அவர் தினக்கூலியாக பணிபுரியும் கட்டுமானத் தளம் இருக்கும் குனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அன்று மாலை (நவம்பர் 21, 2020) குனாவுக்கு திரும்பிய அவர், வீட்டுக்கு வரவில்லை. இரவு 8 மணிக்கு, வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கோகுல் சிங் கா சக் குப்பத்தில் நான்கு காவலர்கள், இஸ்ரேல் வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி அவரை அழைத்து சென்றனர்.
சிறையிலடைக்கப்பட்டபோது மாமியாரிடம் தொலைபேசியில் இஸ்ரேல் பேசினார் என்கிறார் 32 வயது அக்காவான பானோ. “அப்படித்தான் காவலர்கள் அவனை பிடித்து சென்ற விஷயம் எங்களுக்கு தெரிய வந்தது.”
அருகிலிருக்கும் குஷ்முடா காவல் நிலையத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்குதான், காவலர்கள் அவரை தாக்கியதில் அவர் எழுப்பிக் கொண்டிருந்த ஓலங்களை முனாவ்வர் கேட்டார்.
காவலர்கள் அடிப்பதை நிறுத்தி விட்டதால், மகனின் சத்தம் அடங்கவில்லை என்பது 45 நிமிடங்கள் கழித்து முனாவ்வருக்கு தெரிய வந்தது. அவர் உயிர் பறிக்கப்பட்டிருந்தது. தலைக் காயத்தாலும் மாரடைப்பாலும் அவர் இறந்ததாக உடற்கூராய்வு தெரிவித்தது.
அந்த 30 வயது இஸ்லாமிய புலம்பெயர் தொழிலாளர், ஒரு சூதாடியை காப்பாற்ற முயன்று காவலர்களை எதிர்த்ததால், கைது செய்யப்பட்டதாக மத்தியப்பிரதேச காவல்துறை சொன்னதாக செய்திகள் வெளியாகின.
அவரின் குடும்பமோ அதை ஏற்கவில்லை. “இஸ்லாமியர் என்பதால்தான் அவர் கைது செய்யப்பட்டார்,” என்கிறார் இஸ்ரேலின் தாயான முன்னி பாய்.
காவல் நிலையத்தில் இஸ்ரேல் இறந்ததில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் இறந்த விதத்தில் சந்தேகம் உண்டு.
குனாவின் காவல் கண்காணிப்பாளரான ராகேஷ் சாகர், குனாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஷோக் நகரின் ரயில் தண்டவாளத்தில் விழுந்து காயத்துடன்தான் இஸ்ரேல் காவல் நிலையத்துக்கு வந்ததாக சொல்கிறார். “சம்பந்தபட்ட கான்ஸ்டபிள்கள் நான்கு பேர் தற்காலிக பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்,” என்கிறார். “அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என தெரிய வந்திருக்கிறது. அடுத்த நடவடிக்கையை எங்களின் குற்றப்பிரிவு இலாகா தீர்மானிக்கும்.”
சம்பவம் நடந்த இரவில் குஷ்முடா காவல் நிலைய காவலர்கள், கண்ட்ட் காவல்நிலையத்துக்கு இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது, இஸ்ரேலின் ஆரோக்கியம் நலிவுற்று, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகக் கூறினர். “ஏதோ பிரச்சினை என புரிந்து கொண்டோம்,” என்கிறார் பானோ. “எங்களின் தந்தை மருத்துவமனையை அடைந்தபோது இஸ்ரேல் இறந்திருந்தான். உடலெங்கும் காயங்கள். கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறான்.”
ஓரறை வீட்டில் எதிரில் உட்கார்ந்திருக்கும் இஸ்ரேலின் தாய், எங்களின் பேச்சை கேட்டு கண்ணீரை மறைக்க முயலுகிறார். ஒரு வளாகத்துக்குள் இரண்டு பொது கழிப்பறைகளுடன் இருக்கும் மூன்றிலிருந்து நான்கு சிறு காங்கிரீட் அறைகளில் ஒன்று அவர்களின் வீடு.
பெரும் பிரயத்தனத்துக்கு பிறகு முன்னி பாயும் உரையாடலில் பங்குபெற்றார். பேச முற்படும் ஒவ்வொரு முறையும் அவர் உடைந்தார். ஆனாலும் அவரின் கருத்தை தெரிவிப்பதில் உறுதியாக இருந்தார். “இஸ்லாமியர்களை இலக்காக்குவது இப்போதெல்லாம் சுலபமாகி விட்டது,” என்கிறார் அவர். “இரண்டாம் தர குடிமக்களாக நாங்கள் ஆகி விட்டதை போல் இருக்கிறது. நாங்கள் கொல்லப்பட்டாலும் எவரும் பேச மாட்டார்கள்.”
ஜூலை 2022-ல் ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் 4,484 காவல்நிலைய மரணங்கள் ஏப்ரல் 2020 தொடங்கி மார்ச் 2022 வரை இந்தியாவில் நடந்திருப்பதாக குறிப்பிட்டது. அதாவது நாளொன்றுக்கும் ஆறு பேருக்கு மேல்.
இவற்றில் 364 பேர் மத்தியப்பிரதேசத்தில் இறந்திருக்கின்றனர். உத்தரப்பிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் இருக்கின்றன.
“காவல் நிலையங்களில் கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மை விளிம்புநிலை சமூகத்தினரும் சிறுபான்மையினரும்தான்,” என்கிறார் குனாவை சேர்ந்த செயற்பாட்டாளரான விஷ்ணு ஷர்மா. அவர்களை நாம் இரக்கமற்று நடத்துவது குற்றம்.
இஸ்ரேலின் தினக்கூலி வீட்டுக்கு ஒரு நாளுக்கு 350 ரூபாய் கொண்டு வரும். நல்ல மாதமெனில், 4,000 -5,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அந்த வருமானத்தில்தான் குடும்பம் பிழைத்தது. 30 வயது மனைவி ரீனா, 12, 7, மற்றும் 6 வயதுகள் கொண்ட மகள்களும் ஒரு வயது மகனும் அவருக்கு உள்ளனர். “காவலர்கள் விளைவுகளை தெரிந்து நடந்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தையே அவர்கள் காரணமின்றி அழித்திருக்கின்றனர்,” என்கிறார் பானோ.
செப்டம்பர் 2023-ல் நான் குடும்பத்தை சந்தித்தபோது ரீனா, தன் குழந்தைகளுடன் குனா நகரத்தில் வெளியில் இருக்கும் பெற்றோரின் வீட்டில் இருந்தார். “இங்குமங்குமாக அவர் மாறி வசித்துக் கொண்டிருக்கிறார்,” என்கிறார் பானோ. “நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டாள். முடிந்தளவுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். அவர் விரும்பும்போது வந்து போகலாம். இதுவும் அவரின் வீடுதான்.”
ரீனாவின் குடும்பம் பணக்கார குடும்பம் அல்ல. அவரையும் அவரின் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள முடியாது. அவரின் மகள்கள் தந்தையின் மரணத்திலிருந்து பள்ளிக்கு செல்லவில்லை. “பள்ளி சீருடைக்கோ பைகளுக்கோ நோட்டுபுத்தகங்களுக்கோ எங்களால் பணம் கட்ட முடியவில்லை,” என்கிறார் அவரின் அத்தை பானோ. “குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். குறிப்பாக 12 வயது மெஹெக். பேசிக் கொண்டே இருப்பவள். இப்போது மிக குறைவாகவே பேசுகிறாள்.”
சித்ரவதைக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு 1997ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உடன்பட்டு வருகிறது. ஆனால் சித்ரவதைக்கு எதிராக சட்டம் மட்டும் இயற்றாமல் இருக்கிறது. ஏப்ரல் 2010-ல் காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு, சித்ரவதைக்கு எதிரான ஒரு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால் சட்டமாகவில்லை. விசாரிக்கப்படாத காவல்நிலைய மரணங்கள்தான் இந்தியாவில் நிலையாக இருக்கிறது. இஸ்லாமியர்கள், தலித்கள் மற்றும் பழங்குடியினர் போன்ற விளிம்புநிலை சமூகத்தினர்தான் கடும் பாதிப்பை எதிர்கொள்பவராக இருக்கிறார்கள்.
35 வயது பிசானின் சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கர்கோனே மாவட்டத்தின் கைர் கண்டி கிராமத்தை சேர்ந்த பழங்குடியும் சிறு விவசாயியும் தொழிலாளருமான அவர், காவல்துறையால் ஆகஸ்ட் 2021-ல் கைது செய்யப்பட்டார். 29,000 ரூபாய் திருடி விட்டாரென்ற சந்தேகத்தில் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டார்.
மூன்று நாட்கள் கழித்து, பில் பழங்குடியான பிசான் கொண்டு செல்லப்பட்டபோது, அவரின் வலி வெளிப்படையாக தெரிந்தது. உதவியின்றி நேராகக் கூட நிற்க முடியவில்லை என்கின்றனர் வழக்காடும் செயற்பாட்டாளர்கள். எனினும் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரின் காயங்களால் சிறை அதிகாரிகள் அவரை சிறையிலடைக்க மறுத்தனர்.
நான்கு மணி நேரங்கள் கழித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையை அடைவதற்கு முன்பே உயிர் பிரிந்து விட்டது. உடற்கூராய்வில் அவர் காயங்களில் உருவான தொற்றினால் செப்டிக் ஷாக் நேர்ந்து இறந்ததாக கண்டறியப்பட்டது.
பிசானுக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கின்றனர். இளையக் குழந்தைக்கு 7 வயது.
அம்மாநிலத்தில் இயங்கும் ஜக்ரித் ஆதிவாசி தலித் சங்காதன் (JADS) பிசானின் வழக்கை கையிலெடுத்தது. பொது நல வழக்கு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
”29,000 எடுத்தாரென்கிற சந்தேகத்துக்காக உயிர் போகுமளவுக்கு சித்ரவதை செய்வீர்களா?” எனக் கேட்கிறார் JADS தலைவர் மாதுரி கிருஷ்ணஸ்வாமி. “வழக்கை திரும்பப் பெறும்படி பிசானின் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதால், நாங்களே வழக்காடுவது என முடிவெடுத்தோம். மனித உரிமை ஆணைய விதிகளை காவல்துறை பின்பற்றவில்லை.”
தேசிய மனித உரிமை ஆணைய விதிகளின்படி, “உடற்கூராய்வு, காணொளி மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணை ஆகியவற்றை சம்பவம் நடந்த இரு வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும். காவல் நிலைய மரணம் ஒவ்வொன்றிலும், மாஜிஸ்திரேட் விசாரணையும் நடத்தப்பட வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடிந்து அதற்கான அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும்.”
இஸ்ரேல் இறந்தபோது, உடற்கூராய்வு அறிக்கையை கொடுக்காமல், உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யும்படி காவல்துறை குடும்பத்துக்கு அழுத்தம் கொடுத்தது. ஒரு வருடமாகியும் குடும்பத்துக்கு இன்னும் மாஜிஸ்திரேட் விசாரணை முடிவு என தெரிவிக்கப்படவில்லை.
அரசிடமிருந்து அவர்களுக்கு பொருளாதார உதவி கூட கிடைக்கவில்லை. இஸ்ரேலின் குடும்பம் சந்திக்க அவகாசம் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர் நிராகரித்து விட்டார் என்கிறார் பானோ. “எங்களை எல்லாரும் மறந்து விட்டார்கள். நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையும் எங்களுக்கு போய்விட்டது.”
பிரதான வருமானம் ஈட்டுபவரை குடும்பம் இழந்துவிட்டது. முதிய பெற்றோர்தான் வருமானம் ஈட்ட வேண்டியிருக்கிறது.
பக்கத்து வீட்டு மாடுகளுக்கு பால் கறக்கும் வேலையை முன்னி பாய் செய்யத் தொடங்கியிருக்கிறார். கால்நடைகளை அவரின் வீட்டு வராண்டாவுக்கு அழைத்து வந்து ஒவ்வொன்றாக பால் கறக்கிறார். முடித்தபிறகு, கால்நடைகளை பாலுடன் கொடுத்து விடுகிறார். நாளொன்றுக்கு 100 ரூபாய் கிடைக்கிறது. “என் வயதுக்கு இவ்வளவுதான் செய்ய முடிகிறது,” என்கிறார் அவர்.
அறுபது வயதுகளில் இருக்கும் முனாவ்வர், பலவீனமாக மூட்டுவலியில் உழன்றாலும், கூலி வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கட்டுமான தளங்களில் அவர் மயங்கி விழுவார். இதனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அவரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கின்றனர். குப்பத்தை தாண்டி அதிக தூரம் அவர் செல்வதில்லை. ஐந்திலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில்தான் வேலை தேடுகிறார். அப்போதுதான் ஏதேனும் அவசரம் என்றால் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முடியும்.
குடும்பம் பிழைக்கவே சிரமமாக இருப்பதால், வழக்கை தொடர்வது கடினமாக இருக்கிறது. “வக்கீல்கள் பணம் கேட்கின்றனர்,” என்கிறார் பானோ. “நாங்கள் சாப்பிடவே வழியில்லை. வக்கீலுக்கு எப்படி பணம் கொடுப்பது? இந்தியாவில் நீதியின் விலை அதிகம்.”
தமிழில் : ராஜசங்கீதன்