சூடான, உருக்கப்பட்ட பித்தளையை சஞ்சாவில் (வார்ப்பு பாத்திரம்) முகமது அஸ்லாம் ஊற்றுகையில் நுண் துகள்கள் காற்றில் பறக்கின்றன. இது, பித்தளையை உறுதியான சந்தான் பியாலியாக (பிரார்த்தனைக்கு பயன்படுத்தப்படும் சிறு பாத்திரம்) மாற்றும்.
பித்தளை வேலைகளில் திறன் வாய்ந்த ஓர் உலோக கைவினைஞராக அஸ்லாமின் கைகள் உறுதியாகவும் எச்சரிக்கையாகவும் இயங்குகின்றன. பித்தளையை ஊற்றும்போதே அவர், பாத்திரத்தின் அழுத்தத்தை அளக்கிறார். மண் உள்ளே இருப்பதை உறுதி செய்கிறார். மண்தான் வடிவத்தை தரும்.
“உங்களின் கைகள் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளே இருக்கும் சாஞ்சாவின் வடிவம் பாதிக்கப்படும். அதாத் (வார்க்கப்பட்ட பொருள்) நாசமாகி விடும்,” என்கிறார் 55 வயது அஸ்லாம். ஆனால், காற்றில் பறக்கும் துகள் கொடுக்கும் கவலையின் அளவுக்கு மண் சிந்துவது அவருக்கு பிரச்சினையாக இல்லை. “அவற்றை பார்த்தீர்களா? இது பித்தளை. இவை வீணாகிறது. இதற்கான செலவை நாங்கள்தான் ஏற்க வேண்டும்,” என புலம்புகிறார். அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு 100 கிலோ பித்தளை வார்ப்புக்கும் 3 கிலோ வரை காற்றில் அவர்கள் இழக்கின்றனர். கிட்டத்தட்ட 50 ரூபாய் காற்றில் கரைந்து போகிறது.
பித்தளை வேலைகளுக்கு பெயர் பெற்ற மொராதாபாத்தின் பீர்சாதா பகுதியில் இருக்கும் பல உலைகளில் வேலை பார்க்கும் கைவினைஞர்களில் அஸ்லாமும் ஒருவர். உள்ளூரில் தலாயி க காம் அல்லது வார்த்தல் என அழைக்கப்படும் இக்கலையின் கலைஞர்கள் பித்தளைக் கட்டிகளை உருக்கி, வெவ்வேறு வடிவங்களை வார்க்கின்றனர்.
அவர்களின் வேலைப் பொருட்களான கரி, மண், மரப்பலகை, இரும்பத் தடிகள், பல அளவுகளிலான இடுக்கிகள் யாவும் அஸ்லாமும் அவரின் உதவியாளர் ரயீஸ் ஜானும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை பார்க்கும் பணியிடத்தில் அங்கும் இங்குமாக கிடக்கின்றன. அந்த ஐந்து சதுர அடி இடத்துக்கு மாத வாடகையாக அஸ்லாம் ரூ.1,500 கொடுக்கிறார்.




















