தங்க்காக்கள் என அழைக்கப்படும், பட்டு ஒட்டுத்துணி அல்லது பருத்தியில் வரையப்பட்ட ஓவியங்களை மீட்கும் பணி சாதாரணமானது அல்ல. “ஒரு சிறு தவறு இருந்தாலும் காதின் வடிவம் சற்று மாறினாலும், மக்கள் புண்படுவார்கள்,” என்கிறார் மாதோ கிராமத்தில் வசிக்கும் டோர்ஜேய் அங்சோக்.
“இது மிக நுணுக்கமான வேலை,” என்கிறார் லெவிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மாதோ கிராமத்தில் வசிப்பவர். அங்கு வசிக்கும் 1,165 (கணக்கெடுப்பு 2011) பேரில் கிட்டத்தட்ட அனைவரும் பவுத்த மதத்தை சேர்ந்தவர்கள்தாம்.
நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின் சென்று, நூற்றாண்டு கால ஓவியங்களின் வடிவங்களை இனங்கண்டு, ஆராய்ந்து, புரிந்து கொள்ளும் ஒன்பது பேர் கொண்ட ஒரு தங்க்கா குழுவால், அங்சோக் போன்ற அச்சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் அச்சம் ஓரளவுக்கு தீர்வை கண்டிருக்கிறது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒவ்வொரு வகை வடிவங்களையும் பாணியையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது.
மாதோவை சேர்ந்த பெண்கள் மீட்கும் தங்க்காக்கள், 15-18ம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார் நெல்லி ரையூஃப் என்பவர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அவர், ஓவியங்களை மீட்க பெண்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார். “தொடக்கத்தில், தங்க்காக்களை மீட்கும் பணியில் பெண்கள் ஈடுபட கிராமவாசிகள் ஒப்புக் கொள்ளவில்லை,’ என்கிறார் செரிங் ஸ்பால்டன். “ஆனால் தவறொன்றும் நாங்கள் செய்யவில்லை என எங்களுக்கு தெரியும். வரலாறை மீட்கும் பணியைத்தான் நாங்கள் செய்து கொண்டிருந்தோம்.”
பவுத்த துறவியான துக்சே டோல்மா சொல்கையில், “புத்தர், லாமாக்கள் மற்றும் போதிசத்துவர்கள் ஆகியோரை பற்றி கற்பிக்கும் உத்திகள்தாம் தங்க்காக்கள்,” என்கிறார். புதிய யூனியன் பிரதேசமான லடாக்கின் கார்கில் மாவட்டத்திலுள்ள சன்ஸ்கார் தாலுகாவின் கர்ஷா மடத்தில் டோம்லா இருக்கிறார்.













