சில நேரங்களில் பக்தர்களுடன் கடவுளர் பயணிப்பதுண்டு. குறைந்தபட்சம், அங்கர்மோதி தெய்வம் அப்படித்தான் பயணிக்கிறது.
45 வருடங்களுக்கு முன், தாய்-சன்வார் கிராமத்தில் அந்த தெய்வம் வாழ்ந்தது. ”அங்கர்மோதி அம்மா, மகாநதிக்கும் சுகாநதிக்கும் இடையே இருந்தார்,” என்கிறார் ஈஷ்வர் நேதம். கோண்ட் பழங்குடியான அவருக்கு 50 வயதாகிறது. பழங்குடி தெய்வத்தின் பிரதான பூசாரியாக இருக்கிறார்.
புலம்பெயர்ந்தாலும் அங்கர்மோதியின் புகழ் மங்கவில்லை. கிராமத்திலிருந்தும் பிற இடங்களிலிருந்து 500-லிருந்து 1,000 பக்தர்கள், இன்னும் கோவிலுக்கு தினசரி வருகின்றனர். கண்காட்சிக்கு தெய்வத்தின் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் கிராமத்தையும் அணையையும் சுட்டும் வகையில் கங்க்ரெல் மடய் என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வத்தின் தோழமைகளும் அவ்வண்ணமே தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, வருடாந்திர கொண்டாட்டத்துக்காக அங்கர்மோதி, அருகாமை கிராமங்களிலிருந்து தெய்வங்களை அழைக்கும்.
“எங்களின் மூதாதையர் காலத்திலிருந்து ஒவ்வொரு பழங்குடி கிராமத்திலும் இந்த விழாவை நாங்கள் கொண்டாடி வருகிறோம்,” என்கிறார் கோண்ட் சமூகத்தின் தலைவரான விஷ்ணு நேதம். விழாவை ஒருங்கிணைக்கும் குழுவில் அவரும் ஒருவராக இருக்கிறார்.
“மடய் எங்களின் பாரம்பரிய பழங்குடி பண்பாட்டின் அங்கம்,” என்கிறார் அவர். உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் விழாவுக்கு வருவார்கள். அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அடுத்த வருடத்துக்கான ஆசிர்வாதம் கேட்கும் வகையிலும் பூக்கள் அளிப்பார்கள். வருடந்தோறும் மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்படுகிற 50 விழாக்களில் ஒன்றுதான் இந்த மடய். மத்திய இந்திய மாநிலத்தின் மாவட்டத்தில் நடத்தப்படு மடய்களின் முதலாவது இது.
கிராமவாசிகளும் கிராமத்துக்கு வெளியே இருப்பவர்களும் கண்காட்சிக்கு வந்து, அறுவடைக்கு நன்றி தெரிவித்தும் வரவிருக்கும் வருடத்துக்கான ஆசிர்வாதம் கோரியும் பூக்கள் அளிப்பார்கள்
1978ம் ஆண்டு மகாநதியில் நீர்ப்பாசனத்துக்காகவும் பிலாய் உருக்காலைக்கு நீர் கொடுக்கவும் ஒரு அணை கட்டப்பட்டது. ஆனால், பண்டிட் ரவிஷங்கர் அணை என பெயர் சூட்டப்பட்ட அந்த அணை, தெய்வத்துக்கும் அதை வழிபடும் கிராமவாசிகளுக்கு பிரச்சினையாக உருவெடுத்தது.
அணை கட்டும்போதும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும் சன்வார் கிராமவாசிகள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வேறிடத்துக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டது. “கிட்டத்தட்ட 52-54 கிராமங்கள் மூழ்கிவிட்டன,” என்கிறார் ஈஷ்வர். “மக்களும் புலம்பெயர்ந்தனர்.”
எனவே அவர்கள், அவர்களின் தெய்வத்துடன் புலம்பெயர்ந்து, அணையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தம்தாரியின் கங்க்ரெலுக்கு சென்றனர்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு பிறகு, அணை பிரபலமான சுற்றுலாத்தளமானது. ஆனால் புலம்பெயர்ந்த கிராமவாசிகளோ அரசாங்கத்திடமிருந்து நிவாரணம் கிடைக்க இன்னும் காத்திருக்கின்றனர்.
நாள் முழுவதும் நடக்கும் விழாவான மடய், மதியம் தொடங்கி மாலை வரை தொடரும். அணைக்கு அருகே தெய்வம் வைக்கப்பட்டு, காலை முதல் பக்தர்கள் வரத் தொடங்குவார்கள். சிலர் புகைப்படங்கள் எடுக்க அணை பக்கம் செல்வார்கள்.
மடய் நோக்கி செல்லும் சாலை முழுக்க இனிப்பு பலகாரங்கள் விற்கும் கடைகள் நிறைந்திருக்கின்றன. இவற்றில் சில முன்பே இருந்தவை. சில விழாவுக்காக தோன்றியவை.
மடய் நடந்து கொண்டிருக்கும்போது, கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறாயிரம் பேர் வந்து விடுவார்கள். தம்தாரி டவுனை சேர்ந்த நிலேஷ் ராய்ச்சூரா பல விழாக்களுக்கு சென்றிருக்கிறார். “கங்கெர், நர்ஹார்பூர், நக்ரி ஷிஹாவா, சராமா, பகஞ்சுர் மற்றும் பிற இடங்களின் மடய்களுக்கு நான் சென்றிருக்கிறேன்,” என்கிறார் அவர். “ஆனால் கங்கெல் மடயில் ஏதோவொரு வித்தியாசம் இருக்கிறது.”
மடய்க்கு வந்திருக்கும் பக்தர்களில் கருவுற முடியாத பெண்களும் அடக்கம். “குழந்தை பெறாத பெண்கள் வந்து அங்கர்மோதி தெய்வத்தின் ஆசிர்வாதம் பெறுவார்கள். பலரின் வேண்டுதல்கள் பலித்துள்ளன,” என்கிறார் பழங்குடி தலைவரும் செயற்பாட்டாளருமான ஈஷ்வர் மண்டவி.
ராய்ப்பூர் (85 கிமீ), ஜஞ்ச்கிர் (265 கிமீ) மற்றும் பெமெதரா (130 கிமீ) போன்ற பல இடங்களிலிருந்து வந்திருக்கும் பெண்களை சந்தித்தோம். வரிசைகளில் தங்களுக்கான வாய்ப்புக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.
“மணம் முடித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன,” என்கிறார் ஒருவர். “குழந்தை பிறக்கவில்லை. எனவே ஆசிர்வாதம் பெற வந்திருக்கிறேன்.” பெயர் சொல்ல விரும்பாத பெண்ணான அவர், விழாவுக்கு வந்து காலையிலிருந்து உண்ணாவிரதம் இருக்கும் 300, 400 பெண்களில் ஒருவர்.
பிற கிராமங்களிலிருந்து வருபவர்கள், தெய்வங்களின் கொடிகள் கொண்ட மூங்கில் கம்புகளுடனும் தெய்வங்களுடனும் தெய்வ நடனத்துக்காக வருவார்கள். இந்த கம்புகளையும் மர பொம்மைகளையும் இப்பகுதியில் அவர்கள் சுமந்து செல்வார்கள். பக்தர்கள் அந்த தெய்வங்களின் ஆசிர்வாதங்களை பெறுவர்.
“மடய்களில் பழங்குடி பண்பாட்டையும் வாழ்க்கையையும் நெருக்கத்திலிருந்து நான் பார்க்க முடிகிறது,” என்கிறார் நிலேஷ்.
தமிழில்: ராஜசங்கீதன்