“அசமத்துவத்தில் என்ன தப்பு இருக்கிறது?” குழப்பத்திலிருக்கும் மாணவர் ஒருவர் பெங்களூரு தனியார் பள்ளி ஒன்றில் பாரி நிகழ்ச்சி நடத்தியபோது எங்களிடம் கேட்டார்.
“கடைக்காரர் சிறிய கடை ஒன்றை வைத்துள்ளார். அம்பானிக்கு பெரிய வணிகம் இருக்கிறது. அவரவரின் உழைப்புக்கேற்ப அவரவருக்கு விளைவு கிடைக்கிறது. கடுமையாக உழைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்,” என்கிறார் அவர் தன் வாதத்தில் நம்பிக்கை கொண்டு.
கல்வி, சுகாதாரம், நீதி ஆகியவற்றை பெறுவதிலுள்ள அசமத்துவம் குறித்த ஒரு பாரி கட்டுரையை கொண்டு ‘வெற்றி’ என்பது என்னவென்பதை விளக்கி விட முடியும். விவசாய நிலங்களிலும் காடுகளிலும் நகரங்களின் விளிம்புகளிலும் வசிக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைகளை வகுப்பறைகளில் பகிர்ந்து கொண்டோம்.
எங்களின் கல்விப்பணியில் பாரியின் இதழியலாளர்கள் வகுப்பறைகளுக்கு சென்று நம் காலத்தின் பிரச்சினைகளை இளையோருடன் உரையாடுவார்கள். கிராமப்புற இந்தியாவிலும் நகரங்களிலுமுள்ள பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வெவ்வேறு யதார்த்தங்களை எங்களின் கட்டுரைகள், புகைப்படங்கள், திரைப்படங்கள், இசை மற்றும் கலை அடங்கிய பெட்டகத்தின் வழியாக காட்டுகிறோம்.
“நாம் அவர்களை (தங்களை விட சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்) வெறும் புள்ளிவிவரங்களாகத்தான் அணுகுகிறோம். நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஒரு முழுமையான சக மனிதராக அல்ல,” என சென்னை மேல்நிலை பள்ளி மாணவரான அர்னவ் போன்றோர் சொல்கின்றனர்.












