டிசம்பர் 7, 2023 அன்று பாலஸ்தீனத்தை சேர்ந்த நம் சக மொழிபெயர்ப்பாளரும் கவிஞரும் எழுத்தாளரும் கல்வியாளரும் பத்தி எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான ரெஃபாட் அல்ரீர், காசாவில் தொடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையில் இலக்காக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது குரல் அடங்கிய அந்த நாளில், அவரது கவிதை உலகம் முழுக்க டஜனுக்கும் அதிகமான மொழிகளில் எதிரொலித்தது.
இத்தகைய உலகில் இத்தகைய காலக்கட்டத்தில் பாரி கொண்டிருக்கும் மொழிகளின் உலகத்தில் எங்களின் பங்கையும் பணியையும் நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம். ரெஃபாத்தின் வார்த்தைகளை நினைவுகூருவதிலிருந்து நாங்கள் தொடங்குகிறோம்:
போராட்டத்துக்கு குரல் கொடுக்கவும் திருப்பி சண்டை போடவும் நம்மிடம் இருப்பது மொழி மட்டும்தான். வார்த்தைகள்தான் நம்முடைய பொக்கிஷம். அவற்றைக் கொண்டுதான் நாமும் பயிற்சி கொள்ள வேண்டும். பிறரையும் பயிற்றுவிக்க வேண்டும். இந்த வார்த்தைகள் எல்லா மொழிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு சொல்லப்பட வேண்டும். அதிகபட்சமான எண்ணிக்கையில் மக்களின் இதயங்களையும் மனங்களையும் தொடுகிற மொழி மீதுதான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மனித சமூகத்துக்கு நேர்ந்த அற்புதங்களிலேயே சிறப்பானது மொழிபெயர்ப்புதான். மொழிபெயர்ப்பு, தடைகளை உடைத்து இணைப்புகளை உருவாக்கி புரிதலை தருகிறது. அதே நேரத்தில் “மோசமான” மொழிபெயர்ப்புகள் தவறான புரிதல்களை கொடுக்கவும் வல்லது.
மக்களை ஒருங்கிணைத்து புதிய புரிதலை கட்டமைக்கும் திறனை மொழிபெயர்ப்பு கொண்டிருக்கிறது என்கிற இந்த நம்பிக்கைதான் பாரிபாஷை பணியின் மையம்.
2023ம் ஆண்டு எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு ஆக இருந்தது.
சட்டீஸ்கரி மற்றும் போஜ்பூரி ஆகிய இரண்டு மொழிகளை கடந்த வருடத்தில் இணைத்ததில் பாரி கட்டுரைகள் பதிப்பிக்கும் மொழிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
பாரிபாஷை என்ற பெயர் சூட்டப்பட்டதாலும் இந்த வருடம் எங்களுக்கு முக்கியமான வருடம் ஆனது. ஆங்கில மொழி கட்டுரைகளை மொழிபெயர்ப்பதையும் தாண்டி, பாரியை கிராமப்புற இதழியலுக்கான முழுமையான பன்மொழி தளமாக ஆக்கத் தேவையான அனைத்தையும் செய்யும் எங்களின் பங்கை அந்த பெயர் பிரதானப்படுத்துகிறது.
நாடு முழுவதும் இருக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைகளில் மொழிகள் கொண்டிருக்கும் பங்கை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். மொழிபெயர்ப்பு மற்றும் மொழிகளை குறித்த கட்டுரைகள் மற்றும் உரையாடல்களின் வழியாக, இந்த வெளியில் பாரியின் பணியை நாங்கள் முன்னிறுத்துகிறோம்.




