பெங்களூருவின் பெரிய குப்பமான தேவாரா ஜீவனஹல்லியில் பால்புதுமையருக்கான உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏப்ரல் 19, 2024 அன்று ஏற்படுத்த மனோகர் எலாவர்த்தி முடிவெடுத்தார். எலாவர்த்தி, பாலின சிறுபான்மையினர் உறுப்பினர்களுக்கான அமைப்பான சங்கமாவின் நிறுவனர். அவர் LGBTQIA+ (பெண் தன்பாலீர்ப்பு, ஆண் தன்பாலீர்ப்பு, இருபாலீர்ப்பு, மாற்றுப் பாலினம், பால்புதுமையர், ஊடுபால், அல்பாலீர்ப்பு மற்றும் இச்சொல் அடையாளப்படுத்தாத பிற எல்லா அடையாளங்களுக்குமான + முத்திரை) பிரச்சினைகளை, வாழ்வாதாரப் பிரச்சினை, வேலையின்மை மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றுடன் சேர்த்து குப்பவாசிகளுடன் கலந்துரையாடுவதென முடிவெடுத்திருந்தார். உரையாடலை வழிநடத்த, மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான பாலின சிறுபான்மையினர் அமைப்பினருடன் அவர் இணைந்து கொண்டார்.
அந்த நாள்தான் மக்களவை தேர்தல் தொடங்கிய நாளும் கூட. கர்நாடகாவின் பெங்களூரு ஒரு வாரத்தில் தேர்தல்களை சந்திக்கவிருந்தது.
எலாவர்த்தி பிரசாரத்தை தொடங்கியதும் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் காவி உடை தரித்திருந்த 10 பேர், அவரையும் என்னையும் (பிரசாரத்தை பதிவு செய்ய போயிருந்த பத்திரிகையாளர்) டிஜெ ஹல்லி என அழைக்கப்பட்டும் தேவாரா ஜீவனஹல்லியின் குறுகிய தெருக்களுக்குள் சுற்றி வளைத்தனர். இங்குள்ள வாக்காளர்கள் பலரும் கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். பலரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள்.
“நீ காங்கிரஸ் கட்சி ஏஜெண்ட்!” என ஒரு பாஜக உறுப்பினர் கூச்சலிட, சுற்றி இருந்தவர்களும் எதிர்க்கோஷங்களை எழுப்பினர். பாலின சிறுபான்மையினருக்கான அமைப்பினர் வைத்திருந்த பிரசுரங்களை “சட்டவிரோதமானவை” என்றனர் பாஜகவினர்.











