நாராயண் குந்தாலிக் ஹஜாரே, பட்ஜெட் என்கிற வார்த்தையைப் புரிந்து கொள்கிறார். ஆனால் பெரிய அளவில் இல்லை.
“அந்த அளவுக்கு என்னிடம் பட்ஜெட் இல்லை!” என வெறும் நான்கு வார்த்தைகளில், 12 லட்ச ரூபாய் வருமானத்துக்கு வரி விலக்கு என்கிற அறிவிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறார்.
ஒன்றிய அரசு பட்ஜெட் பற்றிய கேள்வி, விவசாயியும் 65 வயது பழ வியாபாரியுமான இவரை ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது. முழு நம்பிக்கையுடன் அவர் பதில் சொல்கிறார். “இப்படி ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லை. இத்தனை வருடங்களிலும்.”
நாராயணுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “என்னிடம் செல்பேசி கிடையாது. வீட்டில் தொலைக்காட்சி இல்லை.” சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் ஒரு ரேடியோவை பரிசளித்திருக்கிறார். ஆனால் அதில் இன்னும் இந்த செய்தி வரவில்லை. “எங்களை போன்ற படிப்பறிவில்லாத மக்களுக்கு ஏதும் இதோடு தொடர்பு உண்டா?” என கேட்கிறார். ‘கிசான் கடன் அட்டை’ அல்லது ‘அதிகமாக்கப்பட்டிருக்கும் கடன் வரம்பு’ போன்ற விஷயங்கள் அவருக்கு அந்நியமாக இருக்கின்றன.
![](/media/images/2-1738822924148-MK-I_just_dont_have_that_k.max-1400x1120.jpg)
நாராயண் ஹஜாரே, மகாராஷ்டிராவின் துல்ஜாபூரை சேர்ந்த பழ வியாபாரியும் விவசாயியும் ஆவார். பட்ஜெட்டை பற்றி அவர் எதுவும் கேள்விப்படவில்லை. ‘இத்தனை வருடங்களில் கேள்விப்பட்டதில்லை,’ என்கிறார் 65 வயது நிரம்பிய அவர்
நாராயண் எல்லா வகை பழங்களையும் பழ வண்டியில் வைத்து விற்கிறார். “கொய்யாக்களில் மிச்சம் இவ்வளவுதான் இருக்கிறது. அடுத்த வாரத்தில் திராட்சைகளும் பிறகு மாம்பழங்களும் கிடைக்கும்.” தாராஷிவ் மாவட்டத்தின் துல்ஜாப்பூர் டவுனில் வசிக்கும் அவர், முப்பது வருடங்களாக பழங்கள் விற்கும் வேலை செய்கிறார். நல்ல வியாபாரம் ஆனால், அந்த நாளில் 25-30 கிலோ பழங்கள் விற்று, 300-400 ரூபாய் கிடைக்கும். 8-10 மணி நேரங்கள் சாலையில் நேரம் கழிக்க வேண்டும்.
ஆனால் பட்ஜெட்டை பற்றி ஒன்றிரண்டு விஷயங்களை நாராயண் ஹஜாரே புரிந்து வைத்திருக்கிறார். “பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள். விருப்பமுள்ளவற்றை வாங்குங்கள். எப்போது வேண்டுமானாலும் எனக்கு பணத்தைக் கொடுங்கள்,” என சொல்லி விட்டு அவர் கிளம்பி செல்கிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்