அனுபாராம் சுதார் ஒருபோதும் இசைக்கருவியை வாசித்ததில்லை என்றாலும் எந்த மரக்கட்டை சரியான ஒலியைக் கொடுக்கும் என்பதை நன்கு அறிந்தவர். "என்னிடம் ஒரு மரத் துண்டைக் கொடுத்தால், அதில் ஒரு நல்ல இசைக்கருவியை உருவாக்க முடியுமா என்று என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும்," என்கிறார் இந்த எட்டாவது தலைமுறை கர்தால் வடிவமைப்பாளர்.
ராஜஸ்தானின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களுக்கு பயன்படுத்தப்படும் தாள வாத்தியமான கர்தால், நான்கு மரத்துண்டுகளால் உருவானது. ஒவ்வொரு கையும் இரண்டு துண்டுகளை பிடித்திருக்கும் - கட்டைவிரலால் ஒரு துண்டும், மீதமுள்ள நான்கு விரல்களால் மற்றொரு துண்டும் பிடிக்கப்படுகிறது. ஒன்றாகக் அடிக்கப்படும்போது, அவை ஒரு வகை ஒலியை உருவாக்குகின்றன. த மற்றும் க என, கருவியில் இரண்டு எழுத்தொலிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. "கலாக்கர் பன்வதே ஹே [இசைக்கலைஞர்கள் கர்தால்களை செய்யப் பணியிடுகிறார்கள்]," என்கிறார் அந்த 57 வயது கைவினைஞர்.
சிம்பல்களில் மணிகள் பதிக்கப்படுவது போல, ராஜஸ்தானி கர்தால்களில், பொதுவாக மஞ்சீரா அல்லது கரதாலாஸில் ஏதும் பதிக்கப்படுவது இல்லை.
ஒரு தலைசிறந்த கைவினைஞரால், இரண்டு மணி நேரத்தில் நான்கு ஜோடி கருவிகளை உருவாக்க முடியும். "முன்னதாக, எனக்கு ஒரு நாள் முழுவதும் [எட்டு மணிநேரம்] தேவைப்படும்," என்று அவர் கைவினைப்பொருளில் தனது ஆரம்ப ஆண்டுகளை நினைவு கூர்கிறார். சுதார்கள் சமூகத்தைச் சார்ந்த அனுபாராம் குடும்பத்தினர், கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக கர்தால்களை உருவாக்கி வருகின்றனர்: "பச்பன் சே யேஹி காம் ஹை ஹமாரா [குழந்தை பருவத்திலிருந்து, இது தான் எங்கள் வேலை]."
அவர் மறைந்த தனது தந்தை உஸ்லாராம், ஒரு கனிவான ஆசிரியர் என்றும், மிகவும் பொறுமையாக தனக்கு கற்பித்தவர் என்றும் நினைவு கூர்கிறார். "நான் நிறைய தவறுகள் செய்வேன், லெகின் வோ கபி நஹி சில்லதே தி, பியார் சே சமஜ்தே தி [ஆனால அவர் ஒருபோதும் என்னைத் திட்டியதில்லை. எப்போதும் அன்பாக கற்றுக் கொடுத்தார்]." சுதார் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கர்தால்களை உருவாக்குகின்றனர்.














