“என் அச்சத்தை எப்படி விவரிப்பது? பீதியில் என் குலை நடுங்குகிறது. எப்போது திறந்தவெளிக்கு வருவேன் என்பதே எப்போதும் என் சிந்தனையாக இருக்கிறது,” என்கிறார் நண்டு பிடிப்பவரும், மீனவப் பெண்ணுமான பாருல் ஹால்தார் (41 வயது). மேற்கு வங்கத்தின் சுந்தரவனப் பகுதியில் உள்ள அடர்ந்த அலையாத்திக் காட்டில் நண்டு வேட்டைக்காக செல்லும் நாட்களில் தனது உள்ளத்தை சில்லிட வைக்கும் அச்சம் குறித்தே அவர் இப்படிக் கூறுகிறார். நண்டு வேட்டைப் பருவம் வரும்போதெல்லாம் அங்குள்ள அலையாத்திக் காடுகளின் குறுக்கு நெடுக்காக ஓடும் சிற்றாறுகளிலும், ஓடைகளிலும் படகு வலித்துச் செல்லும் பாருல், எங்கே புலி பதுங்கியிருக்குமோ என்ற அச்சத்துடன் எப்போதும் உஷார் நிலையில் இருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், கொசாபா வட்டாரத்தில் உள்ள லக்ஸ்பகான் என்ற ஊரைச் சேர்ந்தவர் பாருல். அவர் கரல் ஆற்றில் தனது மரப்படகை செலுத்தியபடியே, குறுக்கு வலையால் ஆன வேலித் தடுப்பை வெறித்துப் பார்க்கிறார். அந்த வேலிக்கு அப்பால் இருப்பது மாரிச்ஜாப்பி காடு. இந்தக் காட்டில்தான் அவரது கணவர் இஷார் ரோனோஜித் ஹால்தார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புலி தாக்கி இறந்துபோனார்.
வலித்துக் கொண்டிருந்த துடுப்பை படகின் விளிம்பில் சாய்த்து வைக்கிறார் பாருல். இந்த சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் அவரோடு படகில் வருகிறார் அவரது தாய் லோகி மண்டல் (56 வயது). அவரும் மீனவர்தான்.
இஷாரை மணந்துகொண்ட போது பாருல் 13 வயது சிறுமி. அவரது மாமியார் வீடும் ஏழைக் குடும்பம்தான். ஆனால், அவர்கள் மீன் பிடிக்கவோ, நண்டு பிடிக்கவோ காட்டுக்குச் சென்றதில்லை. “காட்டுக்கு வருவதற்கு நான்தான் அவரை சம்மதிக்க வைத்தேன். 17 ஆண்டுகளுக்குப் பிறகு காட்டில் அவர் உயிரிழந்தார்,” என்கிறார் பாருல்.
நினைவில் தோய்ந்த பாருல், அமைதியில் உறைகிறார். இறக்கும்போது இஷாருக்கு 45 வயது. அவர்களது நான்கு மகள்களை வளர்க்கும் பொறுப்பு இப்போது பாருலின் தலையில்.
சிறு ஓய்வுக்குப் பிறகு தாயும் மகளும் மீண்டும் துடுப்பு போடுகிறார்கள். அவர்களுக்கு வியர்க்கிறது. தற்போது மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள அலையாத்திக் காட்டில் இருந்து ஒரு பாதுகாப்பான தொலைவில் அவர்கள் படகை செலுத்துகிறார்கள். மீன்களை வளரவிடவேண்டும் என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதம் அலையாத்திக் காடுகளில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும். இந்த காலத்தில் தனது குளத்தில் மீன் பிடித்து விற்று பிழைப்பை ஓட்டுவார் பாருல்.












