கிரண் சமைத்து, சுத்தப்படுத்தி குடும்பத்தை பராமரிக்கிறார். விறகையும் நீரையும் சேகரித்து வீட்டுக்கு கொண்டு வருவார். கோடைக்காலங்களில் தூரம் அதிகரிக்கும்.
11 வயதே ஆன அவருக்கு வேறு வழி இல்லை. அவரின் பெற்றோர் வருடந்தோறும் புலம்பெயருகின்றனர். கிராமத்திலுள்ள (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) வீட்டில் வேறு எவரும் இருக்க மாட்டார். 18 வயது அண்ணனான விகாஸ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இருந்தாலும் கடந்த காலத்தை போல் எப்போது வேண்டுமானாலும் அவர் புலம்பெயர்வார். 3 மற்றும் 13 வயதுகளில் இருக்கும் பிற உடன்பிறந்தாரும், குஜராத்தின் வதோதராவின் கட்டுமான தளங்களில் தொழிலாளர்களாக பணிபுரியும் பெற்றோருடன் இருக்கின்றனர். அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால் கிரண் செல்கிறார்.
“காலையில் கொஞ்சம் உணவு சமைப்பேன்,” என்கிறார் கிரண் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), தன் அன்றாடப் பணியை விவரித்து. ஓரறை வீட்டின் பெரும்பகுதியை சமையலறை எடுத்துக் கொள்கிறது. சூரியன் மறைந்ததும், கூரையில் தொங்க விடப்பட்டிருக்கும் ஒற்றை விளக்கு வெளிச்சம் தருகிறது.
ஒரு மூலையில் மர அடுப்பு. கொஞ்சம் விறகுகளும் எரிபொருள் கேனும் அருகே இருக்கின்றன. காய்கறி, மசாலா மற்றும் பிற பொருட்கள் பிளாஸ்டிக் பைகளிலும் பாத்திரங்களிலும் நிரப்பப்பட்டு சிறு கை எட்டும் வகையில் சுவர்களில் மாட்டப்பட்டிருக்கின்றன. அடுக்கப்பட்டிருக்கின்றன. “பள்ளிக்கு பிறகு வந்து மாலையில் உணவு சமைப்பேன். பிறகு கோழிகளையும் சேவல்களையும் பார்த்துக் கொள்வேன். அதற்குப் பிறகு தூங்க செல்வோம்,” என்கிறார் கிரண்.
கூச்சத்துடன் அவர் சொன்ன விஷயங்களில், பக்கத்து பிஜிலியா அல்லது தாவ்டா கோரா மலையடிவாரக் காடுகளுக்கு நடையாக சென்று விறகு சேகரிப்பது போன்ற வீட்டு வேலைகள் இடம்பெறவில்லை. காட்டுக்கு செல்ல ஒரு மணி நேரமும், விறகு ஒடித்து சேகரிக்க ஒரு மணி நேரமும் வீடு திரும்ப இன்னொரு மணி நேரமும் கிரணுக்கு பிடிக்கிறது. வழக்கமான குழந்தைக்கு இருக்கும் எடையை விட கூடுதலாக இருக்கும் அவர் திரும்புவார்.












