அரத்தோண்டி கிராமத்தின் குறுக்கு சந்துகளில் ஒரு இனிமையான மயக்கும் நறுமணம் வீசுகிறது.
ஒவ்வொரு வீட்டிற்கு முன் உள்ள முற்றத்தில், மூங்கில் பாய்கள், மென்மையான விரிப்புகள் மற்றும் மண் தரைகளில் மஞ்சள், பச்சை மற்றும் பழுப்பு நிற இலுப்பை பூக்கள் காய்ந்து கொண்டிருக்கிறது. புதிதாகப் பறிக்கப்பட்ட மஞ்சள் மற்றும் பச்சை நிற மலர்கள், வெயிலில் உலர்த்தப்பட்ட பிறகு காய்த்து, கடினமாகி, பழுப்பு நிறமாகி விடுகின்றன.
மஹாராஷ்டிராவின் கோந்தியாவில், தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில், இது இலுப்பை க்கான பருவகாலமும் ஆகும்.
"ஏப்ரலில் இலுப்பை , மே மாதத்தில் கருங்காலி இலை" என்று சார்த்திகா கைலாஷ் ஆடே துவங்குகிறார். "இதுதான் எங்களின் ஆதாரம்." ஒவ்வொரு காலையிலும், 35 வயதான இவரும், மானா மற்றும் கோந்த் பழங்குடியினத்தைச் சேர்ந்த பிற கிராமவாசிகளும் 4-5 மணி நேரம் சுற்றியுள்ள காடுகளில், உயரமான இலுப்பை மரங்களிலிருந்து விழும் மென்மையான பூக்களை சேகரிக்கின்றனர். அவற்றின் இலைகள் இப்போது சிவப்பு நிறத்தில் உள்ளன. நண்பகலில், வெயில் 41 டிகிரி செல்சியஸை தொடும்போது, வெப்பம் இன்னும் அதிகமாகிறது.
ஒவ்வொரு இலுப்பை மரமும் சராசரியாக 4-6 கிலோ பூக்களைத் தருகின்றன. அரத்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் (உள்ளூர் மக்களால் அரக்தொண்டி என்றும் அழைக்கப்படுகிறது) மூங்கில் கேன்கள் அல்லது பிளாஸ்டிக் சாக்குகளில் சேகரித்து வீட்டிற்கு கொண்டு வந்து வருகிறார்கள். உலர்ந்த இலுப்பைப்பூ, கிலோ ஒன்றிற்கு அவர்களுக்கு ரூ.35 முதல் 40 வரை பெற்றுத் தருகிறது. ஒவ்வொரு நபரும் நாளொன்றிற்கு சராசரியாக 5-7 கிலோ வரை தினமும் சேகரிக்கின்றனர்.
இலுப்பை (மதுகா லாங்கிஃபோலியா) மரம் மத்திய மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வில் கலாச்சாரம், தெய்வீகம் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பிரச்சினைக்குரிய கட்சிரோலி மாவட்டம் உட்பட, கிழக்கு விதர்பாவில் உள்ள கோந்தியா மாவட்டத்தின் ஆதிவாசிகளுக்கான பகுதியில், இலுப்பை ஒரு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு, பட்டியல் சாதியினர் 13.3 சதவீதமாகவும், பட்டியல் பழங்குடியினர் 16.2 சதவீதமாகவும் உள்ளனர். இவர்களின் மற்றொரு தேர்வு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) ஆகும்.
வறண்ட நிலம், சிறிய அளவிலான விவசாயக் கிராமங்களில், பண்ணை வேலைகள் குறைவதாலும், வெளி வேலைகள் கிடைப்பது கடினமாகும் போதும், லட்சக் கணக்கானவர்கள், ஏப்ரல் மாதத்தில் இலுப்பைப் பூக்களை சேகரிக்க, தங்கள் சொந்த பண்ணைகளிலும், அர்ஜூனி-மோர்கான் தாலுகாவை சுற்றியுள்ள காடுகளிலும் ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் செலவிடுகிறார்கள். 2022 மாவட்ட சமூக மற்றும் பொருளாதார மதிப்பாய்வின்படி , கோந்தியாவில் 51 சதவீத நிலத்தை காடுகள் ஆக்கிரமித்துள்ளன, அதில் பாதிப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
மும்பை ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பப்ளிக் பாலிசியின் (MSE&PP) முன்முயற்சியான இலுப்பை உற்பத்தி மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் குறித்த 2019 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், கிழக்கு விதர்பா பகுதியில் சுமார் 1.15 லட்சம் மெட்ரிக் டன்கள் (MT) இலுப்பைப்பூ சேகரிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் கோந்தியா மாவட்டத்தின் பங்கு 4,000 மெட்ரிக் டன்கள் மற்றும் மொத்த மாநில உற்பத்தியில் கட்சிரோலி அதிகப்படியான 95 சதவீதத்தை கொண்டுள்ளது என்று பிரபல பொருளாதார நிபுணரும் MSE&PP-ன் முன்னாள் இயக்குநருமான டாக்டர் நீரஜ் ஹடேகர் கூறுகிறார்.
ஆய்வின்படி, ஒரு கிலோ இலுப்பை என்பது, இவர்களின் ஒரு மணி நேர உழைப்பு ஆகும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஏப்ரல் மாதத்தில் இலுப்பை பூக்களை சேகரிக்க ஒரு நாளைக்கு 5-6 மணிநேரம் செலவிடுகின்றனர்.
அண்டை மாநிலமான சத்தீஸ்கர், மொத்த இலுப்பை பூக்களின் மாபெரும் சேகரிப்பு மையமாக உள்ளது. இங்கு இவை மது உற்பத்தி, உணவு பொருட்கள் மற்றும் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
"ஒருங்கிணைக்கப்பட்ட பூக்களின் அளவு, உண்மையான உற்பத்தியை விட மிகக் குறைவு" என்று டாக்டர் ஹடேகர் கூறுகிறார். "இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் கடின உழைப்பு மற்றும் செலவாகும் அதிக நேரம் முக்கியக் காரணங்களாக உள்ளன." மஹாராஷ்டிராவில், இப்பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானம் சட்டவிரோதம் ஆகும். இந்த இலுப்பைப்பூ கொள்கை மீதான தீவிர சீர்திருத்தங்களை அவர் பரிந்துரைத்துள்ளார். விலைகளை நிலையாக்குதல், அதன் மதிப்பையும், அதற்கான சந்தைகளையும் ஒழுங்குபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள், அதைச் சார்ந்திருக்கும் பெருமளவிலான கோந்த் பழங்குடியின மக்களுக்குப் பயனளிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
*****
அரவிந்த் பனாகரியாவின் ‘சமத்துவமின்மையால் தூக்கத்தை இழக்காதீர்கள்.’ என்ற கட்டுரையை சார்த்திகா படித்திருக்க வாய்ப்பில்லை. இந்தக் கட்டுரை ஏப்ரல் 2, 2024 அன்று முன்னணி ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியானது. பனாகரியாவும் சார்த்திகாவையும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை.
அவர்களின் உலகம் வெவ்வேறு துருவங்கள் போன்றது.
பனாகரியா, இந்தியாவின் வருமான வரம்பில் முன்னிலையில் உள்ள முதல் ஒரு சதவீதத்தில் இருக்கலாம். அதாவது உயரடுக்கு டாலர் பில்லியனர் குழுவில் அல்லாது, செல்வாக்குமிக்க கொள்கை வகுப்பாளர் குழுவில் உள்ளார்.
சார்த்திகாவும் அவரது கிராமத்து மக்களும், நாட்டின் மிக ஏழ்மையானவர்கள் மற்றும் அதிகாரமற்றவர்கள் - அதாவது கீழ்மட்டத்தில் உள்ள 10 சதவீதம் பேரில் உள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வசதிகள் இல்லாதவை. அதோடு பல்வேறு மூலங்களில் இருந்து ஈட்டினாலும், அவர்களின் குடும்ப வருமானம் ஒரு மாதத்திற்கு ரூ.10,000ஐ தாண்டாது, என்று அவர் சொல்கிறார்.
இரு குழந்தைகளின் தாயான இவர் கூறுவதை அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள் ஆமோதித்து தலையசைக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை, நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. மேலும் பணவீக்கம் அதிகரிப்பதாலும், வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் குறைவதாலும், இவர் வருந்துகிறார்.
"விலைவாசி அதிகரித்து வருகிறது," என்கின்றனர் அரத்தோண்டி பெண்கள். "உணவு எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள், எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து, வீட்டு பொருட்கள், ஆடைகள்," என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சார்த்திகாவின் குடும்பம் வைத்துள்ள, ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில், மழையை நம்பி, நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு சுமார் 10 குவிண்டால் அறுவடையை அளிக்கிறது. இதில் ஆண்டு வருவாய் தரவல்ல சந்தைப்படுத்தக்கூடிய உபரி எதுவும் இருக்காது.
அப்படியானால் சார்த்திகா பழங்குடியினர், என்ன செய்வார்கள்?
"மார்ச் முதல் மே வரையிலான எங்கள் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பு மூன்று விஷயங்கள்," என்கிறார், மாநில கிராமப்புற வாழ்வாதாரப் பணியான உமேத் கிராமத்தில் உள்ள சமூக வள நபர் அல்கா மாதவி.
அவரின் பட்டியல் படி: சிறு வனப் பொருட்கள் - ஏப்ரல் மாதத்தில் இலுப்பைப்பூ, மே மாதத்தில் கருங்காலி இலைகள்; MGNREGA வேலை மற்றும் அரசால் வழங்கப்படும் மலிவான உணவு தானியங்கள். "இந்த மூன்றும் இல்லையெனில், நாங்கள் நிரந்தரமாக நகரங்களுக்கு வேலைக்காக இடம்பெயர்வோம், அல்லது இங்கேயே பசியால் இறந்துவிடுவோம்," என்று இங்குள்ள சுயஉதவி குழுக்களை வழிநடத்தும் மாதவி கூறுகிறார்.
சார்த்திகாவும் அவரது சமூகமான கோந்துகளும், காலையில் ஐந்து மணி நேரம் சுற்றியுள்ள காடுகளில் இருந்து இலுப்பைப்பூக்களை சேகரிக்கவும், ஐந்து முதல் ஆறு மணி நேரம் MGNREGA-ன் கீழ் சாலை அமைக்கவும், மாலை நேரங்களில் தங்கள் வீட்டு வேலைகளான சமைத்தல், கழுவுதல், கால்நடைகளை வளர்ப்பது, குழந்தைகளை பராமரித்தல் மற்றும் சுத்தம் செய்தலில் செலவழிக்கின்றனர். வேலை செய்யும் இடத்தில், சார்த்திகா பிளாஸ்டிக் பாத்திரங்களில் கடினமான மண் கட்டிகளை நிறைக்கிறார், அவருடன் இருப்பவர்கள் அவற்றைத் தலையில் தூக்கி சாலைகளில் கொட்டுகிறார்கள். பின்னர் ஆண்கள் அதை சமன் செய்கிறார்கள். இதற்காக இவர்கள் பண்ணை குழிகளில் இருந்து சாலை தளத்திற்கு பல முறை ஏறி இறங்க வேண்டியுள்ளது.
ஒரு நாள் வேலைக்கு, அவர்களின் கூலி: கட்டண அட்டையின் படி ரூ.150 ஆகும். பருவகாலத்தில் இலுப்பைப்பூக்களின் வருமானத்துடன் சேர்த்து, அவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால் ரூ.250-300 ஈட்டலாம். மே மாதம் வந்தால், அவர்கள் கருங்காலி இலைகளை சேகரிக்க காடுகளுக்கு செல்கின்றனர்.
முரண்பாடாக, காங்கிரஸ் கட்சியின் 'தோல்வியின் நினைவுச்சின்னம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கேலி செய்யும் MGNREGA, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. பத்து வருட ஆட்சியில், MGNREGAக்கான தேவை 2024-ல் மட்டுமே உயர்ந்துள்ளது. படித்த ஆண்கள், மற்றும் பெண்கள் அடங்கும், MGNREGA-ன் கீழ் ஆறு-ஏழு மணிநேரம் செலவிடும் பெண்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானத்திற்கு இணையாக சார்த்திகாவும் மற்ற பெண்களும் சம்பாதிக்க பல நூறு வருடங்கள் ஆகும். சமமற்ற வருமானம் என்பது, நம் தூக்கத்தை கெடுத்துவிடும் ஒன்று, என்கிறார் பொருளாதார நிபுணர் பனாகரியா.
"எனக்கு பண்ணையோ அல்லது வேறு வேலையோ இல்லை," என்று MGNREGA பணித்தளத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் மனா பழங்குடியைச் சார்ந்த 45 வயதான சமிதா ஆடே கூறுகிறார். "ரோஸ்கர் ஹமி [MGNREGA] மட்டுமே எங்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் ஒரே வேலை." சார்த்திகாவும் மற்றவர்களும் "சிறந்த ஊதியம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலை," ஆகியவற்றைக் கோருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக வன பொருட்கள் மீதான போட்டி தீவிரமடைந்துள்ளது என்றும் அதிகமான மக்கள் ஆண்டு முழுவதும் வேலை இல்லாத நிலையில், காடு சார்ந்த வாழ்வாதாரத்தை நோக்கி திரும்புகின்றனர் என சமிதா சுட்டிக்காட்டுகிறார். அரத்தோண்டி, நவேகான் தேசிய பூங்காவிற்கு தெற்கே உள்ள காடுகள் நிறைந்த நிலப்பரப்புக்கு அருகில் உள்ளது. மேலும் அது வன உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக வன உரிமைகளை இன்னும் பெறவில்லை.
"ஆனால்," சார்த்திகா கூறுகையில், "நான்காவது [வாழ்வாதாரம்] ஒன்று உள்ளது, அது பருவகால இடம்பெயர்வு."
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, கிட்டத்தட்ட பாதி கிராமத்தினர் தங்கள் வீடுகளை விட்டு தொலைதூர இடங்களுக்கு சென்று மற்றவர்களின் வயல்கள், தொழில்தளங்கள் அல்லது பணியிடங்களில் வேலை செய்கின்றனர்.
"நானும் என் கணவரும் இந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள யாத்கிரிக்கு சென்று நெல் வயல்களில் வேலை செய்தோம்," என்கிறார் சார்த்திகா. "நாங்கள் 13 ஆண்களும் பெண்களும் கொண்ட குழுவாக இருந்தோம், அவர்கள் ஒரு கிராமத்தில் அனைத்து விவசாய வேலைகளையும் செய்து பிப்ரவரி பிற்பகுதியில் தங்கள் வீடு திரும்பினர்." அந்த ஆண்டு வருமானம் அவர்களின் வாழ்வுக்கு ஒரு முக்கிய ஆதரவு ஆகும்.
*****
அரிசி வளம் நிறைந்த மற்றும் காடுகள் நிறைந்த கிழக்கு விதர்பா மாவட்டங்களான பண்டாரா, கோந்தியா, கட்சிரோலி, சந்திராபூர் மற்றும் நாக்பூர் ஆகியவை ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் ஆகும். 2024 பொதுத் தேர்தலின் முதல் கட்டமாக ஏப்ரல் 19 அன்று வாக்களிக்கிறார்கள்.
மக்கள் மீது அரசியல் வர்க்கங்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தின் அக்கறையின்மை காரணமாக, அரக்தொண்டி கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மோடியின் 10 ஆண்டுகள் அரசாங்கம், தங்கள் வாழ்க்கையை கடினமாக்கியதால் ஏழைகள் மத்தியில் வெளிப்படையான கோபமும் உள்ளது.
"எங்களுக்கு மாற்றம் ஏதும் இல்லை," என்று சார்த்திகா கூறுகிறார். “சமையல் எரிவாயு கிடைத்தது, ஆனால் அது மிகவும் விலை உயர்ந்தது; ஆனால் ஊதியம் உயரவில்லை; ஆண்டு முழுவதும் நிலையான வேலை எதுவும் இல்லை.
பண்டாரா-கோந்தியா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியால் மீண்டும் களமிறக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் மெந்தே மீது அதிக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. "அவர் எங்கள் கிராமத்திற்கு வரவே இல்லை" என்பது, அதிகப்படியான கிராமப்புற மக்களைக் கொண்ட இந்த பெரிய தொகுதியின் பொதுவான பல்லவி.
மெந்தே காங்கிரஸின் டாக்டர் பிரசாந்த் படோலை எதிர்த்து போட்டியிடுகிறார்.
2021 கோடை வெயிலில், முதல் கோவிட்-19-ன் போது அரத்தோண்டி கிராமவாசிகள் தங்கள் கைவிடப்பட்ட மற்றும் வலிமிகுந்த நடைப்பயணத்தை மறக்கவில்லை.
ஏப்ரல் 19 அன்று, காலையில் ஐந்து மணி நேரம் இலுப்பைப்பூ சேகரித்த பிறகு, அவர்கள் வாக்களிக்க செல்லலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதோடு MGNREGA வேலைத் தளம் மூடப்படுவதால், அவர்கள் நிச்சயமாக ஒரு நாள் ஊதியத்தை இழப்பார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்?
அவர்கள் தேர்வை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. ஆனால் "பழைய காலம் சிறப்பாக இருந்தது," என்று குறிப்பிடுகின்றனர்.
தமிழில் : அஹமத் ஷ்யாம்