"மாலையில், எல்லா விலங்குகளும் இங்கே ஓய்வெடுக்க வருகின்றன. இது ஒரு பர்கத் [ஆல] மரம்.”
சுரேஷ் துர்வே, தான் வேலை செய்யும் போஸ்டர் அளவிலான பேப்பரில், நேர்த்தியான வண்ணக் கோடுகளைப் போட்டபடி நம்மோடு பேசுகிறார். "இது ஒரு பீப்பல் மரம். இதில் நிறைய பறவைகள் வந்து அமரும்," என்று அவர் பாரியிடம் கூறுக்கொண்டே, இளைப்பாற வசதி தரும் மரத்திற்கு இன்னும் அதிக கிளைகளை வரைகிறார்.
49 வயதான இந்த கோண்ட் கலைஞர் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனது வீட்டில் தரையில் அமர்ந்துள்ளார். மேல் தளத்தில் உள்ள அறையின் கதவு மற்றும் ஜன்னல்களில் இருந்து ஒரு மரத்தைக் கடந்து வீட்டினுள் ஒளி விழுகிறது. அவருக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய ஜாடி பச்சை பெயிண்ட்டில் பிரஷ்ஷை முக்கியபடி அவர் பேசுகிறார். "முன்பு நாங்கள் மூங்கில் குச்சிகள் [பிரஷ்கள்] மற்றும் கிலேரி கே பால் [அணிலின் முடி] போன்றவற்றைப் பிரஷ்களாக பயன்படுத்தினோம். அவை [அணில் முடி] இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வகையில் நல்லது தான். எனவே, இப்போது பிளாஸ்டிக் பிரஷ்களைப் பயன்படுத்துகிறோம்,” என்கிறார்.
சுரேஷ் கூறுகையில், தனது ஓவியங்கள் அனைத்தும் கதைகள் சொல்லும் என்கிறார். “நான் ஓவியம் வரையும்போது அதன் கரு என்ன என்பதை சிந்திப்பதில் நிறைய நேரம் செலவிடுவேன். உதாரணமாக, தீபாவளிப் பண்டிகை வரப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது எனது ஓவியத்தில் பசுக்கள், விளக்குகள் போன்ற பண்டிகை சார்ந்த அனைத்து விஷயங்களையும் நான் யோசிக்க வேண்டும். வாழும் உயிரினங்கள், காடு, வானம், புராணக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், விவசாயம் மற்றும் சமூக ஈடுபாடுகளை கோண்ட் கலைஞர்கள் தங்கள் வேலைப்பாடுகளில் பிரதிபலிக்க வேண்டும்.






