பஞ்சாபில் தன் ஊரை சேர்ந்த ஏஜெண்டின் கெட்டக் கனவுகள் இன்னும் சிங்குக்கு வருகிறது.
ஏஜெண்டுக்கு கொடுக்கவென சிங் (உண்மைப் பெயரில்லை), தன் குடும்பத்தின் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை விற்றார். பதிலுக்கு ஏஜெண்ட் ஜதிந்தெர், செர்பியாவின் வழியாக போர்ச்சுகலுக்கு செல்வதற்கான “சட்டப்பூர்வமான ஆவணங்கள்” கிடைக்கும் என்றார்.
ஆனால் ஜதிந்தெரின் ஏமாற்று வேலை விரைவிலேயே சிங்குக்கு தெரிந்தது. சர்வதேச எல்லை தாண்டி அவர் சட்டவிரோதரமாக பயணம் செல்ல வைக்கப்பட்டார். அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்பட்ட அவர், ஊரில் இருந்த கிராமத்துக்கு தன் துயரத்தை சொல்ல முடியவில்லை.
பயணத்தின்போது, அடர் காடுகளை தாண்டி, சாக்கடைகளினூடாக சென்று, ஐரோப்பிய மலைகளில் ஏறி இறங்கி, அவரும் பிற புலம்பெயர்ந்தவர்களும் மழை குட்டைகளின் நீரை குடித்து வெறும் பிரட்டுகளை உண்டு பிழைத்தனர். பிற்காலத்தில் பிரட், அவரது வெறுப்புக்குரிய உணவாக மாறியது.
“என் தந்தை ஓர் இருதய நோயாளி. அவரால் அதிக பதற்றத்தை கையாள முடியாது. இங்கு வர எல்லாவற்றையும் செலவழித்ததால், மீண்டும் நான் வீடு திரும்ப முடியாத நிலை,” என்கிறார் 25 வயது சிங். பஞ்சாபி மொழியில் பேசும் அவர், ஐந்து பேருடன் வசிக்கும் போர்ச்சுகல் ஈரறையிலிருந்து பேசுகிறார்.
இத்தனை வருடங்களில் இந்தியா, நேபாளம், வங்க தேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு உவப்பான இடமாக போர்ச்சுகல் மாறியிருக்கிறது.








