தரையில் அமர்ந்திருக்கும் நிஷா விசிறிக் கொண்டிருக்கிறார். ஜூன் மாதத்தின் நாளொன்றின் பிற்பகலில் வெயில் ஏறிக் கொண்டிருக்கிறது. புகையிலையின் நெடி காற்றில் அடர்ந்திருக்கிறது. “நான் மட்டும்தான் இந்த வாரத்தில் அதிக பீடிகளை செய்தேன்,” என்கிறார் அவர் 17 பீடிகள் வீதம் கட்டப்பட்டிருக்கும் சுமார் 700 பீடிக் கட்டுகளை காட்டி. “இவை அநேகமாக 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம்,” என்கிறார் 32 வயது பீடித் தொழிலாளி அந்த வாரம் தான் செய்த வேலை குறித்து. ஆயிரம் பீடிகள் 150 ரூபாய் கொடுக்கும்.
ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பீடித் தொழிலாளிகள் தாங்கள் சுற்றிய பீடிகளை கொண்டு வந்து, அடுத்த பீடி சுற்றலுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை பெறுவார்கள். தாமோ நகரத்தின் வெளிப்புறத்தில் பல ஆலைகள் இருக்கின்றன. அவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் வேலை கொடுப்பார்கள். அவர்களோ வேலைகளை பிரதானமாக பெண்களுக்குக் கொடுப்பார்கள்.
தங்களுக்கான மூலப்பொருட்களை எடுத்துக் கொண்டு வாரம் முழுக்க பீடி இலைகளை புகையிலை வைத்து சுற்றி மெல்லிய நூல்களை கொண்டு கட்டுகளாக பெண்கள் கட்டுவார்கள். இந்த வேலையை வீட்டு வேலைகள் முடித்து, 10,000 - 20,000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட அவர்கள் செய்கின்றனர் 8-10 பேர் கொண்ட குடும்பங்களை நடத்த இந்த வருமானம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர்.
“காய்ந்த தும்பிலி இலைகளிலிருந்து நரம்புகள் வெளியே வர, நீரில் ஊற வைக்கப்பட வேண்டும். பிறகு இலைகள் சிறு செவ்வகங்களாக ஃபார்மா என்ற இரும்புக் கருவி கொண்டு வெட்டப்படும். ஜர்தா (புகையிலை) அதற்குள் வைக்கப்பட்டு, இலைகள் சுற்றி பீடியாக செய்யப்படும்,” என விளக்குகிறார் நிஷா. நிறுவனத்தின் பெயரை தெரிவிக்கும் வண்ணக் கயிறும் ஒவ்வொரு பீடியிலும் கட்டப்படும்.
பிறகு இவற்றைக் கொண்டு சென்று பீடி ஆலையில் விற்பார்கள். அதுதான் பீடி செய்யும் நிறுவனத்தின் ஆலை. ஒப்பந்ததாரர்களிடம் கொடுப்பார்கள். பிறகு ஒப்பந்ததாரர்கள், அவர்களை ஆலைக்கு அழைத்து செல்வார்கள். அல்லது அவர்களே பணம் கொடுப்பார்கள். ஆலைக்குள், பீடிகள் வரிசையாக்கப்பட்டு, வேக வைக்கப்பட்டு, பொட்டலம் போடப்பட்டு சேமிக்கப்படும்.









