"சுதந்திரம் என்பது பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களுக்கானது" என்கிறார் சுந்தர் பகாரியா. குஜராத்தின் வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்திற்கு எதிரே உள்ள காலா கோடா சர்க்கிள் தெருக்களில் சுந்தர் மூன்று தசாப்தங்களாக சிறிய அளவிலான இந்திய கொடிகளை விற்பனை செய்து வருகிறார். "சில நாட்கள் அதிகமாக சாப்பிடுகிறோம், சில நாட்கள் குறைவாக சாப்பிடுகிறோம், பல நாட்கள் பசியுடன் தூங்குகிறோம்..." என்கிறார் அவர்.
அவரைப் போலவே, பகாரியா சமூகத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் ஒவ்வொரு நாளும் அருகில் கடைகளை அமைத்து வருகின்றனர். காலை 9 மணியளவில் அவர்கள் வேலை நாளுக்குத் தயாராகத் தொடங்குகிறார்கள்: தரையில் ஒரு பிளாஸ்டிக் தாளில் வைக்கப்பட்டுள்ள ஸ்டைரோஃபோம் பெட்டிகளில் கொடிகளை சரிசெய்தல், நிமிர்ந்து வைக்கப்பட்ட ஸ்டைரோஃபோம் தாளில் மூவர்ண பேட்ஜ்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் கைப்பட்டைகளை பொருத்துதல் போன்ற வேலைகள். சில கொடிகள் தூண்களில் அல்லது நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளன. மற்றவை பிளாஸ்டிக் தாளில் மூவர்ண தொப்பிகளுடன் அடுக்கப்பட்டுள்ளன.
இரவு 11 மணிக்கு கடையை மூடிவிடும் அவர்கள் 14 மணி நேரத்தில் 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். சிலர் ஃபதேஹ்கஞ்ச் மேம்பாலம், சயாஜிகஞ்ச் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அல்லது பிற பரபரப்பான சந்திப்புகளுக்கு வாடிக்கையாளர்களைத் தேடிச் செல்கின்றனர்.
கொடிகள், ராக்கிகள், மெழுகுவர்த்திகள், சாண்டா தொப்பிகள் என பருவகாலத்திற்கு ஏற்ப அனைவரும் பொருட்களை மாற்றுகிறார்கள்.
அவர்களில் 16 வயதான லக்ஷ்மி பகாரியா (மேலே முகப்புப் படத்தில் இருப்பவர்) தனது ஆறு வயதிலிருந்து கொடிகளை விற்பனை செய்து வருகிறார். ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தின் யூனியாரா தாலுகாவில் உள்ள ககோட் கிராமத்திலிருந்து உறவினர்களுடன் அவர் ஆண்டுக்கு மூன்று முறை இங்கு வருகிறார் - சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் கிறிஸ்துமஸ் சமயத்தில். "நகராட்சியில் இருந்து மக்கள் வந்து எங்களை வெளியேறச் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் எப்படியோ சமாளித்து திரும்பி வருகிறோம்," என்று அவர் கூறுகிறார்
19 வயதான ராகேஷ் பகாரியாவும் தனது ஐந்து வயதிலிருந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். "எங்கள் உணவுக்கு நாங்கள் சம்பாதிக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். டெல்லியில் உள்ள சதர் பஜாரில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றிக்கொண்டு ரயிலில் அவர் பயணம் செய்கிறார். இந்த மொத்த கொள்முதல்களுக்காக, அவர் தனது கிராமத்தில் உள்ள உள்ளூர் நகைக் கடைக்காரர்களிடமிருந்து 24 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தில் ரூ.20,000 கடன் பெற்றுள்ளார்.
ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் வட்டத்தில் உள்ள திங்லா ஜத்வாரா குர்த் கிராமத்தில் ராகேஷின் குடும்பம் வசித்து வருகிறது. இங்குள்ள பெரும்பாலான பகாரியர்களைப் போன்று - இவர்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - அவரது பெற்றோரும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பயிர் பங்குதாரர்களாக வேலை செய்கிறார்கள். பொதுவாக கோதுமை மற்றும் கம்பு பயிரிடுகிறார்கள். விவசாய தொழிலாளர்களுக்கான தேவை குறைந்ததால் பகாரியாக்கள் வேலை தேடி பெரு நகரங்களுக்கும், நகரங்களுக்கும் குடிபெயரத் தொடங்கியபோது, அவர்களின் தெருவோர வியாபாரம் அநேகமாக மூன்று தசாப்தங்கள் பழமையானது என்று கொடி விற்பனையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
உச்ச விற்பனை காலம் முடிந்ததும் ராகேஷ் வீட்டிற்குச் செல்வார் - ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது கிராமத்திற்குத் திரும்ப திட்டமிட்டுள்ளார் - அங்கு அவர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். "கல்வியறிவு இல்லையென்றால் மக்கள் உங்களை முட்டாளாக்கி விடுவார்கள்," என்று அவர் கூறுகிறார்.
மகேந்திரன், லக்ஷ்மியின் உறவினர்; அவரது கடை, சில மீட்டர் தொலைவில் உள்ளது. 18 வயதாகும் அவரும் கிராம அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பருவகால பொருட்களை விற்க தனது பெற்றோருக்கு உதவ அவர் எப்போதாவது வதோதராவுக்கு வருகிறார். இந்த குடும்பம் இந்த பொருட்களை வாங்குவதற்காக உள்ளூர் நகைக் கடைக்காரரிடம் இருந்து ரூ.11,000 வாங்கியது. ஆனால் இதுவரை ரூ. 4,000 மட்டுமே சம்பாதித்துள்ளது.
"நாங்கள் சுதந்திரமானவர்கள் அல்ல,” என்கிறார் மகேந்திரா. "அரசிடமிருந்து எந்த உதவியும் இல்லை. எங்கள் கஷ்டத்தை யாரும் கேட்பதில்லை. அம்மாவும், அப்பாவும் இங்கேயே இருப்பார்கள். மற்ற நாட்களில் சிறிய பொம்மைகள் அல்லது பலூன்களை விற்று கொஞ்சம் சம்பாதிக்கிறார்கள். இதைக் கடந்து நான் பெரிய மனிதனாக வேண்டும். மேற்கொண்டு படித்து என் பெற்றோரின் கஷ்டத்தைக் குறைக்க வேண்டும்."
கொடி விற்பவர்கள் அனைவரும் நடைபாதையில் உறங்குகின்றனர். கைக்குழந்தைகளுடன் இருப்பவர்கள் தங்கள் ஸ்டால்களுக்கு அருகில் தொட்டில்களை வைத்திருப்பார்கள். விஸ்வாமித்ரி ஆற்றின் மீது உள்ள பாலத்தின் கைப்பிடிகளுக்கு பின்னால் அவர்களின் மெலிதான பிளாஸ்டிக் கூடாரங்கள் உள்ளன. இரவில் மழை பெய்தால் சிரமம். அவர்கள் அருகிலுள்ள வங்கியின் கட்டிடத்திற்கு அடியில் மழைக்கு ஒதுங்கி பாதுகாவலர்களுடன் சண்டையிடுகிறார்கள். அருகிலுள்ள பொதுக் கழிப்பறை, 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறது. அவர்களால் அதை செலுத்த முடியாத காரணத்தால் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மகேந்திராவின் தாய் மொராபாய் சாப்பிட வடை பாவ் கொண்டு வருகிறார் - அதன் விலை 10 ரூபாய். "நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுதும் போராடினாலும், எங்கள் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை," என்று அவர் கூறுகிறார்.
"சில வேன்கள் கிச்சடியை [10 ரூபாய்க்கு] விற்கின்றன. ஆனால் அதன் சுவை மிகவும் மோசமாக இருக்கும். நாய் கூட சாப்பிடாது," என்று சுந்தர் பகாரியா கூறுகிறார். அவரது கடை வெகு தொலைவில் இல்லை. கொடி விற்பவர்கள் நடைபாதைகளில் குழுக்களாக சமைக்கிறார்கள். "சில நேரங்களில் சமைக்கிறோம் - அல்லது பிஸ்கட்டுகளால் எங்கள் பசியை போக்குகிறோம். இப்போது என் மகனிடம் பணம் கேட்கிறேன்... இதை சமாளிக்க வேண்டும்.”
மற்றவர்களைப் போலவே சுந்தரும் நாளொன்றுக்கு 200 ரூபாய் அதிகபட்சம் ரூ.300 சம்பாதிக்கிறார் - இது 2-3 நபர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு கடைக்கு கிடைக்கும் வருமானம். அவரது மகன் சுரேஷின் கடை சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு சுதந்திர நாட்டின் நீல வானத்தில் கொடிகள் பறக்கின்றன. இந்த குடும்பம் சவாய் மாதோபூர் வட்டத்தின் கர்மோடா கிராமத்தைச் சேர்ந்தது. சுரேஷ் தனது மனைவி கமலேஷுடன் சேர்ந்து இந்த கடையை நடத்தி வருகிறார். இவர்களது மகன் விஷால் 5-ம் வகுப்பு படிக்கிறான். மகள் பிரியங்காவுக்கு 3 வயதாகிறது. சுரேஷ் , கோட்டா பல்கலைக்கழகத்தில் இந்தியில் பி.ஏ பட்டம் பெற்றவர். "நான் ஒரு பட்டதாரி, ஆனால் வேலை இல்லை..." என்கிறார்.
கடந்த ஆண்டு சுரேஷ், ராஜஸ்தான் மாநில போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் கிடைக்கவில்லை. "ஒரு சில வேலைகளுக்கு நிறைய போட்டி உள்ளது," என்று அவர் கூறுகிறார். ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற கூற்றுடன் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பு தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்வதில்லை. நாம் தான் ஏமாறுகிறோம்.”
சிறுவன் விஷால் குடும்பத் தொழிலிலும் உதவுகிறான். சிறிய கொடிகளை விற்க அவர் போக்குவரத்து நெரிசலிலும் செல்கிறான். மக்கள் ஏன் மூவர்ணக் கொடியை வாங்குகிறார்கள் என்று நாங்கள் கேட்டபோது, அவனுக்கு எதுவும் தெரியவில்லை.
60 வயதான சிரஞ்சிலால் பகாரியா, தெருக்களில் கொடி விற்பவர்களில் மிகவும் வயதானவர்; அவரது ஸ்டால் வினோபா பாவே சாலையில் உள்ளது. ராகேஷின் கடைக்கு வெகு தொலைவில் இல்லை. "நாங்கள் நிலமற்றவர்கள், மாதோபூரில் எங்களுக்கு ஒரு குடிசை மட்டுமே உள்ளது. அதைக்கொண்டு என்ன செய்வது?" என்று அவர் கேட்கிறார்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சிரஞ்சிலாலின் மூத்த மகன் ஒரு விபத்தில் இறந்தார். "என் நம்பிக்கை மங்கிவிட்டது," என்று அவர் கூறுகிறார். "அவருக்கு என்னால் ஆறுதல் கூற முடியவில்லை." சிரஞ்சிலால் மனைவியை இழந்தவர்; அவருக்கு மற்ற மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் சவாய் மாதோபூரில் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். "நகராட்சி நிறுவன ஊழியர்கள் எங்களது பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். சில நேரங்களில் எங்களை காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்கின்றனர்," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் கொஞ்சம் பணம் கொடுத்த பிறகு அவர்கள் எங்கள் பொருட்களைத் திருப்பித் தருகிறார்கள்."
நாங்கள் சிரஞ்சிலாலுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு எஸ்யூவி வருகிறது. அதில் இருப்பவர் பேரம் பேசத் தொடங்குகிறார். "நான் ஏழை சாஹேப்" என்று சிரஞ்சிலால் கெஞ்சுகிறார். "நான் அதிக விலை சொல்லவில்லை."
வாடிக்கையாளர் சென்ற பிறகு, நான் சிரஞ்சிலாலிடம் கேட்கிறேன்: நீங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறீர்கள். மத்தியிலும் இரண்டு மாநிலங்களிலும் பல அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறீர்கள். ஆனாலும், உங்கள் நிலை வேறுபட்டதாகத் தெரியவில்லை? "ஆம், அனைவரும் ஒன்றுதான்" என்று அவர் பதிலளித்தார். "உண்மையில், ஏழை வாக்காளர்களாகிய நாங்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறோம். பெரும்பாலான வாக்காளர்கள் ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் நாங்கள் பணக்காரர்களுக்காக அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கிறோம்." பின்னர், புறப்படும் எஸ்யூவியைப் பார்த்து, "நாங்கள் பாதகர்கள். நாங்களும் எப்போது பக்கா சாலையில் செல்ல முடியும்?"
ஆதித்யா திரிபாதி மற்றும் கிருஷ்ணா காதிக் செய்தி சேகரிப்பில் உதவினர், துருவ் மச்சி புகைப்படங்கள் எடுக்க உதவினார்.
தமிழில்: சவிதா