என் அம்மா அடிக்கடி சொல்லுற ஒரே விஷயம், நான் மட்டும் மீன் சட்டிய தூக்கல நாம இவ்வளவு தூரம் வந்து இருக்க முடியாது குமாருனு என்கிட்ட அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நான் பிறந்த ஒரு வருசத்துக்கு பிறகு அம்மா மீன் விக்க ஸ்டார்ட் பண்ணத அவங்க சொன்னாங்க அப்ப இருந்து இப்ப வர மீன்கள் என் வாழ்க்கைல இருக்கு.
மீன் வாசம் எங்க வீடு முழுக்க எப்போதும் நிறைஞ்சி இருக்கும். கருவாடும் ஒரு மூலைல சாக்குல கட்டி தொங்க போட்டு இருப்பாங்க. புதுமழை வரும்போது பணபொரில கெண்டை பொடி மீன் கிடைக்கும் அத சுண்ட வச்சு அம்மா கொடூப்பாங்க அவ்வளவு ருசியா இருக்கும். சளி உடனே இறங்கும் அதோட கம்மா கெளுத்தியும் கொரவ மீனும் செல்லபி மீனும் கொளம்பு வச்சா வீடூ முழுக்க மணக்கும்.
தாத்தாவோட சேர்ந்து நிறைய குளத்துக்கு இறபெட்டி கொண்டு போய் தண்ணீர் இறைச்சு மீன் பிடிக்க போவேன். அப்பறம் ஓடைக் கரைக்கும் போய் தூண்டில் போட போவோம்.
அம்மாவும் ஓடைக்கு போகாம இருக்க குற்றசனு ஒரு பேய் கதைலம் சொல்லுவாங்க. இருந்தாலும் அத மீறி மீன் பிடிக்க ஓடுவோம் எங்க ஊரு பசங்களும் நானும் போவோம்.
கம்மா கலுங்குல தண்ணி ஓடிட்டு இருக்கும் எப்பவும். தண்ணியிலேதான் கிடையா கிடப்போம். ஆனா அதுலாம் நான் 10வது தாண்டும் போது எதுவுமே இல்லாம போயிருச்சு.
எங்க ஊருல சின்ன கம்மா பெரிய கம்மா, மருதங்குளம் கம்மானு மூணு கம்மா இருந்துச்சு. ஆத்துல தண்ணி வரும் போது மட்டும் கம்மா நிறைஞ்சு கிடக்கும். இதுல சின்ன கம்மா பெரிய கம்மா எப்பவும் ஏலம் விடுவாங்க. இந்த இரண்டு கம்மாகளிலும் தை மாசம் வரும் போது அறுவடையும் ஆரம்பிக்கும். அதோடு மீன் பிடிக்கிறதும் ஆரம்பிக்கும்.
கம்மா மீன்கள் வாங்க நிறைய ஊருக்கு அப்பா கூட சைக்கிள்ல பெட்டி கட்டி நான் போவேன். 20,30 கிலோ மீட்டர் தூரம் வர கம்மா மீன்கள் வாங்க போவோம்.


































