அஞ்சலி, துளசியை எப்போதும் அம்மா என்றுதான் அழைத்து வருகிறார். இதை சொல்லும்போது அந்த தாய் பெருமையுடன் புன்னகைக்கிறார். அவரின் சுருள் முடிகள் கொண்டையாக போடப்பட்டிருக்கிறது. இளஞ்சிவப்பு நிறப் புடவை நேர்த்தியாக கட்டியிருக்கிறார். திருநங்கையான துளசி, ஒன்பது வயது மகளுக்கு தாய்.
பதின்வயதுகளின் பிற்பகுதியில்தான் துளசி, தன்னை ‘கார்த்திகா’ என குறிப்பிடத் தொடங்கினார். பிறகு, ஓர் அதிகாரி அவரின் ரேஷன் அட்டையில் தவறுதலாக ‘துளசி’ என்கிற பொது பாலின பெயரை எழுதி விட்டார். அவரும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார். இரண்டு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அவர் பதிலுறுகிறார்.
தமிழ்நாட்டின் திருப்போரூர் தாலுகாவிலுள்ள இருளர் குக்கிராமமான தர்காஸில், ஒரு சிறு குடிசையில் மகளுடன் துளசி வாழ்ந்து வருகிறார். அஞ்சலி கைக்குழந்தையாக இருக்கும்போதே, துளசியின் மனைவி அவரை பிரிந்து விட்டார். அஞ்சலியை அவர்தான் தனியாக வளர்க்கிறார். இருவருக்கும் பிறந்த முதல் குழந்தையை, ஒன்பது வயதில் 2016ம் ஆண்டு வர்தா புயலுக்கு பறிகொடுத்தனர்.
தற்போது நாற்பது வயதுகளில் இருக்கும் துளசி, ஒரு திருநங்கை குழுவில் பல வருடங்களாக உறுப்பினராக இருக்கிறார். மடியில் அமர்ந்திருக்கும் அஞ்சலியை அன்புடன் பார்த்தபடி, “இவளையும் நான் திருநங்கை கூட்டங்களுக்கு கையில் பால்புட்டி கொடுத்து அழைத்து செல்கிறேன்,” எனத் தொடர்கிறார்.
அஞ்சலிக்கு நான்கு வயதாக இருக்கும்போது, அவரின் தாயாக, தான் அடையாளப்படுத்தப்பட வேண்டுமென மிகவும் விரும்பி, வேஷ்டி கட்டுவதிலிருந்து புடவைக்கு மாறினார் துளசி. இந்த யோசனையை 50 வயது திருநங்கை குமுதி கொடுத்ததால் செய்ததாக சொல்கிறார் துளசி. குமுதியை தன் ஆயாவாக (பாட்டி) துளசி கருதுகிறார்.
ஒரு பெண்ணாக தன் பாலின அடையாளத்தை உறுதிப்படுத்திய அந்த கணத்தை பற்றி சொல்கையில், “விளம்பரமாவே வந்துட்டேன்,” என்கிறார்.
மாற்றத்தை குறிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட வேடையூரில் 40 வயது உறவினரான ரவியுடன் சடங்கு திருமணம் செய்து கொண்டார் துளசி. இம்முறை, தமிழ்நாட்டின் திருநங்கையர் மத்தியில் பரவலாக இருக்கிறது. இது வெறும் சடங்குதான். ரவியின் குடும்பமான, மனைவி கீதாவும் இரு பதின்வயது மகள்களும் தங்களின் குடும்பத்துக்குள் ஓர் ஆசிர்வாதமாக துளசியையும் ஏற்றுக் கொண்டனர். “கணவர் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் அவரை அம்மாவென அழைக்கிறோம். அவர் எங்களுக்கு கடவுள் போல,” என்கிறார் கீதா.
தர்காஸில் தொடர்ந்து வசிக்கும் துளசி, தன் புதுக் குடும்பத்தை முக்கிய விழாக்களின்போது சந்திக்கிறார்.
அதே காலக்கட்டத்தில், அவருடன் பிறந்த ஏழு பேரும் கூட, அன்றாடம் புடவை கட்டத் தொடங்கியதும் அவரை ‘அம்மா’ அல்லது ‘சக்தி’ (தெய்வம்) என்று அழைக்கத் தொடங்கினர். அவரின் மாற்றம் கடவுளின் அருளால் நேர்ந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.
துளசி சார்ந்திருக்கும் இருளர் சமூகத்தில் அனைவருக்கும் அவரது பாலினம் குறித்து தெரியும். எனவே அதை மறைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை என்கிறார் துளசி. “திருமணம் முடியும் முன்பே என் மனைவிக்கும் முழுமையாக தெரியும்,” என்கிறார் துளசி. “நான் குடுமி போட்டபோதும் புடவை கட்டத் தொடங்கியபோதும் யாருமே என்னை கண்டித்ததோ உடையை வேறு பாணியில் அணிய சொன்னதோ இல்லை,” என்கிறார் அவர்.
துளசியின் நண்பரான பூங்காவனம், ஏன் துளசி ‘ஒரு பெண்ணை’ போல் நடந்து கொள்கிறாரென நண்பர்களிடம் கேட்டதாக நினைவுகூருகிறார். “எங்களின் கிராமம்தான் எங்களுக்கு உலகம். அவரை (துளசி) போல யாரையும் நாங்கள் கண்டதில்லை. அவரைப் போன்ற மக்களும் இருக்கிறார்கள் என எண்ணி அவரை ஏற்றுக் கொண்டோம்,” என்கிறார் அவர், துளசி அவமதிக்கப்பட்டாரா அல்லது சீண்டப்பட்டிருக்கிறாரா என கேட்டதை மறுத்து.
எழுபது வயதுகளில் இருக்கும் அவரின் பெற்றோரான செந்தாமரையும் கோபாலும் கூட அவரை ஏற்றுக் கொண்டனர். அவரின் உணர்ச்சிவசப்படும் இயல்பை அறிந்து துளசி இளமையாக இருக்கும்போதே, “அவன் மனசை புண்படுத்தக் கூடாது,” என முடிவெடுத்ததாக அவர்கள் சொல்கிறார்கள்.
“அது (துளசி புடவை கட்டுவது) நல்ல விஷயம்தான். அம்மன் வீட்டுக்கு வந்தது போல,” என்கிறார் செந்தாமரை கைகளை கூப்பி, கண்கள் மூடி வணங்கி, கடவுளின் மறு உருவம்தான் துளசி என்கிற குடும்பத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில். செந்தாமரை 2023ம் ஆண்டின் பிற்பகுதியில் மறைந்தார்.
மாதந்தோறும் துளசி 125 கிலோமீட்டர்கள் திருநங்கை சமூகத்தினருடன் பயணித்து, விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் மேல்மலையனூருக்கு சென்று பக்தர்களை ஆசிர்வதிக்கிறார். “திருநங்கையின் வார்த்தை பலிக்குமென மக்கள் நம்புகிறார்கள். நான் யாரையும் சபிக்க மாட்டேன். ஆசிர்வதிக்க மட்டுமே செய்வேன். அவர்கள் கொடுப்பதை ஏற்றுக் கொள்வேன்,” என்கிறார் அவர். அன்றாடம் புடவை கட்டும் அவரின் முடிவு, அவரளிக்கும் ஆசிர்வாதத்துக்கு இன்னும் அதிக பலன் கொடுப்பதாக அவர் நம்புகிறார். ஒரு குடும்பத்தை ஆசிர்வதிக்க அவர், கேரளா வரை கூட பயணித்திருக்கிறார்.
சராசரி நோய்களுக்கு மூலிகை மருத்துவம் சொல்வதால் அவருக்கு ஓரளவு வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அது கடந்த சில வருடங்களாக சரிந்து வருகிறது. “பல பேரை குணமாக்கி இருக்கிறேன். ஆனால் இப்போது, அவர்கள் செல்பேசிகளை பார்த்து தங்களுக்கு தாங்களே சிகிச்சை செய்து கொள்கின்றனர். 50,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டிய காலம் ஒன்று இருந்தது. அது 40,000மாக ஆனது. பிறகு 30,000 ஆனது. இப்போது 20,000 ரூபாய் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது,” என பெருமூச்சு விடுகிறார். கோவிட் வருடங்கள்தான் மிகுந்த சிரமத்தை கொடுத்தவை.
இருளர் தெய்வமான கன்னியம்மாவின் கோவிலை பார்த்துக் கொள்வதோடு, துளசி நூறு நாள் வேலையும் (MGNREGA) ஐந்து வருடங்களாக செய்து வருகிறார். தர்காசின் நிலங்களில் அவர் பிற பெண்களுடன் வேலை பார்த்து நாளொன்றுக்கு 240 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலைக்கான உத்தரவாதம் அளிக்கிறது.
அஞ்சலி, காஞ்சிபுரத்துக்கு அருகே இருக்கும் ஓர் அரசு விடுதிப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார். அவரின் படிப்புதான் முக்கியமென்கிறார் துளசி. “அவளை படிக்க வைக்க என்னாலானதை நான் செய்கிறேன். கோவிட் காலத்தில் தனியாக விடுதியில் இருக்க அவள் விரும்பவில்லை. எனவே என்னோடு வைத்துக் கொண்டேன். ஆனால் இங்கு அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க யாருமில்லை,” என்கிறார் அவர். இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த துளசி, 2023ம் ஆண்டு தொடக்கத்தில், பள்ளியில் அஞ்சலியை சேர்க்க சென்றபோது, முதல் திருநங்கை பெற்றோரென அவர் பாராட்டப்பட்டார்.
துளசியின் திருநங்கை தோழிகளில் சிலர், பாலினம் உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள விரும்பும் நிலையில், “நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். பின் ஏன் நான் இந்த வயதில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்?” எனக் கேட்கிறார்.
ஆனால் அதை குறித்து தொடர்ந்து குழுவில் பேசியதில், பக்கவிளைவுகள் இருந்தாலும் அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதை பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறார் துளசி. “அறுவை சிகிச்சை செய்ய கோடைகாலம் சரியாக இருக்கும். வேகமாக சரியாகும்.”
செலவு, கொஞ்ச செலவல்ல. அறுவை சிகிச்சைக்கும் மருத்துவமனை சிகிச்சைக்கும் தனியார் மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை ஆகிறது. திருநர், பாலின உறுதி அறுவை சிகிச்சை செய்வதற்கென தமிழ்நாடு அரசாங்கத்தின் கொள்கையை ஆராயவிருக்கிறார் துளசி. அரசாங்க உதவி பெற முடியுமா என யோசிக்கிறார்.
பிப்ரவரி 2023-ல் மாசானக் கொள்ளை (மயானக் கொள்ளை) விழாவை கொண்டாட செந்தாமரை மற்றும் அஞ்சலி ஆகியோருடன் மேல்மலையனூருக்கு சென்றார் துளசி.
தாயின் கைகளை பற்றிக் கொண்டு, கூட்டம் நிறைந்த கோவில் தெருக்களினூடாக பழைய நண்பர்களை சந்திக்க சென்று கொண்டிருந்தார் அஞ்சலி. ரவியும் கீதாவும் தத்தம் குடும்பங்களுடன் வந்திருந்தனர். துளசியின் திருநங்கை குடும்பமும் அவரின் குருவும், சகோதரிகளும் இன்னும் பலரும் உடன் சேர்ந்தனர்.
பெரிய செந்தூரப் பொட்டை நெற்றியில் வைத்துக் கொண்டு போலியான நீளச் சடை அணிந்திருக்கும் துளசி அனைவரிடமும் பேசுகிறார். “சந்தோஷமாக இருக்கிறேன்!” என்கிறார் அவர் சிரித்தபடி, அவ்வப்போது நடனம் ஆடிக் கொண்டு.
”எத்தனை அம்மாக்கள் இருக்கிறார்களேன அஞ்சலியை கேட்டுப் பாருங்கள்,” என துளசி குடும்ப விழாவில் என்னிடம் சொன்னார்.
நானும் கேட்டேன். துளி கூட யோசிக்காமல், “இரண்டு” என சொல்லி சிரித்த அஞ்சலி, துளசியையும் கீதாவையும் சுட்டிக் காட்டுகிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்