முடக்கப்படுதல், கட்டாய திருமணம், பாலியல் மற்றும் உடல்ரீதியிலான வன்முறை, ‘சரிப்படுத்தும்’ சிகிச்சைகள் போன்றவைதான் LGBTQIA+ சமூகத்தினரால் அடிக்கடி எதிர்கொள்ளப்படுவதாக சர்வதேச சட்ட நிபுணர்கள் கமிஷன் 2019ம் ஆண்டில் வெளியிட்ட Living with Dignity என்ற அறிக்கை குறிப்பிடுகிறது.
உதாரணமாக வித்தியையும் ஆருஷையும் எடுத்துக் கொள்வோம் (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன). ஒன்றாய் வாழ்வதற்காக, மகாராஷ்டிராவின் தானே மற்றும் பல்கர் மாவட்டங்களிலுள்ள தங்களின் வீடுகளை விட்டு அவர்கள் வெளியேறி மும்பைக்கு வர வேண்டியிருந்தது. வித்தியும் ஆருஷும் (திருநம்பி) நகரத்தின் வாடகை அறை ஒன்றுக்கு சென்றனர். "வீட்டு உரிமையாளருக்கு எங்களின் உறவு குறித்து தெரியாது. நாங்கள் எங்கள் உறவை மறைக்க வேண்டியிருந்தது. அறையை நாங்கள் காலி செய்ய விரும்பவில்லை," என்கிறார் ஆருஷ்.
LGBTQIA+ மக்களுக்கு வீடுகள் மறுக்கப்படுகின்றன. கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். குடும்பத்தாலும் வீட்டு உரிமையாளர்களாலும் அண்டை வீட்டாராலும் காவலர்களாலும் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். பலருக்கு வீடற்ற நிலை இருப்பதாக குறிப்பிடுகிறது Living with Dignity அறிக்கை.
கிராமப்புற இந்தியாவில் இருக்கும் பாரபட்சமும் அச்சுறுத்தலும் திருநர் சமூகத்தினர் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பாதுகாப்பான இடத்தை தேட வைக்கிறது. மேற்கு வங்கத்தில் திருநர் பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் 2021ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி “அவர்களின் பாலின வெளிபாட்டை மூடி மறைக்க குடும்பம் அழுத்தம் கொடுக்கிறது.” குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகம் வெளிப்படுத்தும் பாரபட்சமான அணுகுமுறையால் பாதி பேர் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.
“திருநராக நாங்கள் இருப்பதால், எங்களுக்கு மதிப்பு இல்லை என அர்த்தமா?” எனக் கேட்கிறார் ஷீதல். பள்ளி, தெருக்கள், பணியிடம் என எல்லா இடங்களிலும் பல வருடங்களாக நேர்ந்த கசப்பான அனுபவங்களின் விளைவாக அவரின் கேள்வி எழுகிறது. “ஏன் அனைவரும் எங்களை அவமதிக்கின்றனர்?” என அவர், ‘'எதோ தீய சக்தியைப் போல் அல்லவா எங்களைப் பார்க்கிறார்கள்' கட்டுரையில் கேட்கிறார்.






