தவறு செய்யவில்லை என்றாலும் அடிக்கிறான். மனதில் சந்தேகத்தை விதைக்கிறான்
நான் செய்யாத தவறுக்கு மேய்ச்சல் பிரபு என்னை அடிக்கிறான்
நாட்டுப்புற பாடலின் முதல் வரியாக இது சற்று பதற்றத்தை கொடுக்கக் கூடியதுதான். எனினும் அது முன் வைக்கும் கசப்பான யதார்த்தம், அப்பாடல் பாடப்படும் குஜராத்தின் கட்ச் பகுதியை தாண்டியும் உண்மையாக இருப்பதுதான் இன்னும் பதற்றம் கொடுப்பதாக இருக்கிறது.
அடிப்பது உள்ளிட்ட இணையரின் வன்முறை உலகளாவிய பிரச்சினையாக இருக்கிறது. பெண்களுக்கான உரிமை மீறலாகவும் பொது மருத்துவ பிரச்சினையாகவுமே அது முக்கியமான சிக்கல். ஐநாவின் சர்வதேச தரவு களின்படி, மூன்று பெண்களில் ஒருவர் ஏதோவொரு வகை வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்.
மனைவியை ஒரு கணவர் அடிப்பது நியாயமாக முடியுமா?
குஜராத்தை சேர்ந்த 30 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களும் 28 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆண்களும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ( NFHS 5 ) 2019-21-ன் இக்கேள்விக்கு ஆம் என பதிலளித்திருக்கிறார்கள். மனைவிகளை அடிப்பதற்கு சரியான காரணமாக எதை இவர்கள் நினைக்கிறார்கள்? பெரும்பாலானோர் சந்தேகம், திருமணம் தாண்டிய உறவு, வாக்குவாதம் செய்வது, உறவு வைத்துக் கொள்ள மறுப்பது, கணவரிடன் சொல்லாமல் வெளியே செல்வது, வீட்டுவேலை செய்ய மறுப்பது, நல்ல உணவு சமைக்காதது ஆகியவற்றைக் கூறுகிறார்கள்.
தேசிய புள்ளியியல் தரவுகளாக இருந்தாலும் இன்னும் உற்சாகம் அளிக்கும் வடிவத்தில் இருக்கும் நாட்டுப்புற பாடல்கள், உளவியல் தரவுகளை நமக்கு காட்டுகிறது. பெண்களின் உள்ளுணர்வுகளையும் நுட்பமான சிந்தனைகளையும் அவர்கள் இருக்கும் குழுக்களின் செயல்பாடுகளையும் நாட்டுப்புற பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
ஒடுக்கப்பட்டவர்களின் தரவுகள்தாம் இந்தப் பாடல்கள் என்பதை ஏற்பது உங்களின் விருப்பம்தான். உதாரணமாக காதலுக்கான தன்மை நிறைந்த இந்தப் பாடலில், மாறுவேடத்துடன் தந்திரமாக அவதூறு செய்கிறாளா அல்லது இதுதான் பாரம்பரியமாக பாடப்படும் முறையா என்பது எங்களுக்கு சரியாக தெரியவில்லை. கணவரை அவள் எதிர்ப்புணர்வுடன் அழைக்கும் ‘ மலாதரி ரானோ ’ என்கிற வார்த்தையை மரியாதையான வார்த்தை கொண்டு அர்த்தப்படுத்துவதா என்றும் எங்களுக்கு தெரியவில்லை.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு ஒரு முடிவை பாடல் கொண்டு வராமல் இருக்கலாம். ஆதிக்கக் கட்டமைப்பை அசைக்காமல் கூட இருக்கலாம். ஆனால் இத்தகைய பாடல்கள், அன்றாட வாழ்க்கையின் கொடூரங்களை வெளிப்படுத்த வைக்கிறது. சக்திவாய்ந்த இசையோட்டத்தினூடாக, எவருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத வலியை அவள் வெளியேற்றவேனும் முடிகிறது. அமைப்புரீதியான ஆதரவு இல்லாத சமூகத்தில், பரிச்சயமான ஒரு மெட்டுக்குள் தாங்க முடியாத தன் வாழ்க்கைத் துயரங்களை ஏற்றி வைத்து, இன்னொரு நாள் வாழ்வதற்கான சக்தியை ஒருவேளை அவள் பெறலாம்.


