ஓர் உயிரியயலாளர், ஒரு ராணுவ் அதிகாரி, ஒரு இல்லத்தரசி, ஒரு பூகோள பட்டதாரி.
ராஞ்சியின் மும்முரமான சாலையருகே வித்தியாசமான இந்த குழுவினர் ஒரு கோடை நாளன்று ஒன்று திரண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் எளிதில் பாதிக்கத்தக்க பழங்குடி குழுக்களை (PVTG) சார்ந்தவர்கள். தலைநகரின் ஜார்க்கண்ட் பழங்குடி ஆய்வு மையத்தில் எழுதுவற்கான பயிற்சி பட்டறையில் இருந்தனர்.
“எங்களின் குழந்தைகள் தன் தாய்மொழியில் படிக்க விரும்புகிறேம்,” என்கிறார் மாவ்னோ மொழி பேசும் மால் பஹாரிகா சமூகத்தை சேர்ந்த ஜகன்னாத் கிரி. 24 வயதாகும் அவர், 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ளா அவரது தும்கா கிராமத்திலிருந்து ராஞ்சிக்கு மாவ்னோ மொழியின் இலக்கணத்தை எழுத பயணித்து வந்திருக்கிறார்.
நிறைய திட்டங்கள் இருக்கின்றன: “மாவ்னோவில் ஒரு புத்தகம் பிரசுரிக்க விரும்புகிறோம்,” என்கிறார் ஜகன்னாத். அவரது ஊரான பலியகோராவில் உயிரியல் முதுகலை படித்திருக்கும் ஒரே நபர் அவர்தான். அதை அவர் இந்தி மொழியில் படித்திருந்தார். “பெரும் எண்ணிக்கையில் இருக்கும் சமூகத்தினர் பேசும் மொழி, பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகிறது,” எனச் சுட்டி காட்டுகிறார் அவர். “ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டம், கோர்த்தா, சந்தாளி போன்ற பழங்குடி மொழிகளில் இருக்கிறது. ஆனால் எங்கள் மொழியில் இல்லை.”
“இந்த (ஒதுக்கல்) பாணி தொடர்ந்தால், என் மொழி மெல்ல மறைந்து போகும்.” 15 சதவிகித மால் பஹாரியா மக்கள் ஜார்க்கண்டில் வாழ்கிறார்கள். பிறர் அருகாமை மாநிலங்களில் இருக்கின்றனர்.
அவர்களின் மாவ்னோ மொழி திராவிட தாக்கங்கள் கொண்ட ஒரு இந்தோ ஆரிய மொழி. 4,000 பேர் மட்டுமே பேசி, அருகும் நிலையில் இருக்கும் அம்மொழிக்கு அலுவல் மொழி அந்தஸ்து இல்லை. ஜார்க்கண்டின் இந்திய மொழியியல் கணக்கெடுப்பின்படி , மாவ்னோ கல்வி மொழியாக பள்ளிகளில் இல்லை. அதற்கென தனி எழுத்தும் இல்லை.
விவசாயத்தையும் காட்டு உற்பத்தியையும் மால் பஹாரியா சமூகம் சார்ந்திருக்கிறது. ஜார்க்கண்டில் PVTG-யாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் அவர்களில் பலர் தும்கா, கொட்டா, சாஹிப்கஞ்ச் மற்றும் பகூர் மாவட்டங்களில் வாழ்கின்றனர். வீட்டில் அவர்கள் மாவ்னோ மொழி பேசுகின்றனர். மற்ற அதிகாரப்பூர்வ தொடர்பு யாவும் இந்தி, வங்காளி போன்ற ஆதிக்க மொழிகளில் நடக்கின்றன. தங்களின் மொழி அழிந்து விடுமென அவர்கள் நினைக்கின்றனர்.
மாவ்னோ மொழி பேசும் மனோஜ் குமார் டெரியும் ஜகன்னாத்தின் கருத்தை ஒப்புக் கொள்கிறார். சகார்பூர் கிராமத்தின் 23 வயது இளைஞரான அவர், பூகோள பட்டதாரி ஆவார். அவர் சொல்கையில், “பயிற்று மொழியாக இந்தி அல்லது வங்காளத்தை முன்னிறுத்தும் அரசின் முயற்சி, மாவ்னோவுக்கு நன்மையை விட தீமையைத்தான் அதிகம் இழைக்கிறது.” ஜார்க்கண்ட் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்றுமொழியாக இந்திதான் இருக்கிறது. ஆசிரியர்களும் இந்திதான் பேசுகின்றனர்.
ஆதிக்க மொழிகளை தாண்டி ‘இணைப்பு மொழிகள்’ சார்ந்த பிரச்சினையும் இருக்கிறது. பிறருடன் பேசுவதற்கு பழங்குடிகளால் பயன்படுத்தப்படும் மொழிகள் அவை. குறிப்பிட்ட பகுதியின் ஆதிக்க மற்றும் பூர்விக மொழிகளுக்கு இடையே பாலம் போல செயல்படும் மொழிகள் அவை.
“அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய அதே இணைப்பு மொழியில் ஒரு குழந்தை பேச வேண்டும் என்பது சொல்லப்படாத எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் ஒரு குழந்தை தன் தாய்மொழியை விட்டு இன்னும் தள்ளிப் போய் விடுகிறது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் PVTG-களுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியரான பிரமோத் குமார் ஷர்மா.
மாவ்னோ மொழியைப் பொறுத்தவரை, கோர்த்தா மற்றும் கெட்ரி ஆகிய இணைப்பு மொழிகளும் மாவ்னோ மொழி பேசுபவர்கள் மீது தாக்கம் செலுத்துகிறது. “வலிய சமூகத்தினரின் மொழிகளின் தாக்கத்தால் எங்களின் தாய்மொழியை நாங்கள் மறந்து கொண்டிருக்கிறோம்,” என்கிறார் மனோஜ்.
இரண்டு மாதங்கள் நடக்கும் பயிற்சியின் முடிவில், அருகி வரும் மொழிகளை பேசும் ஒவ்வொருவரும் அவரவரின் தாய்மொழிக்கான அடிப்படை இலக்கண வரையறையை உருவாக்குவார்கள். மொழியியலாளர்களால் எழுதப்படாமல், முதன்முறையாக மொழி சார்ந்த சமூகத்தினரால் எழுதப்படும் புத்தகமாக இது இருக்கும். மொழியை அவர்களின் இம்முயற்சி காக்குமென அவர்கள் நம்புகின்றனர்.
“பிற (PVTG அல்லாத) சமூகத்தினரால் அவர்களின் மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களை பெற்றுவிட முடியும். அவர்களது மொழிகளில் படித்தால் நல்ல வேலைவாய்ப்பும் அவர்களுக்கு கிட்டும்,” என்கிறார் ஜகன்னாத். ஆனால் அவரின் சமூகத்தினர் அவர்களது மொழியை தொடர்ந்து பேசினால் மட்டுமே இத்தகைய சாத்தியம் அவரது மொழிக்கு நேரும். “இன்றைய நிலையில் என் தாத்தா பாட்டி மட்டும்தான் சரளமாக மாவ்னோ பேசுவார்கள். எங்களின் குழந்தைகள் அதை கற்றுக் கொண்டால்தான், அவர்களால் அம்மொழியை பேச முடியும்.”
*****
2011 கணக்கெடுப்பின்படி 19,000 மொழி வழக்குகள் இந்தியாவில் இருக்கின்றன. இவற்றில் 22 மொழிகள் மட்டும்தான் சட்டப்பிரிவு VIII-ன்படி அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. பல தாய்மொழிகளுக்கு வரிவடிவம் இல்லாததாலும் சரளமாக அம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் ‘மொழி'க்கான அந்தஸ்து கூட கிடைப்பதில்லை.
அங்கீகரிக்கப்படாமல் 31 தாய்மொழிகள் மாநிலத்தில் இருக்கும் நிலையில் சட்டப்பிரிவு VIII அங்கீகாரம் பெற்ற இந்தி மற்றும் வங்காள மொழிகள் ஜார்க்கண்டின் ஆதிக்க மொழிகளாக தொடர்கின்றன. பள்ளிகளில் கற்பிக்கப்படும் அம்மொழிகள், மாநிலத்தில் தொடர்பு மொழிகளாக பயன்படுகின்றன. சந்தாளி மட்டும்தான் VIII சட்டப்பிரிவில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஜார்க்கண்டின் ஒரே பழங்குடி மொழி.
மாநிலத்தின் மற்ற 31 மொழிகளை பேசுபவர்களுக்கு, குறிப்பாக PVTG-களை சார்ந்தவர்களுக்கு, மொழி இழக்கும் பிரச்சினைதான் யதார்த்த நிலை.
“எங்களின் தாய்மொழியில் கலப்பு நேர்கிறது,” என்கிறார் மகாதியோ (உண்மைப் பெயர் அல்ல). ராணுவ அதிகாரியாக இருந்த அவர் சபர் சமூகத்தை சேர்ந்தவர்.
ஜார்க்கண்டில் 32 தாய்மொழிகள் இருந்தும், சந்தாளி மட்டும்தான் சட்டப்பிரிவு VIII மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தியும் வங்காள மொழியும்தான் மாநிலத்தின் ஆதிக்க மொழிகளாக தொடர்கின்றன
தங்களின் மொழி இது போல விளிம்புநிலையில் இருப்பதற்கான காரணம், அச்சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் கிராமப் பஞ்சாயத்துகளில் இல்லாததுதான் எனக் குறிப்பிடுகிறார். “சபார்கள் சிதறியிருக்கின்றனர். நாங்கள் வாழும் கிராமத்தில் (ஜம்ஷெட்பூர் அருகே) வெறும் 8-10 குடும்பங்கள்தான் இருக்கின்றன.” மற்றவர்கள் அனைவரும் பிற பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள். பழங்குடி அல்லாதவர்கள் சிலரும் இருக்கின்றனர். “என் மொழி அழிவதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.
தன் தாய்மொழி சபார் மொழியாக கூட அங்கீகரிக்கப்படவில்லை என்கிறார் மகாதியோ. “வரிவடிவம் கொண்ட மொழியின் குரலுக்குதான் முதலில் செவி சாய்க்கப்படும்.”
*****
TRI 1953-ல் சமூக பொருளாதார பண்பாட்டு வரலாற்ற அம்சங்களை ஆராய்ந்து ‘பழங்குடி சமூகங்களை பிற சமூகங்களுடன் இணைக்கும்’ நோக்கத்துடன் நிறுவப்பட்டது.
2018ம் ஆண்டு முதல், அசுர் மற்றும் பிர்ஜியா போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய பல பழங்குடி குழுக்களின் மொழி இலக்கணங்களை பிரசுரித்திருக்கிறது TRI. குறிப்பிட்ட மொழியின் பழமொழிகள், சொலவடைகள், நாட்டுப்புறக் கதைகள், கவிதைகள் போன்றவையும் புத்தகங்களாக பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.
இதுபோல பல மொழி அடிப்படைகளை குறிப்பிட்ட சமூகத்தினரே உருவாக்கும் பணி என்றபோதும் கூட, பெரிய அளவில் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. “TRI அலமாரிகளிலுள்ள புத்தகங்கள் பள்ளிகளை அடையும்போதுதான் நம் குழந்தைகள் அவர்களின் தாய்மொழியில் படிக்க முடியும்,” என்கிறார் ஜகன்னாத்.
TRI-ன் முன்னாள் இயக்குநரான ரனேந்திர குமார், தன்னுடைய பதவிக்காலத்தில்தான் இத்தகைய முயற்சியை முன்னெடுத்தவர். ஆனால் அவர், “புத்தகங்கள் PVTG சமூகத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை சென்றடைய வேண்டும். அப்போதுதான் இப்பணிக்கான உண்மையான நோக்கம் நிறைவேறும்,” என்கிறார்.
குறிப்பிட்ட மொழியை சரளமாக பேசுபவரை அடையாளம் காண்பதுதான் பெரும் சவால். பிரமோத் சொல்கையில், “தாய்மொழியை சரளமாக பேசுபவர்கள் பெரும்பாலும் எழுதத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்,” என்கிறார். வேறு வழியும் இல்லாததால், எழுதத் தெரிந்து சரளமாக மொழி பேசத் தெரியாமல் இருப்பவர்களையும் கலப்பு மொழி பேசுபவர்களையும் கொண்டு இலக்கண அடிப்படைகள் எழுதப்படுகிறது.
“மொழி அறிஞராக இந்த வேலை செய்வதற்கென எந்த நிபந்தனையும் நாங்கள் விதிக்கவில்லை.” மொழி தெரிந்திருந்தால் போதும். “பேசும் மொழியிலேயே இலக்கணம் தயார் செய்யப்பட்டால் இன்னும் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்குமென நம்புகிறோம்,”’ என்கிறார் ஜார்க்கண்ட் கல்வி ஆய்வுக் குழுவின் (JERC) முன்னாள் ஆசிரிய உறுப்பினரான பிரமோத்.
முரண்நகையாக PVTG-களின் மொழி அடிப்படைகளும் இலக்கண புத்தகங்களும் தேவநாகரி எழுத்தை பயன்படுத்துகின்றன. இந்தி மொழியில் இருக்கும் ஓர் எழுத்தோ ஓர் ஒலியோ ஒரு மொழியில் இருக்குமானால், அந்த ஒலியை குறிப்பிட்ட அந்த மொழியின் எழுத்துகளிலிருந்து அவர்கள் நீக்கி விடுவார்கள். ‘ण’ என்கிற இந்தி எழுத்து மாவ்னோ மொழியில் இருக்கிறது. சபார் மொழியில் இல்லை. எனவே நாங்கள் ‘ण’ என்ற எழுத்தை சபார் எழுத்துகளில் எழுதுவதில்லை. ‘न’ என்ற எழுத்தை மட்டும்தான் எழுதுகிறோம் என விளக்குகிறார் பிரமோத். போலவே, ஓர் ஒலியோ எழுத்தோ இந்தியில் இல்லையெனில், பழங்குடி மொழியில் மட்டும்தான் இருக்கிறதெனில், அதற்கான எழுத்தை அவர்கள் அறிமுகப்படுத்தி விளக்கக் குறிப்பு கொடுப்பார்கள்.
“ஆனால் நாங்கள் வரி வடிவத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். எழுத்துகளும் வார்த்தைகளும் பூர்விக மொழியின் உச்சரிப்புக்கு ஏற்ப எழுதப்படும்,” என்கிறார் 60 வயது பிரமோத்.
*****
மாலை ஆகிவிட்டது. ஜகன்னாத் மனோஜும் மகாதியோவும் பிற பங்கேற்பாளர்களுடன் தேநீர் குடிக்க மொராபடி சவுக்குக்கு வருகிறார். மொழி பற்றிய உரையாடல் தொடங்கி, தாய்மொழியில் பேச ஒருவருக்கு இருக்கும் தயக்கம் உள்ளிட்ட பல அம்சங்களை தொடுகிறது.
அவர்கள் பேசும்போது கூட, எல்லா நேரமும் அவர்கள் புரிந்து கொள்ளப்படுவதில்லை. 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய ரிம்பு குமாரியின் நிலையும் அதுதான். முழு நாளும் அமைதியாக இருந்த பிறகு, தயக்கத்துடன் அவர் பேசத் தொடங்குகிறர. “பராஹியா மொழியில் நான் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்,” என்கிறார் 26 வயதாகும் அவர். சமூகத்துக்கு வெளியே அவர் மணம் முடித்திருக்கிறார். “என்னுடைய கணவர் வீட்டாரே கிண்டல் செய்தால், வெளியே எப்படி நான் பேச முடியும்?”
தாய்மொழியில் பேசுவதால் ஏற்படும் அவமதிப்பை முடிவுக்குக் கொண்டு வர அவர் விரும்புகிறார். “அதை பற்றி இங்கு நான் பேச விரும்பவில்லை. தெரிந்து கொள்ள வேண்டுமெனில் என் ஊருக்கு வாருங்கள்,” என முடித்துக் கொள்கிறார்.
இக்கட்டுரை எழுத உதவிய ரானேந்திர குமாருக்கு கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்
அருகி வரும் மொழிகளுக்கான பாரியின் பணி (ELP), இந்தியாவில் பாதிப்பில் இருக்கும் மொழிகளை பற்றி, அவற்றை பேசுபவர்களின் அனுபவங்கள் மூலம் ஆவணப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது
தமிழில்: ராஜசங்கீதன்