தற்காலிக மேடை மீது ஏறிய அந்த இளைஞர், 19 வயது இளம்பெண் முஸ்கான் கையைப் பிடித்தார். “இப்போ உன்னை சுட்டால் நீ ஆடத் தொடங்குவாய்,” என்றார் அந்த இளைஞர்.
பார்வையாளர்களில் இருந்து வந்து அப்படி மிரட்டிய இளைஞனை ஊக்குவித்து குரல் எழுப்பியது கூட்டம். பிகாரின் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் நடந்த அந்த நிகழ்வில், சுமார் ஆயிரம் ஆண்கள் கூடியிருந்தார்கள். எல்லோரும் கேலியும், கிண்டலுமாக இருந்தார்கள். அவர்கள் கேட்ட ஒரு ஆபாசமான போஜ்புரி பாடலுக்கு நடனமாட மறுத்தார் அந்தப் பெண். அதற்காகத்தான் அவர் மிரட்டப்படுகிறார்.
ருனாலி ஆர்க்கெஸ்ட்ரா என்ற ஆடல்-பாடல் குழுவில் இடம் பெற்றுள்ள ஏழு நடனக் கலைஞர்களில் ஒருவர் முஸ்கான். சிரையா வட்டாரத்தில், துர்கா பூஜை கொண்டாட்டத்தை ஒட்டி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“நடனக் கலைஞர்களுக்கு இது மாதிரி மிரட்டல்கள் வருவது பொதுவானது,” என்று கூறும் சாதாரண்ம்," எனும் முஸ்கான் இது மாதிரி ஆடல் – பாடல் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்வுகளில் தற்போது மூன்றாண்டுகளாக பங்கேற்று வருகிறார்.
ஆனால், மிரட்டல்களைத் தொடர்ந்து பாலியல்ரீதியில் நெருங்கவும் செய்வார்கள். “இடுப்பிலே கை வைப்பார்கள், இல்லாவிட்டால் ரவிக்கைக்குள் கை நுழைக்க முயற்சி செய்வார்கள். இதெல்லாம் இங்கே ஆண்களுக்கு தினசரி செய்யும் வேலை,” என்கிறார் இன்னொரு நடனக் கலைஞர் ராதா.
பிகாரில் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்வுகள், வழக்கமாக திருவிழாக்கள், தனியார் விருந்துகள், திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்பாடு செய்யப்படும். திறமைக்கு ஏற்ப நடனக் கலைஞர்களுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை தருவார்கள். மிகத் திறமையான கலைஞர்கூட ஒரு நிகழ்வுக்கு ரூ.5,000-க்கு மேல் சம்பாதிக்க முடியாது. அதிக நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் ஆகவேண்டும் என்பதற்காக அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்க்கெஸ்ட்ரா அமைப்பாளர்களுடன் தொடர்பில் இருப்பார்கள்.
“இந்தியா, நேபாளத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் சுமார் 200 பெண்கள் சோனேபூர் மேளாவில் நடனமாடுவார்கள்,” என்று விவரிக்கிறார் முஸ்கான். பிகாரின் சாரண் மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யப்படும் சோனேபூர் மேளாவில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா அமைப்பாளரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் முஸ்கான். அது முதல் அவர் நடனக்கலைஞராக வேலை செய்து வருகிறார். படிப்படியாக அவர், நடனக் கலையில் திறமையை வளர்த்துக்கொண்டார்.
வழக்கமாக 15 முதல் 35 வயது பெண்கள் இது போன்ற நிகழ்வுகளுக்கு நடனக் கலைஞர்களாக அமர்த்தப்படுவார்கள். “சில பெண்கள் இன்னும் தங்கள் குடும்பத்தோடு தொடர்பில் இருப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ தங்கள் வீட்டுக்குப் போய் வருவார்கள். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பது அவர்களது குடும்பத்துக்குத் தெரியும். அவர்களுக்குப் பணம் வேண்டும். இந்த வேலை அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைத் தருகிறது,” என்கிறார் முஸ்கான்.
துன்புறுத்தல்களை சந்தித்தாலும், ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுவதற்கான பணம் முஸ்கானுக்கு கிடைக்கிறது. எனவே, இதில் தொடர்கிறார் அவர். 13 வயதாக இருந்தபோது கொல்கத்தாவைச் சேர்ந்த 29 வயது நபருடன் அவருக்குத் திருமணம் ஆனது. ஆனால், கொடுமைகள் நிறைந்த அந்த திருமண வாழ்க்கையில் மூன்றாண்டுகள் இருந்த பிறகு, புகுந்த வீட்டில் இருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டார் முஸ்கான்.
“ நான் ஒரு பெண்ணைப் பெற்றெடுத்தது அவருக்கு (கணவனுக்கு) பிடிக்கவில்லை. எனவே குழந்தையை விற்றுவிடவேண்டும் என்றார் அவர்,” என்று கூறும் முஸ்கான், தன்னுடைய ஒரு வயது குழந்தையோடு எப்படி பிகாருக்குச் செல்லும் ரயிலைப் பிடித்தார் என்பதை விவரிக்கிறார். சோனேபூர் மேளாவில் அவர் ஒரு வேலையைக் கண்டுபிடித்தார் .
ஆர்க்கெஸ்ட்ரா நடனக் கலைஞர்களுக்கு எதிராக கடுமையான பாகுபாடு நிலவுகிறது. அவர்களுடைய மிக அடிப்படையான தேவைகளில்கூட இந்தப் பாகுபாடு எதிரொலிக்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் முஸ்கான். “எங்களுக்கு வீடு பிடிப்பதுகூட சிரமம்,” என்கிறார் அவர். பட்னாவின் புறநகர்ப் பகுதியான திகாவில் ஒரு வாடகை வீட்டில் முஸ்கானும் அவரது மகளும் வசிக்கின்றனர். அது ஓர் இரண்டு அறை கொண்ட காங்கிரீட் வீடு. அந்த வீட்டில் அவருடன், மேலும் ஆறு ஆர்க்கெஸ்ட்ரா நடனக் கலைஞர்களும் தங்கியுள்ளனர். “இந்தப் பெண்களுடன் இங்கே தங்கியிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த இடம் மலிவானது. வாடகை, மற்ற செலவினங்களை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்,” என்கிறார் முஸ்கான்.
இந்த வேலையில் துன்புறுத்தல் இருந்தாலும், பாகுபாடு காட்டப்பட்டாலும் கொடுமைக்காரக் கணவனுடன் வாழ்வதைவிட முஸ்கானுக்கு இது பரவாயில்லை என்று இருக்கிறது. “இங்கே (ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்வில்) அவர்கள் தொட்டுவிட்டு விட்டுவிடுகிறார்கள். குறைந்தபட்சம், முந்தைய வாழ்க்கையில் நடந்தது போல, இங்கே ஒவ்வோர் இரவும் வன்புணர்வுக்கு ஆளாவதில்லை.”
ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்வுகளில் துன்புறுத்தல்களை சந்தித்திருப்பதால், தன் மகள் ஒரு நடனக் கலைஞராக வருவதை அவர் விரும்பவில்லை. படித்து அவள் ஒரு “நாகரிகமான வாழ்க்கை” வாழவேண்டும் என்கிறார் அவர். தொடக்கக் கல்வி கற்றவுடன் முஸ்கானுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.
“எங்களில் பலருக்கு அடையாள ஆவணங்கள் இல்லை,” என்கிறார் அவர். இந்த ஆவணங்கள் இல்லாமல் பள்ளியில் சேர்ப்பது சிரமம். “ஆவணம் ஏதும் இல்லாமல் அவளை எப்படிப் பள்ளிக்கு அனுப்புவது என்று தெரியவில்லை. எங்களுக்கு உதவி தேவை. ஆனால், அதை எங்கே தேடுவது என்று தெரியவில்லை,” என்கிறார் அவர்.
முஸ்கானோடு தங்கியிருக்கும் பிரியா, டூயட் (இரண்டு பேர் சேர்ந்து ஆடும் நடனம்) நடனக் கலைஞராக ஓர் ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் வேலை செய்கிறார். 16 வயதாக இருக்கும்போது தன் கணவரோடு சேர்ந்து நடனக் கலைஞராக வேலை செய்யத் தொடங்கினார் அவர்.
“என்னால் இதையே செய்துகொண்டிருக்க முடியாது,” என்கிறார் தற்போது 20 வயது ஆகும் பிரியா. தன் கணவரோடு சேர்ந்து ஒரு மளிகைக் கடை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார் அவர். “விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறோம். எங்கள் குழந்தை ஆர்க்கெஸ்ட்ரா துறையுடன் எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என்று நினைக்கிறோம்,” என்கிறார் அவர்.
இன்னொரு நடனக் கலைஞரான மனிஷா 10-ம் வகுப்பு முடித்தவுடன் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அவரது தந்தை இறந்துவிட்டார். உதவிப் பணியாளரான அவரது தாயின் சம்பளம் குடும்பத்தைக் காப்பாற்றப் போதுமானதாக இல்லை. “இது தற்காலிகம்தான். நீண்ட காலத்துக்கு இந்த நிகழ்வுகளில் நான் வேலை செய்யமாட்டேன். சிறிது காலத்துக்குப் பிறகு, போதிய பணம் சேர்ந்தவுடன், இந்த வேலையைவிட்டுத் திரும்பிச் சென்று நல்ல ஓர் ஆளுடன் திருமணம் செய்துகொள்வேன்.”
பிகாரின் சாரண் மாவட்டத்தின் சப்ரா நகரத்தில் உள்ள ஜண்டா பஜாரின் தெருக்களில் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சி அமைப்பாளர்களின் அலுவலகங்கள் வரிசையாக அமைந்துள்ளன. “ஜண்டா பஜார் முழுவதும் ஆர்க்கெஸ்ட்ரா நடனக் கலைஞர்களின் மொத்த விற்பனை சந்தை போல,” என்கிறார் ஓர் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி அமைப்பாளரான விக்கி.
“நடனக் கலைஞர்களை பெரும்பாலும் ‘கெட்ட பெண்கள்’ என்று நினைத்து துன்புறுத்துவார்கள். ஆனால், அப்படி துன்புறுத்தும் ஆண்களைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள்,” என்கிறார் நடனக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை அறிந்தவரான விக்கி. “நான் திருமணம் ஆனவன். எனக்கு ஒரு குடும்பம் உண்டு. நடனக் கலைஞர்களை நான் என் குடும்பத்தினரைப் போல நடத்துகிறேன்,” என்கிறார் அவர். பெரிய அளவிலான ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளுக்கு பாதுகாவலர்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார் விக்கி.
“ பிரைவேட் பார்ட்டி எனப்படும் தனிப்பட்ட விருந்துகளில்தான் துன்புறுத்தல்கள் அதிகம்,”என்கிறார் விக்கி. வசதியான நபர்கள்தான் இந்த பிரைவேட் பார்ட்டிகளை நடத்துகிறார்கள். “பல நேரங்களில் போலீஸ் கண்ணெதிரிலேயே நடனக் கலைஞர்கள் துன்புறுத்தப்படுவார்கள்,” என்கிறார் ராஜு என்கிற இன்னொரு நிகழ்ச்சி அமைப்பாளர்.
இந்தக் கட்டுரையில் உள்ள அனைத்துப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்