காலை 7 மணிக்கு டால்டன்கஞ்ச் நகரில் உள்ள சாதிக் மன்ஸில் சௌக் வழக்கமான பரபரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது - லாரிகள் உறுமுகின்றன, கடைகள் ஷட்டர்களை திறக்கின்றன. பதிவு செய்யப்பட்ட ஹனுமான் சாலிசாவின் ஒலி அருகிலுள்ள கோவிலில் இருந்து தொலைதூரத்திற்கு கேட்கிறது.
ஒரு கடையின் படிகளில் அமர்ந்து, ரிஷி மிஸ்ரா சிகரெட் புகைத்தபடி தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் சத்தமாக பேசுகிறார். அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் மற்றும் புதிய அரசு அமைப்பது தொடர்பாக இன்று காலை அவர்கள் கலந்துரையாடினர். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் வாதிடுவதைக் கேட்டு, தனது உள்ளங்கைகளில் புகையிலையைத் தேய்த்துக் கொண்டிருந்த நசருதீன் அகமது இறுதியாக குறுக்கிட்டு, "ஏன் விவாதம்? யார் அரசு அமைத்தாலும், நாம் வாழ உழைத்து தான் சம்பாதிக்க வேண்டும்," என்கிறார்.
'லேபர் சௌக்' என்றும் அழைக்கப்படும் பகுதியில் தினமும் காலையில் கூடும் பல தினசரி கூலித் தொழிலாளர்களில் ரிஷி மற்றும் நசருதீன் ஆகியோரும் அடங்குவர். பலாமுவைச் சுற்றியுள்ள கிராமங்களில் எந்த வேலையும் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜார்க்கண்டில் கிராம மக்கள் தினமும் காலையில் வேலை தேடி ஒன்று கூடும் இதுபோன்ற ஐந்து சௌக்குகளில் ஒன்றான சாதிக் மன்சிலில் உள்ள தொழிலாளர் சௌக்கில் (சந்திப்பு) சுமார் 25-30 தொழிலாளர்கள் தினக்கூலி வேலைக்காக காத்திருக்கின்றனர்.
"எட்டு மணி வரை காத்திருங்கள். நிற்க இடமில்லாத அளவுக்கு இங்கே நிறைய பேர் கூடுவார்கள்," என்று ரிஷி தனது மொபைல் ஃபோனில் நேரத்தை பார்த்தபடி கூறுகிறார்.
2014 ஆம் ஆண்டு ஐடிஐ பயிற்சியை முடித்த ரிஷி, துளையிடும் இயந்திரத்தை இயக்குபவர். "எங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த அரசுக்கு வாக்களித்தோம். [நரேந்திர] மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். எத்தனை காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, எத்தனை வேலைகள் வழங்கப்பட்டுள்ளன?" என்று கேட்கிறார் சிங்கிரஹா கலன் கிராமத்தைச் சேர்ந்த இந்த 28 வயது இளைஞர். “இந்த அரசு இன்னும் 5 ஆண்டுகள் நீடித்தால், எங்கள் முழு நம்பிக்கையும் போய்விடும். ”
45 வயதான நசருதீனும் அவ்வாறே உணர்கிறார். அவர் நியூரா கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார். ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒற்றை நபர். "ஏழைகள் மற்றும் விவசாயிகளைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?" என்று கேட்கிறார் நசருதீன். ”தினமும் 500 பேர் இங்கு வருகிறார்கள். 10 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும், மீதமுள்ளவர்கள் வெறுங்கையுடன் வீடு திரும்புவார்கள்."
மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தவுடன் உரையாடல் தடைபடுகிறது. அன்று வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்கள், அவரைச் சுற்றி முண்டியடித்துக் கொள்கிறார்கள். கூலியை நிர்ணயித்த பிறகு, ஒரு இளைஞர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருடன் பைக் வேகமெடுத்து செல்கிறது.
ரிஷியும் அவரது சக தொழிலாளர்களும் தங்கள் இடங்களுக்குத் திரும்புகின்றனர். " இந்த தமாஷாவை [சர்க்கஸ்] பாருங்கள். ஒருத்தன் வந்தா, எல்லாரும் குதிக்கறாங்க," என்று வேதனையுடன் புன்னகைக்கிறார் ரிஷி.
தரையில் மீண்டும் அமர்ந்தபடி அவர் சொல்கிறார், "யார் ஆட்சி அமைத்தாலும், அது ஏழைகளுக்கு பயனளிக்க வேண்டும்.விலைவாசி குறைய வேண்டும். கோவில் கட்டுவதால் ஏழைகளின் வயிறு நிரம்புமா?”
தமிழில்: சவிதா