“என்னுடைய இடது கண்ணில் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. பளீர் வெளிச்சம் கண்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது. பெரும் வலி கொடுக்கிறது. நான் இத்தகைய சவால் நிறைந்த சூழலில் இருக்க இதுதான் காரணம்,” என்கிறார் மேற்கு வங்க தெற்கு 24 பர்கனாஸின் பங்காவோன் டவுனை சேர்ந்த இல்லத்தரசியான பிரமிளா நாஸ்கர். 40 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் அவர், கொல்கத்தாவின் பார்வையியல் வட்டார நிறுவனம் நடத்தும் விழி வெண்படல நோய்க்கான வாராந்திர மையத்துக்கு வந்திருந்த இடத்தில் எங்களுடன் பேசினார்.
பிரமிளா நஸ்காரை என்னால் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு புகைப்படக் கலைஞருக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லையென்றாலும் பெரும் சிக்கல். எனக்கு இடது கண்ணில் விழி வெண்படல அல்சர் 2007ம் ஆண்டில் இருந்தது. கிட்டத்தட்ட பார்வை பறிபோகும் சூழல். நான் வெளிநாட்டில் அச்சமயத்தில் இருந்ததால் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. ஒன்றரை மாதங்களாக, சிகிச்சைக்கு பிறகு முழு பார்வை கிடைக்க பெரும் சித்ரவதை அனுபவித்தேன். எனினும் கண் சரியான பிறகு பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எனக்கு பார்வை பறிபோய் விடுமோ என்ற பயம் இருக்கிறது. பார்வை போனால் என்னை போன்ற ஒரு புகைப்படக் கலைஞருக்கு அது எத்தனை பெரிய துயரமாகும் என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொள்வேன்.
உலக சுகாதார நிறுவனத்தின்படி (WHO) உலகளவில் “குறைந்தபட்சம் 2.2 பில்லியன் மக்களுக்கு பார்வைக் கோளாறு இருக்கிறது. குறைந்தபட்சமாக 1 பில்லியன் - கிட்டத்தட்ட பாதி - பாதிப்புகளில் பார்வை பறிபோவதை தவிர்த்திருக்க முடியும்…”
உலகளவில் பார்வை பறிபோவதற்கான காரணங்களில் முதன்மையான கண்புரை நோய். அதற்கு அடுத்தபடியாக இருப்பது விழி வெண்படல நோய். விழி வெண்படல பார்வை பறிபோகும் நோயின் பரவும் தன்மை மிகவும் நுட்பமானது. பல வித எரிச்சல் மற்றும் வைரஸ் தொற்று காரணங்களால் விழி வெண்படலத்தில் பிரச்சினை ஏற்படத் தொடங்கி, இறுதியில் பார்வை பறிபோகும் நிலை ஏற்படுகிறது. கூடுதலாக, விழி வெண்படல் நோயின் பரவும் எண்ணிக்கையும் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.
2018ம் ஆண்டின் International Journal of Medical Science and Clinical Invention ஆய்வின்படி விழி வெண்படல நோயின் காரணமாக இந்தியாவில் கிட்டத்தட்ட 6.8 மில்லியன் மக்களுக்கு பார்வைத்திறன் 6/60 என்கிற அளவில் இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு இரு கண்களும் பாதிப்பு இருக்கிறது. 6/60 பார்வைத் திறன் என்றால், 60 அடியில் சாமானியரால் பார்க்கக் கூடிய ஒரு விஷயத்தை 6 அடி தூரத்தில்தான் பார்க்க முடியும் என்கிற நிலை. இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 10.6 மில்லியனை தொடும் என்றது ஆய்வு. ஆனால் சரியான தரவு கிடைக்கவில்லை.
Indian Journal of Opthalmology ஆய்வறிக்கை ஒன்று, “விழி வெண்படல நோய் இந்தியாவில் 1.2 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. அதில் 0.36 சதவிகிதத்துக்கு முழுப் பார்வை பறிபோயிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 25,000-லிருந்து 30,000 மக்கள் வரை அதிகமாகி வருகின்றனர்,” எனக் குறிப்பிடுகிறது. பார்வையியலுக்கான வட்டார அமைப்பு (RIO) கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் 1978ம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்நிறுவனம், இயக்குநராக இருக்கும் பேராசிரியர் அசிம் குமார் கோஷின் வழிகாட்டலில் நல்ல வளர்ச்சி எட்டிருக்கிறது. அங்குள்ள விழி வெண்படல நோய் மையம் வாரத்துக்கு ஒருமுறை இயங்கும். அந்த நாளில் 150 நோயாளிகள் வரை சிகிச்சை பெறுவர்.
டாக்டர் அஷிஸ் மஜும்தார் மற்றும் அவரின் உதவியாளர்களால் நடத்தப்படும் மருத்துவ மையம், தேவையில் இருப்பவர்களுக்கு உதவுகிறது. என்னுடைய பாதிப்பை குறித்து சொல்கையில் டாக்டர் ஆசிஷ், “போலி லென்ஸ் மருந்தால் உங்களுக்கு விழி வெண்படல நோய் ஏற்பட்டாலும் கூட, ‘விழி வெண்படல பார்வையற்ற நிலை’ என்பது வெண்படலத்தை பாதிக்கும் பல வகைகளை கொண்டிருக்கிறது. பார்வை பறிபோக முன்னணி காரணமாக இருப்பது பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுதான். அதே போல அழுத்தம், லென்ஸ் பயன்பாடு, ஸ்டெராய்டு மருந்து போன்றவையும் காரணங்களாக இருக்கின்றன. டரக்கோமா, காய்ந்த கண் போன்ற நோய்களும் உண்டு,” என்கிறார்.
நாற்பது வயதுகளில் இருக்கும் நிரஞ்சன் மண்டல், மருத்துவ மையத்தின் ஓரத்தில் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார். கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார். “என்னுடைய இடது கண்ணின் வெண்படலம் சேதமடைந்திருக்கிறது,” என்கிறார் அவர். “வலி போய்விட்டது. ஆனால் பார்வை இன்னும் மங்கலாக இருக்கிறது. முழுமையாக குணமாக்க முடியாது என டாக்டர் கூறியிருக்கிறார். கட்டுமான நிறுவனத்தில் நான் வேலை பார்க்கிறேன். பார்வையில்லை என்றால், நான் வேலை பார்க்க முடியாது.”
நிரஞ்சனிடம் பேசும்போது மருத்துவர் 30 வயதுகளில் இருக்கும் ஷேக் ஜகாங்கிர் என்கிற நோயாளியை திட்டுவது கேட்டது. “நான் சொன்னதையும் கேட்காமல் ஏன் சிகிச்சையை நிறுத்தினீர்கள்? 2 மாதங்களுக்கு பிறகு இங்கு வந்திருக்கிறீர்கள். சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது. உங்களின் வலது கண் இனி தெரியாது.”
அதே கவலைதான் டாக்டர் ஆசிஷின் குரலிலும் ஒலித்தது. அவர் சொல்கையில், “பல நேரங்களில் சரியான நேரத்தில் வந்திருந்தால் நோயாளியின் பார்வையை மீட்டிருக்க முடியும் என்கிற நிலையை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். விழி வெண்படல சேதத்திலிருந்து மீளுவதற்கு நாளாகும். மிகக் கடுமையான முறையும் கூட. தொடர்ச்சியை நிறுத்தி விட்டால் பார்வை பறிபோகும் நிலை ஏற்படும்,” என்கிறார்.
ஆனால் சிகிச்சையை தொடராமல் அவ்வப்போது வரும் நோயாளிகளில் நோய்களுக்குக் காரணங்களை கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கிறது. உதாரணமாக 50 வயதுகளில் இருக்கும் நாராயண் சன்யால். அவர் சொல்கையில், “நான் வசிக்கும் இடம் (கனாகுல்) தூரத்தில் ஹூக்லி மாவட்டத்தில் இருக்கிறது. உள்ளூர் மருத்துவரிடம் செல்வது எனக்கு சுலபம். அவரால் பயனில்லை எனத் தெரியும். ஆனால் என்ன செய்வது? வலியை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வேலை செய்கிறேன். நான் இங்கு வர ஒவ்வொரு முறையும் 400 ரூபாய் ஆகிறது. அந்தளவுக்கு என்னிடம் வசதி இல்லை,” என்கிறார்.
தெற்கு 24 பர்கானாஸின் பதோர்ப்ரொதிமா ஒன்றியத்தை சேர்ந்த புஷ்பராணி தேவியும் இதே போன்ற பிரச்சினைகளை சந்திக்கிறார். கடந்த 10 வருடங்களாக இரு குழந்தைகளுடன் குப்பத்தில் வசித்த அவர், வீட்டு வேலை செய்கிறார். அவர் சொல்கையில், “இடது கண் சிவந்து வருவதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளூரில் சென்றேன். பிறகு அது தீவிரமானது. வேலை பார்ப்பதை நிறுத்த வேண்டி வந்தது. பிறகு இங்கு நான் வந்தேன். இங்குள்ள மருத்துவர்கள் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். 3 மாதங்கள் தொடர்ந்த சிகிச்சைக்கு பிறகு எனக்கு பார்வை மீண்டும் கிடைத்தது. இப்போது (வெண்படல மாற்று) அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். செய்து கொண்டால் முழுப் பார்வை கிடைத்து விடும். தேதிக்காக நான் காத்திருக்கிறேன்,” என்கிறார்.
வெண்படல மாற்று அறுவை சிகிச்சையில் சேதமான விழி வெண்படலத்தை முழுமையாகவோ பகுதியாகவோ நீக்கி, தானம் அளித்தோரின் வெண்படலம் பொருத்தப்படும். இந்த அறுவை சிகிச்சையை கெரடோப்ளாஸ்டி, கார்னியல் க்ராஃப்ட் என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறார்கள். கடும் தொற்று பாதிப்பு, சேதம், பார்வை மேம்பாடு போன்றவற்றுக்கு இந்த சிகிச்சை பயன்படுகிறது. டாக்டர் ஆசிஷ், ஒரு மாதத்தில் 4 முதல் 16 விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார். நுட்பமான அந்த அறுவை சிகிச்சைக்கு 45 நிமிடங்கள் தொடங்கி 3 மணி நேரங்கள் வரை பிடிக்கும். டாக்டர் ஆசிஷ் சொல்கையில், “மாற்று அறுவை சிகிச்சை பலன் விகிதம் அதிகம். நோயாளிகள் மீண்டும் எளிதாக வேலைக்கு செல்லலாம். ஆனால் வேறொரு பிரச்சினை இருக்கிறது. விழி தானம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. குடும்பங்கள் கண் தானம் செய்ய முன் வர வேண்டும்.” விழிபடலங்கள் கிடைப்பதில் பெரும் இடைவெளி வங்காளத்திலும் இந்தியாவிலும் இருக்கிறது.
நிறுவன இயக்குநரான டாக்டர் அசிம் கோஷ் சொல்வதற்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது: “பெரும்பாலானோருக்கு விழி வெண்படல அறுவை சிகிச்சை தேவைப்படாது. முதல் அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விட வேண்டாம். உள்ளூரில் உள்ள கண் மருத்துவரை முதலில் பாருங்கள். நிறைய நோயாளிகள் எங்களிடம் வருகிறார்கள். கடைசி நேரத்தில் வந்து பார்வையைக் காப்பாற்றும்படி அவர்கள் கேட்கும்போது எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. மருத்துவர்களாக இது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது.”
மேலும் டாக்டர் கோஷ், “ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். சர்க்கரை அளவை கண்காணியுங்கள். சர்க்கரை நோய் கண் சார்ந்த சிகிச்சைகளை மிகவும் சிரமமாக்கும்,” என்கிறார்.
மருத்துவ மையத்துக்கருகே நான் அறுபது வயதுகளில் இருக்கும் அவரானி சேட்டர்ஜியை சந்தித்தேன். அவர் சந்தோஷமாக இருந்தார்: ”ஹலோ, நான் இனி இங்கு வர வேண்டியதில்லை. என் கண்கள் நன்றாக இருப்பதாக மருத்துவர் சொல்லி விட்டார். இனி என் பேத்தியுடன் நான் நேரம் கழிக்கலாம். பிடித்த டிவி சீரியலை பார்க்கலாம்.”
தமிழில்: ராஜசங்கீதன்