திருநர் சமூகத்தினருடன் இயங்கும் தொண்டு அமைப்புகளான செவன் ரெயின்போஸ் மற்றும் நம்ம ப்ரைட் ஆகிய அமைப்புகளின் ஆதரவில் இந்த அணிவகுப்பு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. “இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாம் அணிவகுப்பு இது. காவல்துறை அனுமதி ஒருநாளிலேயே கிடைத்து விட்டது. கடந்த வருடம் அனுமதி கிடைக்க இரண்டு வாரங்கள் ஆனது,” என்கிறார் பிரணதி அம்மா. சமூகத்தினரால் மதிப்புடன் அவர் அப்படித்தான் அழைக்கப்படுகிறார். செவன் ரெயின்போஸ் அமைப்பின் நிறுவனரான அவர், கடந்த 37 வருடங்களாக இந்தியா முழுவதும் பாலினம் மற்றும் பாலின அடையாளங்கள் சார்ந்த தளங்களில் இயங்கி வருகிறார்.
“காவல்துறையுடன் உரையாட நாங்கள் கற்றுக் கொண்டு வருகிறோம். எங்களை ஏற்காமல், நாங்கள் இல்லாமல் போக வேண்டுமென விரும்பும் பலர் மைசூருவில் இன்னும் இருக்கின்றனர். ஆனால் வருடந்தோறும் இந்த அணிவகுப்பை வளர்த்து இன்னும் பன்முகத்தன்மையுடன் ஆக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
ஒரு கிலோமீட்டர் நீளம் இருக்கும் அணிவகுப்பு, மும்முரமாக இயங்கும் நகரத்தின் சந்தைக்கு ஊடாக சென்றது. உள்ளூர் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்து, கொண்டாட்டம் நல்லபடியாக நடக்க உதவினர். “இச்சமூகத்தை நாங்கள் மதிக்கிறோம். எந்த கெடுதலும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுடன் நாங்கள் நடக்கிறோம். இவர்களை (திருநரை) நாங்கள் ஆதரிக்கிறோம்,” என்கிறார் துணை உதவி ஆய்வாளரான விஜயேந்திர சிங்.
“திருநங்கைகள் இந்தியாவின் நுட்பமான வெளியை நிறைத்திருக்கிறார்கள். மாயாஜால நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களுக்கு பண்பாட்டு ரீதியிலான பாதுகாப்பு கிடைத்தாலும், பாரபட்சம் காட்டப்பட்டு அவர்கள் ஒடுக்கவும் படுகிறார்கள்,” என்கிறார் பால்புதுமையராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மனநல ஆலோசகரான தீபக் தனஞ்செயன். “மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளூர் சமூகத்தினர் இயங்குகின்றனர். மனப்பாங்கை மாற்றுவது உடனடியாக நிகழாது. ஆனால் இத்தகைய அணிவகுப்புகள், சிறு நகரங்களில் கூட, வன்முறை ஏதும் நிகழாமல் நடத்தப்படுவதை பார்க்கையில் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது,” என்கிறார் அவர்.
ப்ரைட் அணிவகுப்புக்கு வந்த 31 வயது பிரியங்க் ஆஷா சுகாநந்த் சொல்கையில், “நான் பல்கலைக்கழகத்தில் ஒடுக்கப்பட்டேன். அச்சுறுத்தப்பட்டேன். எனவே என் உரிமைகளை வலியுறுத்தி அவர்களுக்கு மத்தியில் நிலை நாட்ட விரும்பினேன். நான் மற்றும் என்னைப் போன்ற ஒவ்வொருவரும் படும் துயரங்களை நினைவுறுத்ததான் ப்ரைட் அணிவகுப்பு நடக்கிறது. எனவேதான் இதில் கலந்து கொள்கிறேன்.” பெங்களூருவை சேர்ந்த கல்வியாளரும் சமையல் கலைஞருமான அவர், “மைசூரின் LGBTQ சமூகத்தினரின் மெய்யான வலிமையை பார்த்தோம். நம்பிக்கையாக இருக்கிறது,” என்கிறார்.